தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டம் : மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தேர்தலுக்கான ஆயத்தப்ப்ணிகளில் தேசியக் கட்சிகளும், அதன் தலைவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது தேர்தல் ஆணையம்.
நேற்று (27/08/2018) அக்கூட்டம் டெல்லியில், தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தலைமையில் நடைபெற்றது. ஒவ்வொரு கட்சி சார்பாகவும் பிரதிநிதிகள் அதில் பங்கு கொண்டார்கள். 7 தேசிய கட்சிகள் மற்றும் 51 மாநில கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து திமுக, அதிமுக, தேமுதிக, மற்றும் பாமக கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
நேற்று நடந்த முக்கிய ஆலோசனைகள் என்னென்ன?
வாக்காளர் பட்டியலைத் தேர்வு செய்வது , வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிப்பது, தேர்தலில் பங்கேற்கும் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு உச்சவரம்பு, தேர்தல் செலவுகளை கணிசமாக குறைப்பது போன்ற பல்வேறு முக்கிய விசயங்கள் பற்றி ஆலோசனைகள் நேற்று நடைபெற்றது.
வாக்குச்சீட்டு முறை
இந்த கூட்டத்தில் பங்கு கொண்ட முக்கியக் கட்சிகளின் பிரதிநிதிகள் மத்தியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகம் இருந்தது. ஆகவே மீண்டும் வாக்குச்சீட்டு முறையினை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்தது. அதற்கு அக்கூட்டத்தில் பங்கேற்ற 70% கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர்.
அதிமுக சார்பில் கலந்து கொண்ட பிரதிநிதி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, பெரும்வாரியான கட்சிகளின் முடிவிற்கு அதிமுக ஒத்துழைப்பு தரும் என்று கூறினார். வாக்குச்சீட்டு முறைக்கு ஆதரவினையோ, மின்னணு வாக்குப்பதிவு முறைக்கு எதிர்ப்பினையோ அவர் பதிவு செய்யவில்லை.
ஒரே நேரத்தில் தேர்தல்
மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே சட்டமன்ற தேர்தல்கள் வர இருக்கின்றன. ஆனால் சில கட்சிகள் மாநில மற்றும் பொதுத் தேர்தல்களை ஒரே நேரத்தில் வைத்தால் நன்றாக இருக்கும் என்று விருப்பம் தெரிவித்தார்கள்.
முக்கியமாக அதிமுக, சமாஜ்வாடி, தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி, சிரோமணி அகாலிதளம் போன்ற கட்சிகள் இந்த நடைமுறைக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தெலுங்கு தேசம், மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தேர்தல் ஆணையத்தின் பதில்
மீண்டும் வாக்குச்சீட்டு முறையினை அமல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. ஆனாலும் பெரும்வாரியான கட்சியினரின் கருத்துகள் கவனத்தில் கொள்ளப்படுகிறது. வாக்குச்சீட்டு முறையினை மீண்டும் அமல்படுத்தும் பட்சத்தில் வாக்குச்சாவடியினை கைப்பற்றும் நிலை ஏற்படலாம். அதனால் அதற்கு வாய்ப்பே இல்லை. மின்னணு வாக்கு எந்திரத்தில் ஏற்படும் பிழைகள் நீக்கப்பட்டு இந்த எந்திரவாக்குப்பதிவு முறையின் நம்பகத்தன்மையை உறுதி செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.