ED Summon to Daughter of D.K.Shivarkumar: கர்நாடகா மாநில மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமார் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மகள் ஐஸ்வர்யாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமல்லாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கர்நாடாகா மாநில முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டி.கே.சிவகுமாருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் நடத்திய சோதனையில் ரூ.8.50 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை தாமாக முன்வந்து டி.கே.சிவக்குமார் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் அவர் முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து டி.கே.சிவக்குமார் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறையில் விசாரணைக்கு ஆஜரானார். அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் நான்கு நாட்கள் விசாரணை நடத்தியபின் செப்டம்பர் 3 ஆம் தேதி அவரைக் கைது செய்தனர். பின்னர், அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் டி.கே.சிவக்குமார் அவரது மகள் ஐஸ்வர்யா பெயரில் பெரிய அளவில் சொத்துக்களையும் முதலீடுகளையும் குவித்து வைத்திருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவை செப்டம்பர் 12 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.