வாக்காளர் அடையாள அட்டையில், பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களில் பிழைகள் இருப்பின், திருத்தம் செய்வதற்கான காலக்கெடு, நவம்பர் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை விரைவில் வெளியிடும் பொருட்டு, வாக்காளர் விபரங்களை தேர்தல் ஆணையம் சரிபார்த்து வருகிறது. வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர்களில் உள்ள பிழைகளை திருத்துதல் என வாக்காளர் விபரங்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதை எளிதாக நாமே திருத்திக்கொள்ளும் பொருட்டு ஆன்லைனில் வழிவகை செய்துதரப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு, நவம்பர் 18ம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டில்லி சட்டசபை தேர்தல், 2020ம் ஆண்டின் முற்பகுதியில் நடைபெற உள்ளதால், அங்கு மட்டும் திருத்தம் மேற்கொள்ள கடைசி தேதி அக்டோபர் 31ம் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிழைகள் இருப்பின் ஆன்லைனிலேயே திருத்தம் மேற்கொள்வதற்கான வழிமுறை
1. https://www.nvsp.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்
2. அதில், ‘Correction of entries in electoral roll’ என்ற பிரிவுக்கு செல்லவும்
3. திருத்தம் மேற்கொள்ள படிவம் 8 தெரிவு செய்யவும்.
4. சட்டசபை / மக்களவை தொகுதி, பெயர், வாக்காளர் பட்டியலில் பகுதி எண், வரிசை எண், பாலினம், வயது, குடும்ப உறுப்பினர்கள் விபரம், முழு முகவரி உள்ளிட்ட விபரங்களை பூர்த்தி செய்யவும்.
5. திருத்தம் மேற்கொள்ள வேண்டுமா அல்லது மாற்றம் செய்ய வேண்டுமா என்பதை தெளிவாக குறிப்பிடவும். உதாரணமாக, வாக்காளர் அட்டையில், என் பெயர் பகுதியை குறிப்பிட்டு திருத்தம் மட்டும் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடவும்.
6. நகரத்தின் பெயர், கோரிக்கை வைக்கும் தேதி, தொடர்பு முகவரி உள்ளிட்ட விபரங்களை உள்ளிடவும்.
7. கொடுத்த விபரங்களை சரிபார்த்தபின், சப்மிட் பட்டனை அழுத்தவும்.
பெயரில் திருத்தம் செய்ய விரும்பினால்...
பெயர் சரியாக உள்ள ஆவணத்தின் நகலை பதிவேற்றம் செய்யவும். உதாரணமாக, பாஸ்போர்ட் நகல், பான் கார்டு உள்ளிட்டவைகளின் நகல்
பெயர் மாற்றம் செய்ய விரும்பினால்...
கவர்ன்மென்ட் கெஜட் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.
முகவரி சரிபார்ப்பிற்கு...
ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், ரேசன் கார்டு உள்ளிட்டவைகளை பயன்படுத்தலாம்.
அரசு ஊழியர்கள் எனில், அவர்களின் அடையாள அட்டை, பேங்க் பாஸ்புக், டெலிபோன், எல்பிஜி கேஸ் ரசீது, மின்சார கட்டண ரசீது, தண்ணீர் வரி கட்டியதற்கான ரசீது உள்ளிட்டவைகளை பயன்படுத்தலாம்.
கேட்கப்பட்ட எல்லா விபரங்களும் சரிபார்க்கப்பட்டு சப்மிட் கொடுத்தபின், ஒரு ரெபரென்ஸ் எண் உருவாகும். இந்த எண்ணைக் கொண்டு, நமது விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை நாம் ஆன்லைனிலேயே சரிபார்த்து கொள்ள முடியும். தங்களது விண்ணப்பம், தேர்தல் ஆணைய அமைப்பால் சரிபார்க்கப்படும். சரிபார்ப்பு நிறைவடைந்தபின், அருகிலுள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து திருத்தம் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம். புதிய வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கு 2 முதல் 3 வாரகால அளவு தேவைப்படும் என்பதை மறந்துவிட வேண்டாம்....
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.