நந்திகிராம் தொகுதிக்கு உட்பட்ட போயல் வாக்குச் சாவடியில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை என கூறியுள்ள தேர்தல் ஆணையம் மம்தாவின் புகாரை நிராகரித்துள்ளது.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த ஏப்ரல் 1ம் தேதி மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. அப்போது போயல் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களை வாக்களிக்க விடாமல் பாஜக தடுப்பதாக புகார் அளித்த மம்தா பானர்ஜி அங்கேயே தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குச்சாவடி மையத்திலேயே சுமார் 2 மணி நேரமாக உட்கார்ந்திருந்தார்.இதையடுத்து, ஆளும் திரிணாமுல் மற்றும் பாஜக தரப்பு இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவப்படையினர் மம்தா பானர்ஜியை அங்கிருந்து அனுப்பி விட்டு அமைதியை ஏற்படுத்தினர்.
பின்னர் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மம்தா புகார் அளித்தார். நந்திகிராம் தொகுதியில் வெளிநபர்கள் குழப்பத்தை விளைவிப்பதாகவும், அங்கு வாக்குப்பதிவில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். தொடர்ந்து, நந்திகிராமில் வாக்குப்பதிவு பணியில் முறைகேடுகள் நடந்ததாக தனது கட்சி அளித்த புகார்களில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
இந்த புகார் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் இருந்து முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில்,
மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை .தேர்தல் பார்வையாளர்கள் உள்ளிட்டவர்கள் மூலம் களத்தில் இருந்து கிடைத்த அறிக்கைகளின்படி, மம்தாவின் கையால் எழுதப்பட்ட குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையில் தவறானவை, எந்தவொரு அடிப்படை ஆதாரமோ, அர்த்தமோ இல்லாதவை என்பது தெளிவாகத் தெரிகிறது.கோஷங்களை எழுப்ப முயன்ற இரு கட்சியினரை தவிர்த்து, எந்த வன்முறையும் நடைபெறவில்லை.
வாக்குச் சாவடியில் நிறுத்தப்பட்டிருந்த துணை ராணுவ படையினர் பொருத்தமற்ற நடத்தையில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. வாக்காளர்களை வாக்குச்சாவடிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை என்ற புகார் உண்மையில்லை.
மேலும், அதிகாரிகளிடம் பெற்ற தகவலின்படி, குறிப்பிட்ட வாக்குச்சாவடிக்குள் உள்ள சி.சி.டி.வி கேமராக்களில் வெளியாட்களோ, துப்பாக்கிகள் மற்றும் அந்தச் சாவடியைக் கைப்பற்றும் குண்டர்கள் பற்றிய எந்த பதிவும் இல்லை. தேர்தலில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் மம்தா பானர்ஜி நடந்து கொண்டு இருக்கிறார். ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்துகொண்டு இதுபோன்ற ஒரு தவறான செயலில் ஈடுபட்டுள்ளார்.நந்திகிராமில் மம்தா நடந்து கொண்ட விதம் குறித்து விசாரித்து வருவதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.