சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேல், 2,161 கோடி ரூபாய் மதுபான மோசடி வழக்கில் பணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்க இயக்குநரகத்தால் (ED) வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
ஆங்கிலத்தில் படிக்க:
பின்னர் அவர் ராய்ப்பூரில் உள்ள சிறப்பு பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஐந்து நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்கப்பட்டார்.
அமலாக்கத்துறையின் கூற்றுப்படி, இந்த மோசடியில் மூத்த அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் கலால் துறை அதிகாரிகள் அடங்கிய ஒரு சிண்டிகேட் ஈடுபட்டுள்ளது. இவர்கள் ஒரு "இணை" கலால் துறையை நடத்தி வந்ததாகவும், இதன் மூலம் மதுபானம் பொதுமக்களுக்கு விற்கப்பட்டதாகவும், ஆனால், மாநில கருவூலத்திற்கு பணம் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அரசுக்கு சுமார் 2,161 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இது 2019 மற்றும் 2022-க்கு இடையில், பூபேஷ் பாகேல் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தின் போது சத்தீஸ்கரில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில், துர்க் மாவட்டத்தில் உள்ள பிலாய் நகரில் உள்ள பகேல் இல்லத்தில் அமலாக்கத்துறை தேடுதல் வேட்டையைத் தொடங்கியது. மதியம் சுமார் 12 மணியளவில், அமலாக்கத்துறை சைதன்யாவை கைது செய்தது.
ஊடகங்களிடம் பேசிய சைதன்யாவின் வழக்கறிஞர் பைசல் ரிஸ்வி, "இந்த விவகாரம் 2022 முதல் நடந்து வருகிறது. முதல் குற்றப்பத்திரிகை (அமலாக்கத்துறையால் தாக்கல் செய்யப்பட்டது) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து மேலும் மூன்று கூடுதல் குற்றப்பத்திரிகைகள் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால், அவற்றில் சைதன்யாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை அல்லது அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை" என்று கூறினார்.
அமலாக்கத்துறை சைதன்யாவை விசாரணைக்கு அழைக்கவில்லை என்றும் அவர் கூறினார். "பப்பு பன்சல் (லக்ஷ்மிநாராயண் பன்சல்) என்ற ஒரு நபர் மீது இந்த ஆண்டு மே 16 அன்று சிறப்பு நீதிமன்றத்தால் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதன் பிறகு, பப்பு பன்சல் ஒரு வாக்குமூலம் அளித்தார், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், சைதன்யா தனது பிறந்தநாளில் வீட்டில் பூஜை செய்து கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்"
அமலாக்கத்துறை வழக்கறிஞர் சௌரப் குமார் பாண்டே, "மதுபான கொள்க்மை முறைகேடில் நாங்கள் தொடர்ந்து ஆதாரங்களைச் சேகரித்து வந்தோம், மேலும் சைதன்யா பாகேல் நிறைய பணத்தையும் குற்றச் செயல்களையும் மறைத்துள்ளதற்கான சில ஆதாரங்களை நாங்கள் கண்டறிந்தோம்" என்று கூறினார். மதுபான கொள்கை முறைகேடு "சிண்டிகேட்" சுமார் 1,000 கோடி ரூபாய் குற்றச் செயல்களை பணமாற்ற சைதன்யா உதவியதாகவும், அவர் தானே 13 கோடி ரூபாய் பெற்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை நடவடிக்கை, அதானி குழுமத்தால் மாநிலத்தின் ராய்கர் மாவட்டத்தின் தம்னார் தாலுகாவில் ஒரு நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்காக மரங்கள் வெட்டப்படுவது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்புவதைத் தடுக்கும் முயற்சி என்று பூபேஷ் பாகேல் கூறினார்.
சைதன்யாவின் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாகேல் உட்பட அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் வெள்ளிக்கிழமை காலை சட்டமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்தனர். "பாகேலை துன்புறுத்த அமலாக்கத்துறை அழுத்தம் கொடுக்கும் விதம்... அதைப் பற்றி பேசுவது முக்கியம். அவர்கள் சைதன்யாவை கைது செய்துள்ளனர். நாங்கள் இதை எதிர்க்கிறோம், மேலும் நடவடிக்கைகளைப் புறக்கணிக்கிறோம்" என்று எதிர்க்கட்சித் தலைவர் சரண் தாஸ் மகந்த் அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் சட்டமன்றத்தை விட்டு வெளியேறியபோது கூறினார்.
முன்னதாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் பாகேலின் பிலாய் இல்லத்திற்குள் நுழைந்த உடனேயே, சைதன்யாவும் வசிக்கும் இடத்திலிருந்து, அவரது அலுவலகம் எக்ஸ் பக்கத்தில் இந்தியில் ஒரு பதிவை இட்டது: "அமலாக்கத்துறை வந்துவிட்டது. இன்று சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாள். அதானிக்கு தம்னாரில் மரங்கள் வெட்டப்படுவது குறித்து இன்று கேள்வி எழுப்பப்பட இருந்தது. பிலாய் நிவாஸில், சாகிப் அமலாக்கத்துறையை அனுப்பியுள்ளார்."
பின்னர் தனது இல்லத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பாகேல், "தங்கள் எஜமானரை மகிழ்விக்க, மோடியும் அமித்ஷாவும் என் வீட்டிற்கு அமலாக்கத்துறையை அனுப்பியுள்ளனர். நாங்கள் பயப்படவும் மாட்டோம், தலைவணங்கவும் மாட்டோம். இதை எதிர்த்துப் போராடுவோம். அவர்கள் எவ்வளவு அழுத்தம் வேண்டுமானாலும் கொடுக்கலாம், ஆனால் பூபேஷ் பாகேல் பயப்படவும் மாட்டார், தலைவணங்கவும் மாட்டார்."
"ஒருபுறம், பீகாரில், தேர்தல் ஆணையத்தின் உதவியுடன், வாக்காளர்கள் நீக்கப்படுகிறார்கள் (வாக்காளர் பட்டியலில் இருந்து), ஜனநாயகம் பறிக்கப்படுகிறது. மறுபுறம், எதிர்க்கட்சித் தலைவர்களை அடக்க அமலாக்கத்துறை, ஐ-டி, சி.பி.ஐ மற்றும் டி.ஆர்.ஐ ஆகியவற்றை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், நம் நாட்டின் மக்கள் இப்போது நன்கு அறிந்திருக்கிறார்கள். அமலாக்கத்துறை கடந்த காலத்திலும் வந்து எனது இடத்தில் சோதனை நடத்தி என் வீட்டில் 33 லட்சம் ரூபாய் கண்டெடுத்தது. இப்போது மீண்டும் வந்துள்ளனர். இதன் பொருள் என்ன? அவர்கள் எங்களை நம்பினாலும் நம்பாவிட்டாலும் நாங்கள் முழுமையாக ஒத்துழைப்போம்; நாங்கள் ஜனநாயகம் மற்றும் நீதித்துறையில் நம்பிக்கை வைத்துள்ளோம். அவர்கள் (பா.ஜ.க) இந்த அமைப்பை துஷ்பிரயோகம் செய்கிறார்கள், ஆனால் நாங்கள் அவர்களுடன் ஒத்துழைப்போம்," என்று பாகேல் கூறினார்.
தனது மகன் பிறந்தநாளுடன் அமலாக்கத்துறை சோதனைகளின் நேரத்தையும் அவர் கேள்வி எழுப்பினார். எக்ஸ் பக்கத்தில் இந்தியில் ஒரு பதிவில், பாகேல், "மோடியும் ஷாஜியும் கொடுக்கும் பிறந்தநாள் பரிசு போல, உலகில் எந்த ஜனநாயகத்திலும் யாரும் கொடுக்க முடியாது. என் பிறந்தநாளில், இரண்டு மிகவும் மரியாதைக்குரிய தலைவர்கள் எனது ஆலோசகர் மற்றும் இரண்டு ஓஎஸ்டிகளின் வீடுகளுக்கு அமலாக்கத்துறையை அனுப்பினர். இப்போது, என் மகன் சைதன்யாவின் பிறந்தநாளில், ஒரு அமலாக்கத்துறை குழு என் வீட்டில் சோதனை நடத்துகிறது. இந்த பரிசுகளுக்கு நன்றி. அவை வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்."