Egg seller's cart allegedly overturned by civic officials in Indore : கொரோனா காலத்தில் சிறு மற்றும் பெரிய வணிகங்கள் பெரும் அளவு பாதிப்படைந்துள்ளது. மத்திய அரசு தளர்வுகளுக்கு பிறகு மக்கள் நடமாட்டம் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வந்துள்ளது. ஆனாலும் இரண்டு மாத ஊரடங்கால் பாதிப்பிற்கு உள்ளான மக்கள் தங்களால் இயன்ற வேலையை செய்ய ஆரம்பித்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் முட்டை விற்பனைக்காக தள்ளு வண்டியில் முட்டை வாங்கி வந்து கொண்டிருந்த சிறுவனுக்கு நிகழ்ந்த அநீதியை பாருங்கள்.
இந்தூரில் சாலை ஓரத்தில் தள்ளு வண்டி ஒன்றை வைத்து முட்டைகளை விற்றுக் கொண்டிருந்தான் 14 வயது சிறுவன். அந்த சிறுவனிடம் மாநகராட்சி அதிகாரிகள் ரூ. 100 லஞ்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் தன்னிடம் பணம் ஏதும் இல்லை. வியாபாரம் ஏதும் நடக்காத காரணத்தால் பணம் இல்லை என்று கூறியுள்ளார். ஆனாலும் அதிகாரிகள் தொடர்ந்து அந்த சிறுவனை அச்சுறுத்தினர். பணம் தரவில்லை என்றால் இனி கடை நடத்த முடியாது என்றும் எச்சரிக்கை செய்துள்ளனர்.
மேலும் படிக்க : ”ஆன்லைன் வகுப்புக்கு ஸ்மார்ட்போன் வேணும்ப்பா” – வருமானம் தரும் பசுவை விற்ற தந்தை!
வியாபாரம் மிகவும் குறைவாகவே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் என்னிடம் பணம் கேட்டால் நான் என்ன செய்வது என்று கேட்டுள்ளான் சிறுவன். இதனால் ஆத்திரமடைந்த அதிகாரிகள் அப்படியே சிறுவனின் தள்ளுவண்டியை கீழே தள்ளிவிட்டனர். அனைத்து முட்டைகளும் சாலையில் விழுந்து நொறுங்கி போனது. மனம் உடைந்த அந்த 14 வயது சிறுவன் அதிகாரிகளை, அழும் குரலில், வசை பாடிய நிகழ்வு மனதை உலுக்குவதாக அமைந்துள்ளது. இந்த நிகழ்விற்கு பலரும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil