Schedule for assembly elections to 5 states : உ.பி., உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்பது தொடர்பான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை இன்னும் சற்று நேரத்தில் வெளியிட உள்ளது தலைமை தேர்தல் ஆணையம்.
கடந்த இரண்டு நாட்களில் 1 லட்சம் வரை கொரோனா தொற்றுகள் நாடு முழுவதும் பதிவாகி வருகின்ற நிலையில் இந்த தேர்தல் குறித்த அறிவிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு தேர்தல் பிரச்சாரம், கூட்டங்கள் மற்றும் தேர்தலையே ஒத்திவைப்பது குறித்து பிரதமர் சிந்திக்க வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உ.பி. தேர்தல், பிரச்சாரங்களை நிறுத்துவது தொடர்பாக யோசிக்கவும் – மோடிக்கு நீதிபதி வேண்டுகோள்
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு இன்று மாலையில் இருந்து இந்த ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும். உத்தரபிரதேச சட்டசபையின் பதவிக்காலம் மார்ச் 15-ம் தேதி முடிவடையும் நிலையில், பஞ்சாப் சட்டசபையின் பதவிக்காலம் மார்ச் 27-ம் தேதியும், மணிப்பூர் மார்ச் 19-ம் தேதியும், கோவா மார்ச் 15-ம் தேதியும், உத்தரகாண்ட் மார்ச் 23-ம் தேதியும் நிறைவடைகிறது.
மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளிடம் ஏற்கனவே, மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தும் படி அறிவுறுத்துமாறு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. மணிப்பூரில் முதலாம் டோஸை செலுத்திக் கொண்ட மக்களின் எண்ணிக்கையே மிகவும் குறைவாக இருப்பது கவலைக்குரிய ஒன்றாக சுட்டிக் காட்டப்பட்டது.
செய்தியாளர்கள் சந்திப்பில் ஆணையர் சுஷில் சந்திரா
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். 18.34 கோடி மக்கள் இந்த தேர்தல்களில் வாக்களிக்க உள்ளனர். ”பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 5ம் தேதி அன்று 5 மாநிலங்களுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 5 மாநிலங்களில் 11 லட்சம் பெண் வாக்காளர்கள் முதன்முறையாக வாக்களிக்க உள்ளனர்.கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு ஒவ்வொரு சாவடியிலும் ஒரே நேரத்தில் 1000க்கும் குறைவானவர்களே வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.” என்று சுஷில் சந்திரா கூறினார்.
தேர்தல் எப்போது?
போதுமான வாக்கு இயந்திரங்களும் விவிபேட் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு வாக்களிக்கும் நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படுகிறது. உத்தர பிரதேசம் மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல்கள் நடைபெறுகிறது. மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மற்ற மாநிலங்களில் ஒரே நாளில் (14/02/2022 ) தேர்தல்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேசம் மாநில தேர்தல்கள்
முதல் கட்ட தேர்தல் – 10/02/2022
முசாஃபர்நகர், நொய்டா, ஷாம்லி, அலிகர், மதுரா மற்றும் ஆக்ரா தொகுதிகளில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல்கள் நடைபெறும். முதல் கட்ட தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்ய 21.01.2022 கடைசி நாளாகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 24.01.2022 அன்று நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற 27.01.2022 கடைசி நாளாகும்.
இரண்டாம் கட்ட தேர்தல் – 14/02/2022
மூன்றாம் கட்ட தேர்தல் – 20/02/2022
நான்காம் கட்ட தேர்தல் – 23/02/2022
ஐந்தாம் கட்ட தேர்தல் – 27/02/2022
ஆறாம் கட்ட தேர்தல் – 03/03/2022
ஏழாம் கட்ட தேர்தல் – 07/03/2022

மணிப்பூர் சட்டமன்ற தேர்தல் 2022
முதல் கட்ட தேர்தல் 27/02/2022
மணிப்பூர் முதல் கட்ட தேர்தல் வேட்புமனுவை தாக்கல் செய்ய 08/02/2022 கடைசி நாளாகும். 09/02/2022 அன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெற பிப்ரவரி மாதம் 11ம் தேதி இறுதி நாளாகும்.
இரண்டாம் கட்ட தேர்தல் 03/03/2022
இரண்டாம் கட்ட தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய 11/02/2022 கடைசி நாளாகும். 14/02/2022 அன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை வேட்பாளர்கள் திரும்பப் பெற கடைசி நாள் பிப்ரவரி 16ம் தேதி இறுதி நாளாகும்.

10ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்
பிப்ரவரி 14ம் தேதி அன்று ஒரே கட்டமாக பஞ்சாப், கோவா, மற்றும் உத்தரகாண்ட் தேர்தல்கள் நடைபெறுறது. 7 கட்டங்களாக உ.பி. தேர்தல்கள் நடைபெறுகிறது. மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல்கள் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் தாக்கல் செய்ய கடைசி நாள் 28/01/2022. வேட்புமனுக்கள் 29/01/2022 அன்று பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் 31/01/2022 ஆகும். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகள், பஞ்சாபில் உள்ள 117 தொகுதிகள் மற்றும் கோவாவில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே நாளில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil