கர்நாடகாவில் உடுப்பியில் உள்ள கல்லூரியில் பயிலும் 17 வயது மாணவி ஒருவர், ஹிஜாப்பை கழற்றிவிட்டு, செய்முறை தேர்வை எழுதிய நிகழ்வை நினைவுக்கூர்ந்தார். மாண்டியாவில் உள்ள மற்றொரு மாணவியின் தந்தை கூறுகையில், கல்வியும், மதமும் தங்கள் இரண்டு கண்கள் போன்றவை. எங்களுக்கு இரண்டும் வேண்டும் என்றார். இறுதியாண்டு பயிலும் மாணவி ஒருவர், ஹிஜாப் தடையால் தனது எம்பிஏ படிப்புக்கான திட்டத்தை கைவிட நேரலாம் என்றார்.
ஹிஜாப் அணிய அரசு விதித்த தடை செல்லும் என கர்நாடகா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த அதே நாளில், மாணவிகளும், குடும்பத்தினரும் கூறுகையில், ஹிஜாப் தங்களுக்கு கல்வி மற்றும் சமூக கட்டாயமாகும். ஆனால் தற்போது ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்றனர்.
20 வயதான ஆயிஷா இம்தியாஸ் கூறுகையில், "உயர் நீதிமன்றம் ஹிஜாப் தடையை உறுதிசெய்தால், கல்லூரி படிப்பை கைவிட வேண்டுமா என கடந்த ஒரு மாத காலமாக யோசித்து ஏறக்குறைய முடிவு செய்து வைத்திருந்தேன். தற்போது நீதிமன்ற தீர்ப்பு முடிவை உறுதிப்படுத்தியுள்ளது. கல்வியை விட, மதத்தை தான் தேர்ந்தெடுப்பேன் என நீங்கள் நினைப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் தான் அந்தத் முடிவை எடுக்க வற்புறுத்தினீர்கள்" என்றார்.
உடுப்பியின் பிரீமியர் மகாத்மா காந்தி மெமோரியல் (எம்ஜிஎம்) கல்லூரியில், பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் வகுப்பறையில் ஹிஜாப்பை கழற்ற மாட்டோம் என பிடிவாதமாக இருந்த ஆறு இறுதியாண்டு மாணவர்களில் ஆயிஷாவும் ஒருவர் ஆவர்.
கடந்த ஒரு மாத காலமாக ஹிஜாப் விவகாரம் விஷ்வரூபம் எடுத்த நிலையில், நீதிமன்ற தீர்ப்புக்காக பல தரப்பினும் காத்திருந்தனர்.
உடுப்பி எம்.எல்.ஏ ரகுபதி பட் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், கடந்த ஒரு மாதமாக தனது தொகுதியில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் தான் வகுப்பையும், தேர்வையும் புறக்கணித்துள்ளனர். உடுப்பியில் பெண்களுக்கான அரசுப் பல்கலைக்கழகக் கல்லூரியில் பயிலும் 75 முஸ்லீம் மாணவர்களில், ஹிஜாப் சர்ச்சைக்காக நீதிமன்றத்தை நாடிய 6 மாணவிகள் உட்பட 16 பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். மற்றவர்கள், வழக்கம்போல் வகுப்பறைக்கு சென்றனர்" என்றார்.
ஹிஜாபை கழற்றிவிட்டு வகுப்பறைக்கு திரும்பிய முதுகலை மாணவி சனா அகமது கூறுகையில், "ஒரு மாத வகுப்பையும், சில இன்டர்னல் தேர்வுகளையும் தவறவிட்டேன். முதலில், நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருந்தேன். ஆனால், எனது பெற்றோர் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதில் பலனில்லை. எவ்வாறாயினும், நீதிமன்றம் நமக்கு சாதமாக தீர்ப்பளிக்காது. உனது வாழ்க்கையை ஏன் வீணடித்துக்கொள்கிறாய் என கூறியதாக தெரிவித்தார்.
நீதிமன்ற தீர்ப்பு குறித்து அவர் கூறுகையில், “நீதிமன்றங்கள் மட்டுமே ஒரே நம்பிக்கையாக இருந்தது. எங்களுக்கு எதிராக தீர்ப்பு வரலாம் என்று மக்கள் கூறியபோதும், எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் இதற்குப் பிறகு, நீதிமன்றங்களிடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் எங்கள் வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து முன்னேற வேண்டும்.இருப்பினும், அடுத்து என்ன செய்வது என்று முடிவு செய்யாத பலர் உள்ளனர்" என்றார்.
