காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு நாளிதழின் பங்குகள் விற்பனை தொடர்பான பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், எம்.பி ராகுல் காந்தியும் ஜூன் 8 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்க இயக்குனரகம் (ED) புதன்கிழமை சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த முறைக்கேடு தொடர்பாக 2013 ஆம் ஆண்டு பாஜக எம்.பி. சுப்பிரமணியசுவாமி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது, காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக ஐடி துறையினர் விசாரணை நடத்திட வழிவகுத்தது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையின் வெளியீட்டாளரான அலோசியேட் ஜர்னல் நிறுவனத்தின் பங்குகளை யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றிய விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், காந்தி குடும்பம் 86 சதவீத பங்குகளை கைப்பற்றியதாகவும் குற்றச்சாட்டப்பட்டது. வரி ஏய்ப்பு புகாரும் நிதி அமைச்சரிடம் சுவாமியால் வழங்கப்பட்டது.
அசோசியேட்டட் ஜர்னல் நிறுவன பங்குகளை வெறும் ரூ.50 லட்சத்துக்கு யங் இந்தியா நிறுவனத்திற்கு விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது, காங்கிரஸுக்கு ஏஜேஎல் செலுத்த வேண்டிய 90.25 கோடி ரூபாயை வசூலிக்கும் உரிமை யங் இந்தியா நிறுவனத்திற்கு பெற வழிவகுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2010 நவம்பரில் ரூ.50 லட்சம் மூலதனத்துடன் இணைக்கப்பட்ட யங் இந்தியா நிறுவனம், ஏஜேஎல் நிறுவனத்தின் கிட்டத்தட்ட அனைத்துப் பங்குகளையும் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை கூற்றுப்படி, ராகுல் காந்திக்கு யங் இந்தியா நிறுவனத்தில் உள்ள பங்குகளின் மதிப்பு ரூ. 154 கோடியாக இருக்கும் என்றும், முன்பு மதிப்பிடப்பட்டதைப் போல ரூ. 68 லட்சமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே காங்கிரஸ் தலைவர்கள் பவன்குமார் பன்சால் உள்ளிட்டோரை விசாரித்த நிலையில், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil