பிரபல சர்வதேச ஊடகமான பி.பி.சியின் இந்திய பிரிவு மீது அமலாக்கத் துறை இயக்குனரகம் (ED) அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. நிறுவனம் வெளிநாட்டு நிதி பெற்றதில் முறைகேடு நடந்ததாக குற்றங்சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டது என்றும், இதுவரை பிபிசி இந்தியாவின் இயக்குனர் ஒருவர் உள்பட 6 ஊழியர்களிடம் விசாரணை நடத்தி உள்ளதாக இ.டி அதிகாரிகள் தெரிவித்தனர். அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்ட விதிகளின் கீழ் நிறுவனத்தின் முக்கிய ஆவணங்கள், பதிவுகள் சோதனை செய்யப்படுகிறது. மேலும் விசாரணை இன்னும் நடந்து வருகிறது என்று கூறினார்.
கடந்த பிப்ரவரி மாதம் வருமான வரித் துறை பிபிசியின் டெல்லி மற்றும் மும்பை அலுவலங்களில் ஆய்வு செய்தது. ஐ.டி சட்டத்தின் பிரிவு 133A இன் கீழ் வருமான வரித் துறை இந்த சோதனையை செய்தது. இது பொதுவாக பறிமுதல் நடவடிக்கையின் முன்னோடியாகும். இது வணிக வளாகத்தில் மட்டுமே நடைபெறும். ஆனால் பிபிசி அலுவலகத்தில் நடைபெற்றது. கணக்கு புத்தகங்கள், வங்கி கணக்குகள், பணப் பரிவர்த்தனை தொடர்பாக இதில் ஆய்வு மேற்கொள்ளப்படும். பிபிசி இந்தியா மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக பி.பி.சி நிறுவனம் இந்தியாவில் நடைபெற்ற குஜராத் கலவரம் தொடர்பாக 2 பகுதி ஆவணப்படம் வெளியிட்டது. இந்தியா மோடி கேள்விகள் என்ற தலைப்பில் ஆவணப்படம் வெளியிடப்பட்டது.
குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் அது தொடர்பாக ஏற்பட்ட கலவரம் குறித்து ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது. இந்த ஆவணப்படத்தில் அப்போது குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு கலவரத்தை கட்டுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. இந்த ஆவணப்படத்திற்கு மத்திய பா.ஜ.க அரசு கடும் விமர்சனம் செய்தது. சமூக வலைதளங்களில் இந்த ஆவணப்படம் தொடர்பாக லிங்க்குளை முடக்கியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிபிசி இந்தியா மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“