காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வத்ரா சொந்தமான வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அவரிடம் விசாரணை நடத்தினர்.
நிதி முறைகேடு புகார்களுக்கு உள்ளாகியுள்ள ராபர்ட் வத்ரா, முதல்முறையாக டெல்லியில் அமலாக்கத்துறை விசாரணை அதிகாரிகள் முன் நேற்று ஆஜரானார். அப்போது, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ராபர்ட் வத்ராவுக்குச் சொந்தமான 2 வீடுகள், 6 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது குறித்தும், அவற்றை வாங்குவதற்கான நிதி எவ்வாறு வந்தது என்பது குறித்தும் அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.
ராபர்ட் வத்ரா சொத்து விவகாரம் : அமலாக்கத்துறை விசாரணை
அமலாக்கத்துறை துணை இயக்குநர் ராஜிவ் ஷர்மா தலைமையில் 7 பேர் கொண்ட அதிகாரிகள், ராபர்ட் வத்ராவிடம் 40 கேள்விகளைக் கேட்டனர். இந்த விசாரணை குறித்து கருத்து தெரிவித்துள்ள ராபர்ட் வத்ராவின் மனைவியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வத்ரா, அமலாக்கத்துறை விசாரணையை ராபர்ட் வத்ரா எதிர்கொள்வார் என்றும், அவருக்கு உறுதுணையாக தாம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
விசாரணை முடிந்த பின்னர், வர்தவின் வழக்கறிஞர் சுமர் கைத்தான் கூறுகையில், “அனைத்து கேள்விகளுக்கும் அவர் பதிலளித்திருக்கிறார். அவர் மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். இந்த விசாரணைக்கும் 100% ஒத்துழைப்பு அளிப்போம்” என்றார்.

இந்த வழக்கு விசாரணையில், லண்டனில் உள்ள சொத்துக்களை ஆயுதம் வியாபாரி சஞ்ஜய் பந்தாரி தொடர்பு மூலம் வாங்கப்பட்டதாக அமலாக்கத்துறை கூறி வருகிறது. மேலும் நேற்று நடைபெற்ற விசாரணையில், இது குறித்து சில ஆவணங்களை காட்டியும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முன்னதாக நீதிமன்றத்தில் முறையீடு செய்த அமலாக்கத்துறை, லண்டனில் உள்ள பிரையன்ஸ்டன் சதுக்கத்தில் உள்ள ஒரு சொத்து நிறுவனம் பந்தாரியின் பணத்தில் வாங்கியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பணம், வார்ட்க்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் வந்துள்ளதாகவும் கூறியுள்ளது.

இவ்வாறு பந்தாரியுடன் வத்ரா கொண்டிருக்கும் தொடர்பு மற்றும் சொத்துக்கள் வாங்கப்பட்ட விவரங்கள் குறித்தும் அமலாக்கத்துறை கேள்வி எழுப்பியது. இந்நிலையில், வத்ராவை இன்று மீண்டும் விசாரணை செய்யவுள்ளனர்.