பீமா - கோரேகாவ் கலவரம் தொடர்பாக 5 பேர் கைது தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கொலை செய்தது போலவே பிரதமர் நரேந்திர மோடியையும் கொலை செய்யத் திட்டமிட்டது தெரிய வந்துள்ளது.
கடந்த ஜனவரி 1ம் தேதி புனே - கோராகாவில் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பின்பு கலவரமாக மாறியதில் தலித் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்தப் பீமா-கோரேகாவ் கலவரம் வழக்கில் புனே போலீசார் டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு அதிகாரிகளின் உதவியுடன் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ரானா ஜேக்கப் என்பவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
மேலும் கடந்த 6ம் தேதி புனே போலீசார் 5 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரில், தலித் உரிமை ஆர்வலர், பேராசிரியை மற்றும் முன்னாள் பிரதமரின் கிராமப்புற மேம்பாட்டு நிறுவன அதிகாரியாகப் பணிபுரிந்தவரும் அடக்கம். இவர்கள் அனைவரும் மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளனர் என்ற புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாகப் பொதுநல வாழ்க்கையையும், அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் இவர்கள் செயல்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 5 பேரும் சிவாஜி நகர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்கள் 5 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மாவட்ட அரசாங்க வழக்கறிஞர் உஜ்வாலா பவார் புனே நீதிமன்றத்தில் மனு தாக்கல். அப்போது, இந்த விசாரணையில் தெரியவந்த முக்கிய விவரங்கள் குறித்து குறிப்பிட்டார்.
போலீஸ் அதிகாரிகள் 5 பேரின் கைதிற்கு பிறகு இ மெயில்களை பரிசோதனை செய்ததில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை போலவே மற்றொரு கொலையை நிகழ்த்தத் திட்டம் தீட்டியிருப்பது தெரியவந்துள்ளதாக உஜ்வாலா நீதிமன்றத்தில் தெரிவித்தார். மோடியின் பெயரை குறிப்பிடாமல் இ மெயிலில் வந்த கடிதத்தில் இருந்ததைப் படித்துக்காட்டினார். இந்தக் கடிதம், தடை செய்யப்பட்ட மத்திய மாவோயிச்ட் குழுவைச் சார்ந்த ஒருவரிடம் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் ராஜிவ் காந்தியை கொலை செய்தது போலவே பிரதமர் மோடியையும் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
முன்னாள் மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தி, ஸ்ரீவல்லிபுத்தூரில் தற்கொலை படை தாக்குதலில் குண்டு வெடித்துக் கொல்லப்பட்டார். “இந்தியாவின் பெரும்பாலான பகுதியை மோடி ஆட்சி வெற்றிகரமாகக் கைப்பற்றியுள்ளது. இந்த நீடித்தால் மாவோயிஸ்டுகளுக்கு சிக்கல் ஏற்படும் என்ற காரணத்தால், அவரைக் கொல்ல திட்டம் தீட்டியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.” என புனே போலீசார் தெரிவிக்கின்றனர். இதற்காக மோடி, பொது இடங்களில் மக்களைச் சந்திக்கும் கூட்டங்கள் அல்லது சாலை வழியே ஊர்வலமாகச் செல்லும் நிகழ்ச்சிகளைப் பயன்படுத்தி கொல்லத் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.