நாடாளுமன்றத்தில் அருண் ஜெட்லி தாக்கல் செய்துள்ள பொருளாராதார ஆய்வறிக்கையில் பொருளாதார ரீதியாக வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் இன்று தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்க நாளான இன்று 2018-19ம் நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இதில், 2018-19ம் நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7 முதல் 7.5 சதவிகிதம் என்ற அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஓராண்டில் அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகளின் இரட்டிப்பு பயனாக இந்திய நாட்டின் உள்நாட்டு உற்பத்தி கடந்தாண்டைவிட அதிமாகி 6.75 சதவிகிதத்தை எட்டியுள்ளதாக அருண் ஜெட்லி குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், உலகளவில் பொருளாதார ரீதியாக வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விவசாயம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆகியவற்றிலும் உரிய நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகவும், கடந்த 6 ஆண்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் கடந்த ஆண்டில் மிகக்குறைவான பணவீக்கம் இருந்துள்ளதாக அருண் ஜெட்லி தாக்கல் செய்த ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
வரும் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் இருப்பதாக அறிவிக்கப்பட்டு, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் பிப்ரவரி 1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.