ED Raid in Byju CEO Raveendran house : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கல்வி தொழில்நுட்ப நிறுவனமான பைஜூஸ் நிறுவனத்தின் அந்நியச் செலாவணி மீறல்கள் தொடர்பாக, அமலாக்க இயக்குனரகம் (ED) சனிக்கிழமை (ஏப்.29) சோதனை நடத்தியது.
இந்நிறுவனம் 2011 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டில் இருந்து நேரடி முதலீட்டாக (எஃப்டிஐ) பெற்ற ரூ.28,000 கோடியில் ரூ.9,700 கோடிக்கு மேல் வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சோதனை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரவீந்திரனின் வீடு மற்றும் பைஜூவின் தாய் நிறுவனமான திங்க் அண்ட் லேர்ன் பிரைவேட் லிமிடெட் அலுவலக வளாகம் உட்பட பெங்களூரில் உள்ள மூன்று இடங்களில் நடைபெற்றது.
இது தொடர்பாக அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பைஜூ நிறுவனம், 2011 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் ரூ. 28,000 கோடி (தோராயமாக) அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றுள்ளது.
மேலும், நிறுவனம் ரூ.9,754 கோடியை (தோராயமாக) அனுப்பியுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அதிகார வரம்பிற்கு அனுப்பப்பட்ட தொகை உட்பட விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல் செலவுகள் என்ற பெயரில் நிறுவனம் சுமார் ரூ.944 கோடியை பதிவு செய்துள்ளது.
இதற்கிடையில், 2020-21 நிதியாண்டிலிருந்து நிறுவனம் அதன் நிதிநிலை அறிக்கைகளைத் தயாரிக்கவில்லை மற்றும் கணக்குகளைத் தணிக்கை செய்யவில்லை.
எனவே, நிறுவனம் வழங்கிய புள்ளிவிவரங்களின் உண்மைத்தன்மை வங்கிகளிடம் இருந்து குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது” என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுடன் இந்திய சந்தையில் நுழைந்துள்ள நிறுவனம், இன்னும் லாபத்தை பதிவு செய்யவில்லை. சமீபத்தில், பல ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
பைஜூஸ் நிறுவனம் 2020-21ல் ரூ.4,588 கோடி நஷ்டத்தை பதிவு செய்துள்ளது, இது 2019-20ல் பதிவு செய்த ரூ.231.69 கோடியை விட 19 மடங்கு அதிகம் ஆகும்.
இந்த நிலையில், 2020-21 நிதியாண்டில் ரூ.2,511 கோடியாக இருந்த வருவாய் ரூ.2,428 கோடியாகக் குறைந்தது. FY22க்கான நிதி செயல்திறன் அறிக்கையை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“