/indian-express-tamil/media/media_files/2025/10/16/dravidar-kazhagam-protest-puducherry-2025-10-16-19-03-43.jpg)
சுப்ரீம் கோர்ட் நீதிபதி மீதான தாக்குதலை கண்டித்து புதுச்சேரி தி.க. ஆர்ப்பாட்டம்
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தும், புதுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான காவல்துறை அத்துமீறலைக் கண்டித்தும், புதுச்சேரி திராவிடர் கழகம் சார்பில் இன்று சுதேசி மில்ஸ் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திராவிடர் கழகத்தினர் மற்றும் பொதுநல அமைப்பினர் பின்வரும் முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு நடத்தப்பட்ட நிகழ்வு, நீதித்துறையை மிரட்டும் சனாதனவாதிகளின் ஆணவத்தைக் கண்டிப்பதாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. புதுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பூட்ஸ் காலால் எட்டி உதைத்து, அத்துமீறிய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டது.
அறவழியில் போராட்டம் நடத்திய புதுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பதியப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மீதான தொடர் பாலியல் புகார்கள் மீது உடனடியாக சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரப்பட்டது. பாலியல் தொடர்பான புகார்களை விசாரிக்க, பல்கலைக்கழக மானியக்குழுவின் 2015 விதியின்படி குழு அமைத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்குப் புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ. வீரமணி தலைமை தாங்கினார். அன்பரசன் (புதுச்சேரி மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்), ராசா (புதுச்சேரி மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்), அன்பழகன் (திண்டிவனம் மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்), இளம்பரிதி (திண்டிவனம் மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்), திராவிடர் கழகத்தின் பொருளாளர் குமரேசன் கண்டனவுரை ஆற்றினார். இவருடன் புதுச்சேரிப் பொது நல அமைப்புகளின் தலைவர்கள் பலரும் திரளாகக் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.