Electoral Bonds | Lottery King Santiago Martin: தேர்தல் பாத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிறுவனங்கள், தனிநபர்கள் வழங்கிய நன்கொடை தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ வங்கி வழங்க அதனை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த தரவுகளின் அடிப்படையில், 2019 முதல் 2024 வரை கோவையைச் சேர்ந்த "லாட்டரி மன்னன்" சாண்டியாகோ மார்ட்டினின் நிறுவனம் அதிகபட்சமாக 1,368 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
இந்நிலையில், 2019 ஆம் ஆண்டில் தனது மோசடி குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுளுக்கு எச்சரிக்கை விடுத்த சில நாட்களுக்குப் பிறகு, நம்பர் 1 நன்கொடையாளரான லாட்டரி மார்ட்டின் தேர்தல் பத்திரங்களை வாங்கத் தொடங்கினார் என்பது தெரியவந்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் லாட்டரி நடத்தும் 8 மாநிலங்களை எச்சரித்துள்ளது. மேலும் ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் தலைமையிலான மார்ட்டினின் நிறுவனங்களுடன் தொடர்புடைய மோசடிகள் மற்றும் முறைகேடுகளில் இருந்து அவர்களை விலகி இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
செப்டம்பர் 23, 2019 தேதியிட்ட கடிதத்தில், உள்துறை அமைச்சகத்தின் சி.எஸ் (மத்திய-மாநில) பிரிவு அதிகாரிகள் மேற்கு வங்கம், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் மார்ட்டின் தனது ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல்களை இயக்கி வருவதாக எச்சரிக்கை கொடுத்ததாக. இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்திருக்கிறது. அந்த நிறுவனம் மற்ற மாநிலங்களில் பிக் ஸ்டார் ஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற பெயரில் நடத்தப்பட்டுள்ளது.
அக்டோபர் 2019 இல், ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல்கள் நிறுவனம் தொடர்ச்சியான தேர்தல் பத்திரங்களை வாங்கத் தொடங்கியுள்ளது. அந்த மாதத்தில் மட்டும் மொத்தம் ரூ. 190 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியதாக தேர்தல் ஆணையத்தின் தரவு காட்டுகிறது.
மார்ட்டின் பற்றி மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் விடுத்த எச்சரிக்கையில், மார்ட்டின் மற்றும் அவரது லாட்டரி நிறுவனங்களுக்கு எதிராக "கடுமையான குற்றச்சாட்டுகளுடன்" புகார்கள் வந்திருப்பதாகக் குறிப்பிட்டது. மேலும் அவர் குறித்த புகார்கள் அவை பின்வருமாறு:-
* மார்ட்டின் கொல்கத்தாவில் வசிக்கிறார், அனைத்து அண்டை மாநிலங்களிலும் அலுவலகங்களை வைத்திருந்தார் மற்றும் வணிகம் தடைசெய்யப்பட்ட மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் "சட்டவிரோதமாக" லாட்டரிகளை விற்றார். மேலும் மாநிலத்தில் ஜி.எஸ்.டி டெபாசிட் செய்யப்படவில்லை.
* மாநில அரசுக்குத் தெரியாமல் அச்சகங்களில் இருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் டிக்கெட்டுகளை அச்சடித்து இருக்கிறார்.
* அவர் பல மோசடி வழக்குகளில் ஈடுபட்டு இருக்கிறார் என்பதை மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ) விசாரித்து வருகிறது. மற்றும் "பரிசு வென்ற லாட்டரிகளில் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் கணக்கில் காட்டப்படாத வருமானம்" இருந்தது.
* அவர் கேரளாவில் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளார், அவை அந்த மாநிலத்தால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, கேரளாவில் மார்ட்டினின் சிக்கிம் மாநில லாட்டரியை மத்திய உள்துறை அமைச்சகம் தடை செய்தது.
* லாட்டரி சீட்டுகள் வரிசையாக எண் போடப்படவில்லை மற்றும் ஒரு குறிப்பிட்ட எண்ணை மூட்டைகளில் குலுக்கி விற்கப்பட்டன. இதனால் 2010 இன் லாட்டரி (ஒழுங்குமுறை) விதிகள் மீறப்பட்டன.
மார்ட்டினின் லாட்டரி வணிகம் குறித்த தகவல்களை அவசர அடிப்படையில் தனித்தனியாக சமர்ப்பிக்குமாறு மாநிலங்களை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது.
2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஃபியூச்சர் கேமிங்கிற்கு எதிரான பணமோசடி விசாரணையை அமலாக்கத்துறை தொடங்கியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்பு தெரிவித்திருந்தது. அந்த ஆண்டு ஜூலைக்குள், மார்டினின் நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ. 250 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. இந்த வழக்கில் ஏப்ரல் 2, 2022 அன்று, 409.92 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
இந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஏப்ரல் 7 ஆம் தேதி, மார்டினின் பியூச்சர் கேமிங் ரூ.100 கோடி தேர்தல் பத்திரங்களை வாங்கியது.
கடந்த ஐந்தாண்டுகளில் பல்வேறு அரசியல் கட்சிகளால் ரூ.12,769 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளன. பா.ஜ.க மொத்த மதிப்பில் 47.46 சதவீதத்தையும், டி.எம்.சி 12.60 சதவீதத்தையும், காங்கிரஸ் 11.13 சதவீதத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: After Centre alerted states on his fraud in 2019, Donor No 1 Santiago Martin went on electoral bonds buying spree
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.