ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பிற்கு தங்களது ஆதார் தகவல்களை பகிர்ந்துகொள்ள மறுக்கும் வாக்காளர்கள், அதற்கான காரணத்தை தேர்தல் பதிவு அதிகாரி முன்பு நேரில் ஆஜராகி விளக்க அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
கடந்த 2023 செப்டம்பரில், உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம், வாக்காளர்கள் ஆதார் தகவல்கள் வழங்குவது கட்டாயமில்லை என்று கூறியிருந்தது. 66 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தாங்களாக முன்வந்து தங்கள் ஆதார் எண்களை சமர்ப்பித்துள்ளனர். ஆதார் அட்டையை வாக்காளர் பட்டியலுடன் இணைக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட மாட்டாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தியின்படி, இனி எந்த வாக்காளரும் தனது ஆதார் அட்டையை வழங்கவில்லை எனில், படிவம் 6B-ல் அதற்கான சரியான காரணத்தை அவர் தெரிவிக்க வேண்டும். இந்த மாற்றம் சட்ட அமைச்சகத்தால் விரைவில் அரசிதழ் அறிவிப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் என்றும், பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை தயாரிக்க, புதுப்பிக்க மற்றும் திருத்தம் செய்ய 1950-ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் சட்டத்தின் பிரிவு 13B-ன் கீழ் தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தால் மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து தேர்தல் வாக்குச்சாவடிகள்நியமிக்கப்படுகின்றன.
மொத்தம் 98 கோடி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். 2023 வரை, தேர்தல் ஆணையம் 66 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் ஆதார் விவரங்களைச் சேகரித்துள்ளது, அவர்கள் இந்தத் தகவலை "தானாக முன்வந்து" வழங்கியுள்ளனர். ஆனால், இந்த 66 கோடி வாக்காளர்களுக்கான ஆதார்-வாக்காளர் தரவுத் தளங்களும் இணைக்கப்படவில்லை.
12 இலக்க தனித்துவமான ஆதார் எண்ணை வழங்காத ஒவ்வொரு வாக்காளரும் தேர்தல் பதிவு அதிகாரி முன்பு நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற திட்டம், கடந்த வாரம் தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் உள்துறை அமைச்சகம், சட்ட அமைச்சகம், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் UIDAI ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு இடையேயான உயர்மட்டக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
தற்போது, வாக்காளர்களின் ஆதார் எண்களைச் சேகரிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட படிவம் 6B-ல் ஆதார் வழங்கவும் அல்லது "எனக்கு ஆதார் எண் இல்லாததால் எனது ஆதாரை வழங்க முடியவில்லை" என்று அறிவிக்கவும் என இரு தேர்வுகளை மட்டுமே வழங்குகிறது.
மார்ச் 18 கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட திட்டத்தின்படி படிவம் 6B-ல் பிந்தைய அறிவிப்பை நீக்கும்வகையில் மாற்றங்கள் செய்யப்படும். படிவம் 6B-ல் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களின் முன்னரே தீர்மானிக்கப்பட்ட பட்டியலில் இருந்து வாக்காளர் மாற்று ஆவணத்தை வழங்குகிறார் என்பதற்கான ஒரே ஒரு அறிவிப்பு மட்டுமே இப்போது இருக்கும். மேலும் அவர் ஆதார் விவரங்களை ஏன் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதை விளக்க ஒரு குறிப்பிட்ட தேதியில் தேர்தல் பதிவு அதிகாரி முன் ஆஜராக வேண்டும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய பின்னணியில் ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.