உத்தவ் தாக்கரே தலைமையிலான அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே அணி, சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பெயரையும், அக்கட்சியின் ‘வில் அம்பு’ சின்னத்தையும் தக்க வைத்துக் கொள்ள தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் முடியும் வரை உத்தவ் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட ‘சுடர் ஜோதி’ தேர்தல் சின்னத்தை வைத்திருக்க தேர்தல் அமைப்பு அனுமதி அளித்துள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்றத் தொகுதிகளான கஸ்பா பெத் மற்றும் சின்ச்வாட் ஆகிய இரு தொகுதிகளுக்கு பிப்ரவரி 26-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் 78 பக்க உத்தரவில், சிவசேனாவின் தற்போதைய கட்சி விதிமுறை ‘ஜனநாயக விரோதமானது’ என்று தேர்தல் ஆணையம் கருதியுள்ளது. “தேர்தல் எதுவுமின்றி ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர்களை ஜனநாயக விரோதமாக அலுவலகப் பொறுப்பாளர்களாக நியமித்து சிதைக்கப்பட்டுள்ளது. இத்தகைய கட்சி கட்டமைப்புகள் நம்பிக்கையை ஏற்படுத்தத் தவறிவிடுகின்றன” என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
அரசியல் கட்சிகளின் அரசியலமைப்புகள், “அலுவலகப் பதவிகளுக்கு சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல்களை வழங்க வேண்டும். உள்கட்சிப் பூசல்களைத் தீர்ப்பதற்கு மேலும் சுதந்திரமான மற்றும் நியாயமான நடைமுறையை வழங்க வேண்டும்” என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இந்த முடிவு “பாலாசாகேப் தாக்கரேவின் சித்தாந்தத்தின்” வெற்றி என்று கூறிய மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, “இன்று உண்மை வெற்றி பெற்றுள்ளது” என்று கூறினார்.
“இது ஜனநாயகத்தின் வெற்றி. இந்த நாடு அரசியலமைப்பின் அடிப்படையில் இயங்குகிறது. சட்டம் மற்றும் அரசியல் சாசனப்படி நாங்கள் ஆட்சி அமைத்தோம். இது பெரும்பான்மையின் வெற்றி. இது ஹிந்து ஹ்ரிதய் சாம்ராட் பாலாசாகேப் தாக்கரேவின் சிந்தனைகளுக்கு கிடைத்த வெற்றி” என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
மகாராஷ்டிரா துணை முதல்வரும் பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறுகையில், “ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாதான் உண்மையான சிவசேனா என்று முதல் நாளிலிருந்தே கூறி வருகிறோம். சிவசேனா சித்தாந்தத்தின் கட்சி, குடும்ப கட்சிஅல்ல. இது தற்போது நிரூபணமாகியுள்ளது” என்றார்.
இதற்கிடையில், உத்தவ் தாக்கரே அணியில் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய எம்.பி சஞ்சய் ராவத், இந்த முடிவை நீதிமன்றத்தில் எதிர்ப்போம் என்று கூறினார். “நாங்கள் இப்போது மக்கள் நீதிமன்றத்திற்கு செல்வோம். சட்டப் போராட்டத்திலும் ஈடுபடுவோம். உண்மையான சிவசேனாவை மீண்டும் களத்தில் இருந்து எழுப்புவோம்” என்று கூறினார்.
என்.சி.பி தலைவர் சுப்ரியா சுலே கூறுகையில், “தேர்தல் ஆணையம் போன்ற ஒரு தன்னாட்சி அமைப்பின் முடிவால் நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம். பாலாசாகேப் தாக்கரே உத்தவ் தாக்கரேவை தனது வாரிசாக நியமித்தார் என்பது அனைவரும் அறிந்தது” என்று கூறினார்.
இரு தரப்பினரும் ‘உண்மையான சிவசேனா’வாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஒருவருக்கொருவர் சண்டையிட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுக்கு எதிராக கிளர்ச்சியைத் தொடங்கிய பின்னர், ஏக்நாத் ஷிண்டே கட்சியின் மீது உரிமை கோரினார். அதன் பிரிவுகளை உண்மையான சிவசேனா என்று ஒப்புக்கொண்டு கட்சியின் தேர்தல் சின்னத்தை ஒதுக்குமாறு வேண்டுகோளுடன் தேர்தல் ஆணையத்தை அணுகினார்.
தேர்தல் ஆணையம், கடந்த ஆண்டு அக்டோபரில், சின்னம் மற்றும் கட்சியின் பெயரை முடக்கி, இரு பிரிவினருக்கும் புதிய இடைக்கால பெயர்கள் மற்றும் சின்னங்களை ஒதுக்கியது. சிவசேனா கட்சி மற்றும் அமைப்புப் பிரிவின் தொண்டர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடமிருந்து தங்களுக்கு உள்ள ஆதரவின் விவரங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.