ஊடகங்களுக்கு கட்டுப்பாடு பிரச்னை: தேர்தல் ஆணையத்தில் பிளவு

Election Commission divided: One EC objects to panel asking court for gag order on media: தேர்தல் ஆணையர்களில் ஒருவர், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் எஸ்.எல்.பி ஆகியவற்றில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தின் உள்ளடக்கங்களை கடுமையாக எதிர்த்தார்.

கோவிட் -19 தொற்றுநோயின் இரண்டாவது அலைகளின் போது தேர்தல்களை நடத்தியதில் தேர்தல் ஆணையத்தின் பங்கு குறித்து மெட்ராஸ் உயர்நீதிமன்றம் தணிக்கை செய்ததற்கு, தேர்தல் ஆணையம் இரண்டு விதமாக பதிலளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளின் வாய்மொழி கருத்துக்களான “கொலைக் குற்றச்சாட்டு” கருத்துக்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை அதனை ஊடகங்கள் வெளியிடுவதை தடை செய்யுமாறு தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் அளித்த மனு மற்றும் அதன் பின்னர் உச்சநீதிமன்றத்தில் அளித்த சிறப்பு விடுப்பு மனு (எஸ்.எல்.பி) ஆகியவற்றை இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்திருக்கிறது.

இந்நிலையில் தேர்தல் ஆணையர்களில் ஒருவர், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் எஸ்.எல்.பி ஆகியவற்றில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தின் உள்ளடக்கங்களை கடுமையாக எதிர்த்தார்.

அவர் ஊடகங்கள் அந்த கருத்துக்களை வெளியிடுவதற்கு தடை விதிப்பதற்கு எதிராக அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அவரது கருத்து, விதிகளை மீறியுள்ளதாக தற்போது தேர்தல் ஆணையத்திற்குள் உள்ள பல அதிகாரிகளால் விவாதிக்கப்பட்டு வருகிறது.

தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோரா ஏப்ரல் 12 ம் தேதி  ஓய்வு பெற்ற பின்னர், சுஷீல் சந்திரா தலைமைத் தேர்தல் ஆணையராகவும், ராஜீவ் குமார் தேர்தல் ஆணையராகவும் உள்ளனர். மூன்று பேர் கொண்ட ஆணையத்தில் மூன்றாவது இடம் தற்போது காலியாக உள்ளது.

அஸ்ஸாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் மாநிலக் கட்சிகளை கையாள்வதில் தேர்தல் கண்காணிப்புக் குழு கடுமை காட்டியது. அதிலும் குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸுடன். மத்திய அரசுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஏப்ரல் 26 அன்று, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்களின் போது அரசியல் கட்சிகள் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாமல் மீறியபோது “அரசியல் கட்சிகளைத் தடுக்கவில்லை” என்று தேர்தல் ஆணையத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தது. நம்முடைய தற்போதைய தொற்று நெருக்கடிக்கு ஒரே காரணமான தேர்தல் ஆணையத்தின் மீது கொலை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருந்தனர்.

திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள், கொரோனா பரவல் காரணமாக, தேர்தல் பிரச்சாரங்களை ரத்து செய்ய வேண்டும் அல்லது தேர்தல் பிரச்சாரத்திற்கு வழங்கப்பட்ட தேதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் மனுக்கள் அளித்திருந்த போதும், பிரதமர் நரேந்திர மோடி அடுத்த நாள் அங்கு திட்டமிடப்பட்ட நான்கு பேரணிகளை ரத்து செய்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, ஏப்ரல் 22 ஆம் தேதி தாமதமாக தேர்தல் ஆணையம் பிரச்சாரத்திற்கு தடை விதித்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தணிக்கைக்குப் பின்னர், மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நாள் அன்று, அனைத்து வேட்பாளர்களும் அவர்களின் முகவர்களும் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் மற்றும் வெற்றி ஊர்வலங்களுக்கு தடை போன்ற தடுப்பு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

