Electoral Bonds: தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் திரட்டிய நிதி தொடர்பான விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) தேர்தல் ஆணையத்திற்கு அளித்த நிலையில், தற்போது அவ்விவரங்கள் வெளியாகியுள்ளன. மேலும், அரசியல் கட்சிகளுக்கும் நன்கொடை வழங்கிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களும் இடையேயான தொடர்பு குறித்த விவரங்களும் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், 2019 மற்றும் 2024-க்கு இடையில் அரசியல் கட்சிகளுக்கு அதிக நிதி வழங்கிய முதல் 5 நன்கொடையாளர்களில் 3 பேரிடம் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை (ஐ.டி) சோதனை நடத்தியிருப்பது தெரிய வந்துள்ளது.
லாட்டரி மார்டின்
இந்த முதல் 5 நன்கொடையாளர்களில் 3 லாட்டரி தொழிலதிபர் மார்டினின் நிறுவனமான ஃபியூச்சர் கேமிங், உள்கட்டமைப்பு நிறுவனமான மேகா இன்ஜினியரிங் மற்றும் சுரங்க நிறுவனமான வேதாந்தா ஆகியவை இதில் அடங்கும்.
நேற்று வியாழக்கிழமை தேர்தல் பாத்திரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளின் படி, 2019 முதல் 2024 வரை கோவையைச் சேர்ந்த லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் நிறுவனம் அதிகபட்சமாக 1,368 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை அடிப்படையில், அமலாக்கத்துறை கடந்த 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டின் மற்றும் அவரது நிறுவனமான எம்/எஸ் பியூச்சர் கேமிங் சொல்யூஷன்ஸ் (பி) லிமிடெட் (தற்போது எம்/எஸ் ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் (பி) லிமிடெட் மற்றும் முன்பு மார்ட்டின் லாட்டரி ஏஜென்சிஸ் லிமிடெட்) ஆகியவற்றுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டம் 2002 இன் கீழ் விசாரணையைத் தொடங்கியது..
மார்ட்டினும் அவரது கூட்டாளிகளும், லாட்டரி ஒழுங்குமுறைச் சட்டம், 1998 இன் விதிகளை மீறியதாகவும், சிக்கிம் அரசை ஏமாற்றி ஆதாயத்தைப் பெற குற்றவியல் சதியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. "மார்ட்டினும் அவரது கூட்டாளிகளும் 01.04.2009 முதல் 31.08.2010 வரையிலான காலக்கட்டத்தில் பரிசு வென்ற லாட்டரிகளுக்கான கோரிக்கையை உயர்த்தியதன் மூலம் ரூ. 910.3 கோடி அளவுக்கு சட்டவிரோதமாக லாபம் ஈட்டியுள்ளனர்" என்று ஜூலை 22, 2019 அன்று அமலாக்கத்துறை அதன் அறிக்கையில் தெரிவித்தது.
இதனையடுத்து, அமலாக்கத்துறை அந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள், மார்ட்டினின் நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ. 250 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்தது. மேலும், ஏப்ரல் 2, 2022 அன்று, இந்த வழக்கில் 409.92 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்தது.
இந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்ட 5 நாட்களுக்குப் பிறகு, அதாவது ஏப்ரல் 7 ஆம் தேதி, மார்டினின் பியூச்சர் கேமிங் நிறுவனமானது ரூ.100 கோடி தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. மேலும், 2019-2024 காலகட்டத்தில், நிறுவனம் தனது முதல் தவணை தேர்தல் பத்திரங்களை அக்டோபர் 21, 2020 அன்று வாங்கியிருக்கிறது.
மேகா இன்ஜினியரிங்
அரசியல் கட்சிகளுக்கு இரண்டாவதாக அதிக நன்கொடை அளித்தவர்களில் ஐதராபாத்தை தளமாகக் கொண்ட மேகா இன்ஜினியரிங் மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் (MEIL) உள்ளது. இந்த நிறுவனம் 2019 மற்றும் 2024 க்கு இடையில் ரூ 1000 கோடி மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியுள்ளது. கிருஷ்ணா ரெட்டியால் நடத்தப்படும், மேகா இன்ஜினியரிங் நிறுவனம் தெலுங்கானா அரசாங்கத்தின் முக்கிய திட்டங்களை செயலாற்றி வருகிறது. குறிப்பாக, காலேஸ்வரம் அணை திட்டம், சோஜிலா சுரங்கப்பாதை மற்றும் போலவரம் அணையையும் அந்த நிறுவனம் கட்டி வருகிறது.
2019 அக்டோபரில், அந்த நிறுவனத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையும் அதன் விசாரணையைத் தொடங்கியது. தற்செயலாக, அந்த ஆண்டு ஏப்ரல் 12 அன்று, மேகா இன்ஜினியரிங் நிறுவனம் ரூ. 50 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
கடந்த ஆண்டு, சீன மின்சார கார் தயாரிப்பாளரான பி.ஒய்.டி (BYD) மற்றும் மேகா இன்ஜினியரிங் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் 1 பில்லியன் டாலர் முதலீட்டில் அமைக்கப்பட இருந்த மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கான அனுமதியை தெலுங்கானா அரசாங்கம் நிராகரித்தது.
