Esha Roy
மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு வரைவு கொள்கையால், நாட்டின் எண்ணற்ற இயற்கை வளங்கள் அடியோடு அழிக்கப்படும். தொழிலதிபர்கள் எவ்வித அனுமதியின்றியும் விதிமீறல்களில் ஈடுபட இந்த கொள்கை வழிவகுக்கிறது உள்ளிட்ட காரணங்களால், இந்த புதிய வரைவு கொள்கைக்கு தேசிய அளவில் பெரும்எதிர்ப்பு எழுந்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு வரைவு கொள்கை - மக்கள் கருத்துக்கேட்பு காலக்கெடு இன்றுடன் நிறைவு
சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு வரைவு 2020 குறித்த மக்கள் கருத்துக்கேட்புக்கான காலக்கெடு ( ஆகஸ்ட் 11) முடிவடைய உள்ள நிலையில், டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்ததாவது, இந்த புதிய கொள்கை தொடர்பாக எழுந்துள்ள எதிர்ப்புகள், இந்த வரைவு அறிக்கை இறுதிச்சட்டமாக அமல்படுத்துவதற்கு முன் விவாதிக்கப்படும். தங்களது அமைச்சகத்துக்கு இதுவரை 4 முதல் 5 லட்சம் கோரிக்கைகள் வந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, இந்த வரைவு கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தியுள்ளன. இந்த கோரிக்கைகளை, 50 முக்கிய காரணிகளின் அடிப்படையில் பரிசீலித்து இறுதி முடிவு எடுக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த வரைவு அறிக்கை மார்ச் மாதத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி தொழிலதிபர்கள், இங்குள்ள இயற்கை வளங்களை சுரண்டி, அவர்களுக்கு மட்டுமே நன்மை பயக்கும் விதத்தில் இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இயற்கை வளங்களை அழிப்பதற்கு ஈடாக மத்திய அரசிற்கு அபராதம் செலுத்தினால் போதும் என்ற நிலையை இந்த கொள்கை கொண்டுள்ளதாக, சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த மத்திய சுற்றுச்சூழல் துறை செயலாளர் ஆர் கே குப்தா அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, விதிமுறை மீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உண்மையில்லை. முறையான சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகே எந்தவொரு செயலையும் செய்ய இயலும். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே நாங்கள் செயல்பட்டு வருகிறோம். திருட்டில் ஈடுபடுவனுக்கு மரண தண்டனை அளித்துவிட முடியாது என்பதை அனைவரும் அறிந்திருப்பர்ர. விதிமீறல்கள் இங்கு அங்கீகரிக்கப்பட்டதில்லை. சுற்றுச்சூழல் அனுமதி பெறாததற்கு எல்லாம் அபராதம் விதிக்க முடியாது, அவர்கள் மாசுபடுத்தும் நிகழ்வுக்கு மட்டுமே அபராதம் விதிக்க முடியும்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கூடுதல் செயாளர் ரவி அகர்வால் தெரிவித்துள்ளதாவது, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சககம் முதல்முறையாக,தான் மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள், அதன் செயல்திட்டங்கள், சட்டதிருத்தங்கள், அதனோடு தொடர்புடைய விவகாரங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் மக்களின் பார்வைக்கு வழங்கியுள்ளது.
இந்த வரைவு கொள்கைக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் ஜாவ்டேகர் தெரிவித்துள்ளதாவது, இது வரைவு அறிக்கை மட்டுமே, இது ஒன்றும் இறுதி செய்யப்பட்ட சட்டம் அல்ல. ஒரு வரைவு திட்டத்தை 60 நாட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருந்தால் போதும், ஆனால், கொரோனா தொற்றுபரவல் காரணமாக, நாங்கள் இதை 150 நாட்களுக்கு முன்பே வைத்துவிட்டோம். இந்த வரைவு கொள்கை தொடர்பாக வந்துள்ள அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலிப்போம். இந்த வரைவு கொள்கையில், மக்களின் பங்களிப்பு இல்லாமல் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்று அவர் தெரிவித்தார்.
இந்த புதிய வரைவு கொள்கையின்படி, சுற்றுச்சூழலுக்கு குறிப்பிட்ட திட்டம் அதிக பாதிப்பு ஏற்படுத்துகையில், அந்த திட்டம் முடக்கப்படும். ஆனால், தரம் மட்டுப்படுத்தப்படமாட்டாது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு கிரேடு அடிப்படையில், நாள் ஒன்றுக்கு ரூ . 5 ஆயிரம் ஏ பிரிவு நிறுவனங்களுக்கும், நாள் ஒன்றுக்கு ரூ .2 ஆயிரம் பி1 பிரிவு நிறுவனங்களுக்கும், ரூ .ஆயிரம் பி2 பிரிவு நிறுவனங்களுக்கும் அபராதமாக விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 வரைவு அறிக்கை தொழில் தொடங்கியதற்குப் பிறகு சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற வழிவகுக்கிறது. கடந்த மே மாதம் விசாகப்பட்டினத்தில் விஷவாயு விபத்து நடந்த பாலிமர் தொழிற்சாலை சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் தொடங்கப்பட்டதுதான். தொழில்கள் தொடங்கிய பிறகு சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பிப்பது அதிகரித்திருக்கிறது. 2020 அறிவிக்கையானது அதைச் சட்டரீதியாக அனுமதிக்கிறது. அபராதம் மட்டும் செலுத்திவிட்டால் போதும்.
2006 அறிவிக்கையின்படி ‘ஏ’ வகையைச் சேர்ந்த தொழிற்சாலைகளுக்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் கமிட்டியும், ‘பி’ வகையைச் சேர்ந்த தொழிற்சாலைகளுக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவும் அனுமதி அளிக்க வழிவகுக்கப்பட்டது. 2020 அறிவிக்கையின்படி இவற்றோடு ‘பி’ வகையை ‘பி1’, ‘பி2’ என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது; ‘பி2’வுக்குச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடும் பொதுமக்கள் கருத்து கேட்பும் தேவையில்லை. இந்த ‘பி2’ பிரிவுக்குக் கீழ் கிட்டத்தட்ட 50 தொழில்கள் வருகின்றன.
இந்த வரைவு அறிக்கையில், 40 விதமான புதிய தொழிற்சாலைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு. உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து, நிலக்கரி, மற்றும் நிலக்கரி அல்லாத மினரல்கள் தோண்டியெடுப்பு உள்ளிட்ட பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஏ பிரிவு நிறுவனங்கள் மட்டுமே சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை பெற வேண்டும். பி1 மற்றும் 2 நிறுவனங்கள், அப்ரைசல் குழுவின் அனுமதியை மட்டும் பெற்றால் போதும். இப்பிரிவு நிறுவனங்கள், அமைச்சகத்தின் இணையதளம் மூலமாகவே அனுமதிக்கு விண்ணப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2006ம் ஆண்டு சட்டத்தின்படி ஆறு மாதங்களுக்கு ஒருமுறை திட்டம் குறித்த விபரங்கள் அப்டேட் செய்யப்பட்டு வந்த நிலையில், அது தற்போது ஆண்டுக்கு ஒருமுறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அப்போதும் தகவல்கள் அப்டேட் செய்யாதபட்சத்தில் அதற்கும் தனியாக அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசாகப்பட்டினம் வாயு கசிவு. திப்ருகர் எண்ணெய் கசிவு, போபால் விஷவாயுத் தாக்குதல், பாலிமர் விஷவாயுத் தாக்குதல், நெய்வேலி பாய்லர் வெடிப்பு இதெல்லாம் வளாகத்துக்குள் நடப்பவை. இரண்டாவது, அந்தத் தொழிலால் காற்று எவ்வளவு மாசுபடுகிறது, நிலத்தடிநீர் எப்படி பாதிக்கப்படுகிறது, குடிநீர் எப்படி பாதிக்கப்படுகிறது என வளாகத்துக்கு வெளியே நிகழும் பாதிப்புகள். இது எப்போதும் கணக்கில்கொள்ளப்படுவதே இல்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளது.
20 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேற்பட்ட இடத்தில் தொழிற்சாலை துவங்க வேண்டும் எனில், சுற்றுச் சூழல் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
புதிய சுற்றுச் சூழல் திட்டங்கள், மத்திய பாதுகாப்புத்துறை திட்டங்களோடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், திட்டம் குறித்த அனைத்து விசயங்களையும் பொதுவெளியில் வைக்கமுடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.