/indian-express-tamil/media/media_files/0k8h9vnXB6MSS1VGGN0W.jpg)
தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்தார். (கோப்பு புகைப்படம்)
மக்களவைத் தேர்தல் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதற்கு முன்பு, தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை சனிக்கிழமை ராஜினாமா செய்தார். அவரது பதவிக்காலம் 2027 வரை உள்ள நிலையில், திடீரென ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Election Commissioner Arun Goel resigns ahead of Lok Sabha polls
“தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023-ன் பிரிவு 11-ன் பிரிவு (1)-ன் படி, அருண் கோயல் அளித்த ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதில் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சியடைகிறார். தேர்தல் ஆணையர் ராஜினாமா மார்ச் 09, 2024 முதல் அமலுக்கு வரும்” என்று மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் அரசிதழ் அறிவிப்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023 சட்டப் பிரிவு 11-ன் ஷரத்து (1)-ன் படி, தலைமைத் தேர்தல் ஆணையர் அல்லது தேர்தல் ஆணையர், குடியரசுத் தலைவரிடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் அளித்து எந்த நேரத்திலும் பதவியை ராஜினாமா செய்யலாம்.
தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரியில் ஓய்வு பெற்ற பிறகு, மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையர்களின் எண்ணிக்கை இரண்டாகக் குறைந்த நிலையில், அருண் கோயலின் ராஜினாமா வந்துள்ளது. தேர்தல் ஆணையர் அருண் கோயலின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டும் இக் குழுவில் இடம் பெறுகிறார்.
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான அருண் கோயல், நவம்பர் 21, 2022-ல் தேர்தல் ஆணையராகப் பதவியேற்றார். மத்திய கனரக தொழில்துறை செயலாளராக இருந்த அருண் கோயல் நவம்பர் 18, 2022 அன்று இந்திய ஆட்சிப் பணியில் (ஐ.ஏ.எஸ்) இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஒரு நாள் கழித்து அவர், தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.