உச்ச நீதிமன்றத்தில் மிகவும் மூத்த நீதிபதியாக இருந்த ஜஸ்தி செலமேஷ்வர் ஓய்வு பெற்றார். “இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக யார் வருவார்கள் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் தீபக் மிஷ்ராவினை தொடர்ந்து ரஞ்சன் கோகோய் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பார் என்று நான் நினைக்கவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.
அவருக்கு அளிக்கப்பட்ட டெல்லி இல்லத்திலிருந்து ஆந்திராவில் இருக்கும் அவருடைய சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்லும் போது இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிற்கு பேட்டி அளித்தார். அவருடைய பள்ளி காலங்களை இன்னும் நினைவில் வைத்திருக்கும் அவர் “மழைக்காலம் தொடங்கும் போதெல்லாம் எங்களுக்கு விடுமுறைதான். ஒன்று கூரையில் மழைத் தண்ணீர் ஒழுகும் அல்லது கூரைகளே இல்லாமல் பள்ளிக் கட்டிடங்கள் இருக்கும். சில கடினமான முடிவுகளையும் தீர்ப்புகளையும் தருவதற்கு என்னுடைய சொந்த அனுபவத்தினையே பயன்படுத்திக் கொண்டேன்” என்று நினைவு கூறுகின்றார் ஜஸ்தி.
ஓய்வு பெற்ற மூத்த நீதிபதி செல்மேஷ்வர் (புகைப்படம் - அபிநவ் சஹா, இந்தியன் எக்ஸ்பிரஸ்)
"என்னுடைய ஓய்வு காலத்தில் புத்தகங்கள் எழுதலாம் என்று தான் முடிவு செய்திருக்கின்றேன். எக்காரணம் கொண்டும் தேர்தலில் போட்டியிடவோ, கட்சியில் இணையவோ விரும்பவில்லை. தேர்தல்கள் பற்றி தெரிந்து கொள்ளுதல் மற்றும் அதைப்பற்றி கருத்து தெரிவித்தல் மட்டுமே எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது". எந்த விதமான அழுத்ததிற்கும் ஆளாகாமல் சுதந்திரமாக தீர்ப்பினை அளிப்பதில் பெயர் பெற்ற ஜஸ்தி, ”ஓய்வு நாட்களில் ஆந்திர மாநிலத்தில் எந்த ஒரு பதவியையும் ஏற்றுக் கொண்டு செயல்படவும் விரும்பவில்லை" என்றும் கூறியிருக்கின்றார்.
அவரும் அவருடன் இணைந்து பணியாற்றிய மூன்று நீதிபதிகளும் ஜனவரி 12ம் தேதி அளித்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பினைப்பற்றி பேசிய போது “ எந்தவொரு அழுத்தமும் இன்றி சுதந்திரமாக தீர்ப்பினை நீதி அமைப்புகளால் வழங்க இயலாமல் போனால் ஜனநாயகம் மரித்துவிடும். நாங்கள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பினை நிகழ்த்திய போது, சுதந்திரமான தீர்ப்புகளை வழங்குவதால் ஏற்படும் சிக்கல்கள் பற்றி மக்கள் அறிய வேண்டும் என்று விரும்பினோம். அதனால் தான் அந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ந்தது. நான் பேசியது சரியா அல்லது தவறா என்பதை இச்சமூகம் மிக விரைவில் அறிந்து கொள்ளும்”. என்றார்.
நீதிபதிகள் நியமனம் தொடர்பான வழக்கொன்றில் இவர் மட்டுமே வித்தியசமான தீர்ப்பினை தந்தவர் என்பது குறிப்பிடத்தகக்து.” 250க்கும் மேற்பட்ட நீதிபதிகள் இருந்த அந்த நீதிமன்றத்தில் எத்தனை பேருக்கு, அரசியலமைச் சட்டத்தில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் பற்றிய தீர்ப்பினை சொல்லும் வாய்ப்புகள் கிடைத்திருக்கும்? எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததை நான் பெருமையாகவே கருதுகின்றேன்” என்றார்.
ஓய்வு பெற்ற மூதத நீதிபதி செல்மேஷ்வர் - புகைப்படம் அபிநவ் சஹா, இந்தியன் எக்ஸ்பிரஸ்
உத்திரகாண்ட் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் கே.எம். ஜோசப் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி உயர்த்தப்பட வேண்டும் என்று விரும்பினேன். அவர் போன்றவர்கள் இந்நீதிமன்றத்தில் இருப்பது நீதிமன்றத்திற்கே பெருமைக்குரிய விசயம். இதைப்பற்றி செலமேஷ்வர் கூறும் போது, அவருடைய பெயரை நான் இங்கிருக்கும் கூட்டமைப்பில் பரிந்துரை செய்தேன். ஆனால் அவருக்கு அதற்கான வாய்ப்பு அச்சமயம் கிடைக்கவில்லை என்பது கொஞ்சம் வருத்தம் அளிக்கக் கூடிய ஒன்று தான்.
அரசாங்கத்திற்கும் நீதித்துறைக்கும் இடையில் நிலவி வரும் உறவானது கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கின்றது. இது குறித்து முன்பு மத்திய அமைச்சர்கள் சிலர், கடந்த ஆட்சியில் நீதித்துறையினரை எப்படி அவர்கள் நடத்தினார்கள் என்றும், தற்போது எப்படி அதை நாங்கள் மாற்றி அமைத்துவிட்டோம் என்றும் எழுதியிருந்தார்கள். இதை எப்படியாக எடுத்துக் கொள்வது என்றே புரியவில்லை எனக்கு என்று குறிப்பிட்டிருந்தார்.