பிரதமர் நரேந்திர மோடி, இன்று (மார்ச்.27) திடீரென நேரலையில் பேச உள்ளதாக செய்தி வெளியான உடன் இந்தியாவே படபடத்தது. கடைசியாகப் பணமதிப்பு நீக்கத்தின்போது தான் பிரதமர் மோடி இப்படி நேரலையில் திடீரென பேசினார்.
அதே போன்று இன்று ஒரு அறிவிப்பு வெளியானதால் தேர்தல் சமயத்தில் மோடி நேரலையில் உரையாற்ற என்ன காரணமாக இருக்கும் என்று விவாதிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மூலமாக உரையாடிய பிரதமர் மோடி, 'மிஷன் சக்தி' சாதனை குறித்து பேசினார். அவர், "இந்தியா புதிய விண்வெளி சாதனையைப் படைத்துள்ளது. அதில் ’மிஷன் சக்தி’ ஆப்பரேஷன் என்பது மிகக் கடினமானப் பணியாக இருந்தது. ஆனால், இன்று ஏவப்பட்ட 3 நிமிடங்களில் ‘மிஷன் சக்தி’ புதிய சாதனை படைத்துள்ளது.
இன்று நம்மிடம் பல்வேறு துறைகளுக்கும் தேவையான விண்வெளி செயற்கைக்கோள்கள் உள்ளன. விவசாயம், பேரிடர் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், வானிலை என எல்லாவற்றுக்கும் செயற்கைகோள்கள் உள்ளன.
இன்று ஏவப்பட்ட எதிர்ப்பு செயற்கைக்கோள் ஆயுதமான A-SAT, வட்டக் குறுக்களவு கொண்ட கோளப்பாதையில் வெற்றிகரமாக சென்றது. இந்தியாவின் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றமாக ‘மிஷன் சக்தி’ ஆப்பரேஷன் அமைந்துள்ளது. இதுவரையில் சர்வதேச அளவில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே இச்சாதனையைச் செய்துள்ளன. இச்சாதனையைப் படைத்த 4ம் நாடு இந்தியா என்று" பெருமையாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையடுத்து, "இந்தியாவின் இந்த சாதனை குறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் உரிய முறையில் அறிவித்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக பிரதமர் நரேந்திர மோடி இதனை அறிவித்துள்ளார். அவர் இதனை பயன்படுத்திக்கொண்டார்.
தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், அதன் பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரதமரே வேட்பாளராக உள்ள நிலையில், இதுபோன்ற அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இது நடத்தை விதிமுறைகளை மீறிய செயலாகும். இந்த அறிவிப்பு குறித்து தேர்தல் ஆணையத்திற்கு முன்னரே தெரிவிக்கப்பட்டுவிட்டதா? அப்படி தெரிவிக்கப்பட்டுவிட்டது என்றால், அவர்கள் எப்படி பிரதமருக்கு அதை அறிவிக்க ஒப்புதல் வழங்கலாம்?" என்று எதிர்க்கட்சிகள் பிரதமரின் உரை குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில், பிரதமர் மோடியின் உரை குறித்து உள் ஆலோசனை நடத்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, பிரதமர் மோடியின் உரையாற்றிய பிரதியை நகலெடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். தவிர, அந்த உரையில் உள்ளவற்றை கவனமாக ஆய்வு செய்யவும், நாளை (மார்ச்.28) மற்றொரு குழு மூலம் மறு ஆய்வு செய்யவும் தெரிவித்திருக்கிறார்.
தேர்தல் ஆணையம், இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு அளித்துள்ள தகவலில், பிரதமருடைய உரையின் தோற்றத்தை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்யும். அது பிரதமர் அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டதா அல்லது பாதுகாப்புத் துறை தயாரித்துக் கொடுத்ததா என்பதையும் ஆய்வு செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.