எவ்வாறாயினும், தேர்தல் ஆணையம் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்குச் சென்றது, நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அல்லது தீர்ப்புகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது வாய்மொழியாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அல்லது உத்தரவுகள் போன்றவற்றை  ஊடகங்கள் வெளியிடுவதை தடை செய்ய வேண்டும். மேலும் அந்த கருத்துக்கள் பாரபட்சமானது என்றும் கேட்டுக் கொண்டது. ஆனால் உயர்நீதிமன்றம் இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளவில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்துக்களுக்கு எதிராக கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் முறையிட்டது. இது “தேவையற்ற, அப்பட்டமாக இழிவுபடுத்துதல் மற்றும் அவமதிக்கும் தன்மை” என்றும் ஒரு சுதந்திரமான அரசியலமைப்பு அதிகாரமாக இருக்கும் உயர்நீதிமன்றம், “எந்தவொரு அடிப்படையுமின்றி மற்றொரு சுதந்திரமான அரசியலமைப்பு அதிகாரத்தின் மீது (தேர்தல் ஆணையம்) கடுமையான கொலைக் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது, இரு அமைப்புகளிடையே தூண்டுதலாக உள்ளது, என்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

ஒரு விசாரணையின் போது நீதிபதிகள் கூறிய வாய்மொழி கருத்துக்கள் “நீதிமன்றத்தின் பார்வைகளாக” இருக்கும் பட்சத்தில், இது “மாண்புமிகு நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அதிகாரத்தை குறைத்து மதிப்பிடுத்துவதாக உள்ளது என்றும், நீதிமன்றம் நீதித்துறை உரிமையின் எல்லைகளை மீறுகிறது. என்றும் தேர்தல் ஆணையம் அதன் சிறப்பு மனுவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரத்தை திங்கள்கிழமை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்குகளை விசாரிக்கும் போது நீதிபதிகள் மேற்கொண்ட அவதானிப்புகள் “பொது தளத்தில்” இருப்பதாகவும், ஊடகங்கள் அவற்றைப் புகாரளிப்பதை நிறுத்த முடியாது என்றும் கூறினார்.

நீதிபதி எம்.ஆர்.ஷா குறிப்பிடுகையில், “பொதுத் தளத்தில் சில நேரங்களில் ஏதாவது கவனிக்கப்படும். அவர்களும் (நீதிபதிகள்) மனிதர்கள்தான். சில நேரங்களில் அவர்கள் விரக்தியடைந்து, கோபப்படுகிறார்கள். ” தேர்தல் ஆணையம் “சரியான மனப்பான்மையில்” முடிவு எடுக்குமாறு கேட்டுக் கொண்ட அவர், “இந்த கருத்துக்களுக்குப் பிறகு உங்கள் அடுத்தடுத்த முடிவுகள், முக்கியமானது” என்று கூறினார்.

இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வியாழக்கிழமை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2019 மக்களவைத் தேர்தலின் போது, ​​பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக முன்னாள் தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு தேர்தல் நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டில் தேர்தல் ஆணையம் அவர்களுக்கு நற்சான்றிதழ் அளித்தற்கு, தேர்தல் ஆணையர் அசோக் லாவாசா எதிர்த்தபோது, ​​தேர்தல் ஆணையத்திற்குள் கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

தேர்தலுக்குப் பிறகு, லாவாசா குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், அவரது மனைவி உட்பட, வருமான வரித் துறையின் கீழ் வருமானம் அறிவிக்கப்படவில்லை மற்றும் சொத்துக்கள் மதிப்பிடவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானார்கள்.

அவரது மகன் அபிர் லாவாசாவின் இயற்கை ஊட்டசத்து நிறுவனம் மற்றும் குழந்தை மருத்துவரான லாவாசாவின் சகோதரி சகுந்தலா லாவாசா ஆகியோருக்கும் வருமான வரி நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. வருமானவரித் துறையின் குற்றச்சாட்டுகளை குடும்ப உறுப்பினர்கள் மறுத்தனர். ஆசிய அபிவிருத்தி வங்கியில் அதன் துணைத் தலைவர்களில் ஒருவராக சேருவதற்காக லாவாசா கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்தல் ஆணையத்திலிருந்து விலகினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Election commission divided one ec objects to panel asking court for gag order on media

Next Story
ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் நிகழ்வது இனப் படுகொலைக்கு சமம்: ஐகோர்ட்India news in Tamil: Covid deaths due to oxygen shortage no less than genocide says Allahabad High Court
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com