ஜெட் ஏர்வேஸ் (இந்தியா) லிமிடெட் மீதான பணமோசடி வழக்கு விசாரணை தொடர்பாக 538.05 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்க இயக்குனரகம் (ED) தற்காலிகமாக முடக்கியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: ED attaches assets worth Rs 538 crore of Jet Airways, Naresh Goyal family in PMLA case
விசாரணை அமைப்பான அமலாக்கத்துறை அறிக்கையின்படி, லண்டன், துபாய் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா கோயல் மற்றும் மகன் நிவான் கோயல், ஜெட் ஏர் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜெட் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் உட்பட பல்வேறு நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயரில் உள்ள 17 குடியிருப்புகள்/ பங்களாக்கள் மற்றும் வணிக வளாகங்கள் முடக்கப்பட்டுள்ளன.
விமான நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்ட கடனைப் பணமோசடி செய்ததாகக் கூறி, செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்ட நரேஷ் கோயலுக்கு எதிராக அமலாக்கத்துறை தனது குற்றப்பத்திரிக்கையை செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2022 நவம்பரில் கனரா வங்கி அளித்த புகாரின் பேரில் சி.பி.ஐ தாக்கல் செய்த எஃப்.ஐ.ஆர் அடிப்படையில், விமான நிறுவனத்தின் செயல்பாட்டுப் பணிக்காக வழங்கப்பட்ட கடன் தொகையை தனிப்பட்ட செலவுகளுக்கு பயன்படுத்தியதாக அமலாக்கத்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வங்கியின் புகார் 2011-2019 க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் வெளிப்புற தணிக்கை நிறுவனத்தின் தடயவியல் தணிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. கனரா வங்கி கடன் 2019 இல் செயல்படாத சொத்தாக (NPA) அறிவிக்கப்பட்ட நிலையில், 538 கோடி ரூபாய் கடன் தொகையானது, திருப்பி அனுப்பப்பட்ட மற்றும் ஏமாற்றப்பட்ட குற்றத்தின் வருமானமே தவிர வேறில்லை என்று அமலாக்கத்துறை கூறுகிறது. வங்கிகளின் கூட்டமைப்பு ஜெட் ஏர்வேஸ் (இந்தியா) லிமிடெட் அதன் செயல்பாட்டு பணிக்காக கடன்களை வழங்கியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“