குடியரசுத் தலைவர் மாளிகையை நெருங்கும் திரௌபதி முர்மு!
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜூலை 21ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25அம் தேதி பதவியேற்கிறார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது. நாடு முழுவதிலும் உள்ள எம்எல்ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் திரண்டு வந்து வாக்களித்துள்ளனர். இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்கா ஆகியோர் களத்தில் உள்ளனர்.
Advertisment
குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த நரேந்திர மோடி
வாக்குகள் ஜூலை 21ஆம் தேதி எண்ணப்பட்டு, ஜூலை 25ஆம் தேதி புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்க உள்ளார். இந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 771 எம்.பி.க்களில் காலியாகவுள்ள ஐவர் தவிர அனைவரும் வாக்களித்துள்ளனர். அதேபோல் நாடு முழுக்க எம்.எல்.ஏ.க்களில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 2 பேர் மற்றும் காலியாகவுள்ள 6 பேர் நீங்கலாக 4025 பேர் வாக்களித்துள்ளனர். எம்.எல்.ஏ.க்களை பொருத்தவரை தமிழ்நா, புதுச்சேரி, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், சிக்கிம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், இமாச்சலப் பிரதேசம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 100 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்கள் அனந்;த் குமார் சிங், மகேந்திர ஹரி தால்வி ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இருவரும் வாக்களிக்க அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல் வெளியான தகவலின் அடிப்படையில் பாஜக எம்.பி.க்கள் சன்னி தியோல், சஞ்சய் தோத்ரே, சயீத் இம்தியாஷ் (ஏஐஎம்ஐஎம்), கஜனன் கிருகர் (சிவசேனா), முகம்மது சாதிக் (காங்கிரஸ்), டிஆர் பாரிவேந்தர் (திமுக) மற்றும் ஹாஜி பஸ்லர் ரெஹ்மான் மற்றும் அதுல் குமார் சிங் (பிஎஸ்பி) ஆகியோர் வாக்களிக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
அதேபோல் ஒடிசா, ஜார்க்கண்ட், குஜராத் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கட்சியையும் தாண்டி திரௌபதி முர்முவை ஆதரித்து கட்சி மாறி வாக்களித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் அறை எண் 63இல் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். அதேபோல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முலாயம் சிங் யாதவ் உள்ளிட்டோர் வீல்சேரில் அமர்ந்துவந்தப்படி தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த முலாயம் சிங் யாதவ்
பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கிட்டத்தட்ட 48 சதவீத வாக்குகளை பெற்றிருக்கலாம். அந்தக் கட்சிக்கு பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், அதிமுக, தெலுங்கு தேசம், ஜேஎம்எம், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன. ஒட்டுமொத்தமாக 60 சதவீத வாக்குகள் முர்முவுக்கு கிடைத்திருக்கலாம். அவ்வாறு முர்மு குடியரசுத் தலைவர் ஆகும்பட்சத்தில் நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெறுவார். இந்த நிலையில் மத்திய பாஜக அரசினை கண்டித்து சிரோமணி அகாலிதளம் எம்எல்ஏ மன்பிரீத் சிங் தேர்தலை புறக்கணித்துள்ளார். குஜராத் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ கந்த்லால் ஜடேஜாவும் முர்முவை ஆதரித்துள்ளார். அதேபோல் ஓடிசா காங்கிரஸ் எம்எல்ஏ முகம்மது மோகிமும் முர்முவுக்கு வாக்களித்துள்ளார். ‘முர்மு ஒடிசாவின் மகள்’ ஆகையால் முர்முவை ஆதரித்ததாக கூறியுள்ளார். சில எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உடல் நிலை சரியில்லாதபோதும் மருத்துவமனையில் இருந்து நேரடியாக வந்து வாக்களித்துள்ளனர். கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில், மு.க. ஸ்டாலின் வாக்கு செலுத்தினார். வாக்குப்பதிவின் கடைசி நேரத்தில் கோவிட் பெருந்தொற்று பாதிப்பாளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் ஓ.பன்னீர் செல்வம் உள்பட இருவரும், திருவனந்தபுரத்தில் ஒரு எம்பியும் வாக்களித்தனர்.