MGM இல் 11 ஆம் வகுப்பு பயிலும் அறிவியல் மாணவியான லிஃபா மெஹெக், பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நான்கு இன்டர்னல் தேர்வுகளையும், சுமார் ஒன்பது நாட்கள் வகுப்பையும் தவறவிட்டுள்ளார். இருப்பினும், இறுதி ஆய்வகத் தேர்வில் பங்கேற்க முடிவு செய்து கல்லூரிக்கு விஜயம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " எங்களில் மூன்று அல்லது நான்கு பேர் ஹிஜாப்களைக் கழற்றிவிட்டு தேர்வெழுதினோம். சங்கடமாக இருந்தது. எல்லோரும் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். முடிந்தவரை வேகமாக தேர்வெழுதி, யாரிடமும் பேசாமல் கிளம்பிவிட்டேன். கல்லூரியில் சிறப்பு வகுப்புகள் உள்ளன. நாங்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். எனது வகுப்பில் இருந்து சுமார் எட்டு பேர் கலந்து கொள்ளவில்லை. தற்போது இறுதித் தேர்வுகள் வரவிருக்கின்றன, நான் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியவில்லை. நீதிமன்றத் தீர்ப்பால், விரக்தியடைந்துள்ளேன். நான் என்ன சொல்வது? நான் எல்லா நம்பிக்கையையும் இழந்துவிட்டேன்" என்றார்.
மாண்டியாவில் பிஇஎஸ் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு பிகாம் மாணவரான முஸ்கானின் தந்தை முகமது ஹுசைன் கான் கூறுகையில், "என் மகள் வகுப்புகளுக்குச் செல்லவில்லை. ஆனால் அவளுக்கு தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்குகின்றன. நான் எங்கள் சமூகத்தில் உள்ள பெரியவர்களிடமும், கல்லூரி முதல்வரிடம் பேசுவேன் . கல்வியும் மதமும் எங்கள் இரு கண்கள் போன்றது, எங்களுக்கு இரண்டும் வேண்டும் என்றார்.
உடுப்பியின் குந்தாபுராவில் உள்ள பண்டார்கர்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டப்படிப்பு பிரிவின் முதல்வர் என் பி நாராயண ஷெட்டி கூறுகையில், 69 முஸ்லிம் பெண்களில் 20 பேர் மட்டுமே செய்முறை தேர்வில் பங்கேற்றனர். ஆனால், தற்போது நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, நாங்கள் அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
படிப்பை நிறுத்த முடிவு செய்திருக்கும் இறுதியாண்டு மாணவி ஆயிஷா கூறுகையில், " நான் ஒரு மாதமாக பல வகுப்புகளை தவறிவிட்டாலும், எனது நண்பர்களுடன் தொடர்ந்து கலந்துரையாடி வகுப்புக்கான நோட்ஸ்களையும், கல்லூரியில் கற்றுத்தரும் விஷயங்களையும் தெரிந்துக்கொண்டிருந்தேன். தற்போது எல்லாம் முடிவுக்கு வந்துள்ளன. மறுபரிசீலனை செய்வதற்கு சிறிய இடம் உள்ளது. இவ்விவகாரத்தில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து காத்திருக்க விரும்பவில்லை. அதன் பின்னால், ஓடிக்கொண்டே இருக்க முடியும்.
முதலில் எம்பிஏ படிக்கலாம் என திட்டமிட்டிருந்தேன். தற்போது, அப்பாவின் பிஸ்னஸில் சேர்ந்து பணியாற்றவுள்ளேன். என்னை ஹிஜாப்பை கழற்றும்படியும், அணிந்துக்கொள்ளும் படியும் பெற்றோர்கள் கட்டாயப்படுத்தவில்லை. என் முடிவில் என்னை விட்டுவிட்டார்கள் என்றார்.
நீதிமன்ற தீர்ப்புக்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) வின் மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (சிஎஃப்ஐ), இந்த வழக்கில் ஆறு மனுதாரர்களுக்கு ஆதரவாக உள்ளது. அவர்கள் கூறுகையில், சுமார் 11,000 முஸ்லிம் மாணவிகள் வகுப்புகளில் கலந்துகொள்வது குறித்து முடிவெடுக்கும் முன், நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருந்தனர் என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.