scorecardresearch

அண்ணாமலை, சிவக்குமார் குடும்பத்தினர் சென்ற ஹெலிகாப்டர்கள் சோதனை; தேர்தல் ஆணையம் நடவடிக்கை

கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, கடந்த மாதம் சிக்கபல்லபுரா கோயிலுக்குச் சென்றபோது, அம்மாநில ​​முதல்வர் பசவராஜ் பொம்மையின் காரை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.

K Annamalai, DK Shivakumar, Election Commission, Karnataka congress, Karnataka Polls 2023, Karnataka Assembly, Election Commission of India, EC checks choppers with Shivakumar family, Indian Express, India news, current affairs
கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே. சிவக்குமார்

கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் இருந்து தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலாவுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாரின் குடும்பத்தினர் பலரை ஏற்றிச் சென்ற தனியார் ஹெலிகாப்டரை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை செய்தனர். சிவக்குமாரின் குடும்பத்தினர் தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோவிலில் பிரார்த்தனை செய்வதற்காக ஹெலிகாப்டரில் சென்றனர்.

ஹெலிகாப்டர் தர்மஸ்தலாவில் தரையிறங்கியதும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை நடத்துவதற்காக ஹெலிகாப்டரை அணுகினர். ஹெலிகாப்டர் இயக்கிய விமானி, சோதனை செய்ய வேண்டிய அவசியம் குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். ஹெலிகாப்டர் சொதனை தேர்தல் பணியில் இல்லை என்று தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், ஹெலிகாப்டரை ஆய்வு செய்ய அதிகாரிகள் வலியுறுத்தினர். இந்த சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டு வைரலானது.

கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த மார்ச் 29-ம் தேதி முதல் கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. தேர்தல் முறைகேடுகளைத் தடுப்பதற்காக தேர்தல் ஆணையத்தின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, அதன் அதிகாரிகள் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த மார்ச் 31-ம் தேதி, சிக்கபல்லாபுரா மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​கார்நாடக முதல்வரும், பா.ஜ.க தலைவருமான பசவராஜ் பொம்மையின் காரை தேர்தல் அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர்.

தேர்தல் நேரத்தில் தவறாக பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்கும் முயற்சியில், மார்ச் 29-ம் தேதி முதல் இதுவரை கணக்கில் வராத பணம் 253 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், தங்கம், இலவச பொருட்கள், மதுபானம் மற்றும் போதைப்பொருட்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 17-ம் தேதி, பா.ஜ.க-வின் கர்நாடக தேர்தல் பொறுப்பாளர் அண்ணாமலை உடுப்பி மற்றும் தட்சிண கன்னடா மாவட்டங்களுக்குச் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டரை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கபு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வினய் குமார் சொரகே, அண்ணாமலை தனது ஹெலிகாப்டரில் பணம் எடுத்துச் செல்வதாக குற்றம் சாட்டினார். உடுப்பி மற்றும் காப்பு தொகுதிகளில் அண்ணாமலையின் ஹெலிகாப்டர் மற்றும் தரைவழி வாகனங்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் 6 முறை சோதனை செய்யப்பட்டதாகவும் ஆனால் அவர்கள் எந்த விதிமீறலையும் கண்டறியவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்) பணியாளர்கள் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு சோதனைச் சாவடிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். இது கணக்கில் காட்டப்படாத தேர்தல் செலவினங்களுக்காக பணத்தை கடத்தும் நேர்மையற்ற சக்திகளின் முயற்சிகளை அச்சுறுத்துகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்கான முக்கிய தலைவர்களின் பட்டியலில் விமானப் பயணம் அதிகமாக இருப்பதால், தேர்தல் ஆணைய அதிகாரிகளும் ஹெலிகாப்டர்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

பில்கி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மாநில அமைச்சர் முருகேஷ் நிராணி, முதோல் காவல் நிலையப் பகுதியில் உள்ள அவரது தொழிற்சாலை ஊழியர் குடியிருப்பில் ரூ.21.45 லட்சம் மதிப்புள்ள 963 பாரம்பரிய வெள்ளி விளக்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவற்றை தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தது. வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுத்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அமைச்சர் மீது ஐ.பி.சி பிரிவு 171H-ன் கீழ் தேர்தல் தொடர்பாக சட்டவிரோத பணம் செலுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Ec checks choppers with shivakumar family annamalai within a week to curb cash via air