டெல்லி சட்டப்பேரவையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யுமாறு தேர்தல் ஆணையம், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பரிந்துரை செய்துள்ளது. இதனால், டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக பதவியேற்றபோது, ஆம் ஆத்மியை சேர்ந்த நரேஷ் யாதவ், சோம் தத், பிரவீன் குமார், நிதின் தியாகி உள்ளிட்ட 20 எம்.எல்.ஏ.க்கள் நாடாளுமன்ற செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
நாடாளுமன்ற செயலாளர் பொறுப்பு துணை முதலமைச்சருக்கு இணையான பதவியாகும். இந்நிலையில், எம்.எல்.ஏவாக இருக்கும் அதே நேரத்தில் தங்களுக்கு ஆதாயம் தரும் வகையில் நாடாளுமன்ற செயலாளர் பதவியை ஏற்றதாக 20 எம்.எல்.ஏ.க்கள் மீது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்தது.
இந்நிலையில், 20 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்யுமாறு தேர்தக் ஆணையமானது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பரிந்துரை செய்துள்ளது.
தேர்தல் ஆணையம் முன் 20 எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த பரிந்துரைக்கு தடை விதிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடுவதே ஆம் ஆத்மி கட்சிக்கு உள்ள வாய்ப்பாகும்.
எனினும், 70 தொகுதிகள் உள்ள டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மிக்கு 67 உறுப்பினர்கள் உள்ளனர். அதனால், 20 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், அக்கட்சி பெரும்பான்மையை தக்க வைக்கும்.
ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் நாகேந்திர சர்மாவின் ட்விட்டர் பதிவு:
எம்.எல்.ஏ., எம்.பி. உள்ளிட்ட பதவிகளை வகிப்பவர்கள் இரட்டை ஆதாயம் பெறும் வகையில் வேறொரு பதவியை வகிக்கக்கூடாது. அப்படி வகிப்பவர்களின் பதவி தகுதி நீக்கம் செய்யப்படுவர்.