ஹரியானா மாநிலம் நுஹ் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் சுரங்க மாஃபியா கும்பலை பிடிக்க காவல் துணை கண்காணிப்பாளர் சுரேந்திர சிங் பிஸ்னாய் தமைமையில் போலீசார் சென்றிருந்தார்.
அப்போது சுரங்க மாஃபியா கும்பல் போலீசாரை கண்டதும் லாரி மற்றும் கார்களில் தப்பிச் செல்ல முற்பட்டனர். டிஎஸ்பி சுரேந்திர சிங் பிஸ்னாய், சக காவலர்களுடன் அந்த லாரியை தடுக்க முயன்றுள்ளார்.
இந்த நிலையில், மாஃபியா கும்பல் டிஎஸ்பி மீது லாரியை ஏற்ற வேகமாக வந்துள்ளனர். அப்போது, மற்ற காவலர்கள் அருகில் இருந்த குட்டையில் குதித்து தப்பித்துக்கொள்ள டிஎஸ்பி லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ஹரியானா காவல்துறை ட்விட்டர் பக்கத்தில், ‘ஒரு நேர்மையான துணிச்சலான அதிகாரியை இழந்துள்ளோம். குற்றவாளிகள் சட்டத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதீமன்றம் ஆரவல்லி மலைத் தொடர்கள் அமைந்துள்ள நுஹ் மாவட்டத்தில் சட்டவிரோத குவாரிகள் நடத்த தடை விதித்துள்ளது. எனினும் இந்தப் பகுதிகளில் சட்டவிரோதமாக குவாரிகள் தொடர்ந்து நடத்தப்பட்டுவருகின்றன.
நடப்பாண்டில் மட்டும் இதுதொடர்பாக 23 வழக்குகள் பதியப்பட்டு, 4.28 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், பணியின்போது உயிரிழந்த காவல் அதிகாரி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணமாக வழங்கப்படும் என்று கூறிய மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சட்டவிரோத கும்பலை கட்டுப்படுத்த பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.