வேதாந்தா
அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமம் 376 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை வாங்கிய ஐந்தாவது பெரிய நன்கொடையாளர் ஆகும், இதன் முதல் தவணை ஏப்ரல் 2019 இல் வாங்கப்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில், 2018 ஆம் ஆண்டின் மத்தியில், சில சீனவைச் சேர்ந்தவர்களுக்கு விதிகளை மீறி விசா வழங்கிய லஞ்ச வழக்கில் வேதாந்தா குழுமத்திற்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை கூறியது.
சி.பி.ஐ-க்கு அமலாக்கத்துறை அனுப்பிய குறிப்பு 2022 இல் ஊழல் வழக்காக மாற்றப்பட்டது, அதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை பணமோசடி விசாரணையைத் தொடங்கியது. இதனையடுத்து, ஏப்ரல் 16, 2019 அன்று, வேதாந்தா லிமிடெட் ரூ.39 கோடி மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது.
அடுத்த நான்கு ஆண்டுகளில், 2020 ஆம் ஆண்டின் கொரோனா காலக்கட்டத்தைத் தவிர, நவம்பர் 2023 வரை, அந்த நிறுவனம் ரூ. 337 கோடி மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது, வேதாந்தா வாங்கிய பத்திரங்களின் ஒட்டுமொத்த மதிப்பை ரூ. 376 கோடியாக உள்ளது.
ஜிண்டால்
ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் நிறுவனமும் இந்த காலகட்டத்தில் பத்திரங்கள் மூலம் ரூ. 123 கோடி நன்கொடையாக வழங்கிய முதல் 15 நன்கொடையாளர்களில் ஒன்றாகும். நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு வழக்கில் அந்த நிறுவனம் மத்திய ஏஜென்சிகளின் விசாரணைகளை எதிர்கொண்ட நிலையில், ஏப்ரல் 2022 இல் அந்நிய செலாவணி மீறல் தொடர்பான புதிய வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை, ஜிண்டால் நிறுவனம் மற்றும் அதன் விளம்பரதாரர் நவின் ஜிண்டால் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது.
இதனையடுத்து, அக்டோபர் 7, 2022 அன்று 2019 மற்றும் 2024 க்கு இடையில் நிறுவனம் தனது முதல் தவணை தேர்தல் பாத்திரங்களை வாங்கியது.
ரித்விக் ப்ராஜெக்ட்ஸ்
இது தவிர, ரித்விக் ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் இந்த காலகட்டத்தில் ரூ.45 கோடிக்கு பத்திரங்களை வாங்கியுள்ளது. ரித்விக் புராஜெக்ட்ஸ் அரசியல் தலைவர் சி.எம்.ரமேஷ்க்கு சொந்தமானது. அக்டோபர் 2018 இல், வருமான வரித் துறையினர் நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர் மற்றும் அப்போது தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) எம்.பி-யாக இருந்த ரமேஷ்.
அவரது நிறுவனம் 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தகவல் தொழில்நுட்பத் துறை குற்றம் சாட்டியது. சில மாதங்கள் கழித்து ரமேஷ் பா.ஜ.க-வில் இணைந்தார்.
அரபிந்தோ பார்மா
டெல்லி மதுபான வழக்கில் சிக்கியுள்ள அரபிந்தோ பார்மா நிறுவனமும் இந்த காலகட்டத்தில் ரூ.49 கோடி நன்கொடை அளித்துள்ளது. இந்த வழக்கில் நிறுவன இயக்குநர் பி சரத் ரெட்டியை அமலாக்கத்துறை 2022 நவம்பரில் கைது செய்தது. அவரது நிறுவனம் 2021 ஆம் ஆண்டில் சுமார் 2.5 கோடி ரூபாய் நன்கொடைகளை வழங்கியிருந்தாலும், அதன் பெரும்பாலான தேர்தல் பத்திரங்கள் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் வாங்கப்பட்டன.
ராஷ்மி சிமென்ட்
அரசியல் கட்சிகளுக்கு ரூ.64 கோடி நன்கொடையாக வழங்கிய ராஷ்மி சிமென்ட், 2022 முதல் அமலாக்கத்துறை சோதனைக்கு கீழ் உள்ளது. ஜூலை 13, 2022 அன்று, மேற்கு வங்கத்தில் மூன்று இடங்களில் "ரஷ்மி குழும நிறுவனங்களின்" வழக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. 73.40 கோடி ரூபாய் பொது கருவூலத்திற்கு ஏற்பட்ட இழப்பு "உண்மைகளை வேண்டுமென்றே தவறாக அறிவிப்பதன் மூலமும், இந்திய ரயில்வேயின் இரட்டை சரக்குக் கொள்கையை தவறாகப் பயன்படுத்துவதன் மூலமும், இரும்புத் தாதுப் போக்குவரத்திற்கான சரக்குக் குறைந்த கட்டணத்தின் தவறான பலன்களைப் பெறுவதற்கும்" தொடர்புடையது என்று அமலாக்கத்துறை கூறியது.
ஷீரடி சாய் எலக்ட்ரிக்கல்ஸ்
இதேபோல், இந்த ஆண்டு ஜனவரியில் ரூ.40 கோடிக்கு பத்திரங்களை வாங்கிய ஷீரடி சாய் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் கடந்த ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.