போதைப் பொருள் விவகாரத்தில், பெங்களூருவில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கன்னட நடிகை ராகினி திவேதி வீட்டில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
பெங்களூருவில் தடை செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ., எல்.எஸ்.டி. போதை மாத்திரைகளை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். அவர்கள், கன்னட டிவி நடிகை அனிகா, கேரளாவைச் சேர்ந்த ரவீந்திரன், அனூப் ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஏராளமான போதை மாத்திரைகளை, பறிமுதல் செய்தனர். கைதான டிவி நடிகை அனிகாவிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு கன்னட சினிமா நடிகர், நடிகைகளுடன் தொடர்பு இருப்பதும் திரையுலகினர் நடத்தும் பார்ட்டிகளின் போது அனிகா போதை மாத்திரைகளை விற்று வந்ததும் தெரியவந்தது.இது கன்னட சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
போதை பொருள் விவகாரம் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், தேவைப்பட்டால் தனக்கு தெரிந்த தகவலை சொல்ல தயாராக இருக்கிறேன் என்றும் இந்திரஜித் லங்கேஷ் கூறி இருந்தார். இந்நிலையில் இதுபற்றி விளக்கம் அளிக்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதன்படி ஆஜரான அவர், கன்னட சினிமாவில் போதை பொருள் பயன்பாடு குறித்து தனக்கு தெரிந்த தகவல்களையும் அது தொடர்பான ஆவணங்களையும் அவர்களிடம் ஒப்படைத்தார். மேலும் அவர் கன்னட சினிமாவில் போதை பொருள் பயன்படுத்தும் 15 பேரின் பெயர் பட்டியலையும் ஒப்படைத்தார். அவர்கள் யார் யார் என்பதை அவர் சொல்ல மறுத்துவிட்டார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் ரவிசங்கர் என்ற அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார். இவர் ஜெயநகர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரிடம் நடத்திய விசாரணையில் நடிகை ராகிணியுடன் இவர் நெருக்கமாக இருந்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து இந்த வழக்கில், செப்டம்பர் 3ம் தேதி, ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ராகிணி திவிவேதிக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. ‘விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. எனது வழக்கறிஞர் போலீசாரை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். திங்கட்கிழமை ஆஜராவேன்’ என்று ராகிணி சமூக வலைதளத்தில் கூறி இருந்தார்.
மற்றொரு பதிவில், ‘போதைப்பொருள் விவகாரத்தில் போலீசார் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிப்பேன். தலைமறைவாகவில்லை. எனக்கும் போதைப்பொருள் விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், இன்று ( செப்டம்பர் 4ம் தேதி) காலை 6 மணியளவில், பெங்களூருவில் உள்ள நடிகை ராகினி திவேதி வீட்டிற்கு சென்ற மத்திய குற்றப்பிரிவு போலீசார், அங்கு சோதனையில் ஈடுபட்டுள்ள நிகழ்வு, கன்னட திரையுலகில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ராகினி கைது செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹரியானா மாநிலம் ரேவரியை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், ராகினி, பெங்களூருவில் தான் பிறந்துள்ளார்.
தமிழில் நிமிர்ந்து நில் , அறியான் உள்ளிட்ட படங்களிலும், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் அவர் நடித்து வந்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil