Santanu Chowdhury
இஞ்ஜினியரிங் மாணவர்கள், ராமர் சேது பாலம், பகவத் கீதை, ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சமஸ்கிருத மொழிகள் உள்ளிட்டவைகளில் ஆய்வுகள் மேற்கொண்டு அதனுள் பொதிந்துள்ள உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐஐடி காரக்பூரின் 65வது பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் கலந்துகொண்டார். மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கியபின், அவர் சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, யோகா, வேதங்கள் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தை நோக்கி, உலகம் தனது கவனத்தை திருப்பியுள்ளது. உலகின் மிகவும் பழமையான மொழி சமஸ்கிருதம். இன்றைய தேதி வரை, சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி என்ற ஒன்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மாணவர்களாகிய நீங்கள், இதில் புதிதாக ஆய்வுகள் மேற்கொண்டு உண்மைகளை வெளிக்கொணர வேண்டும்.
ராமர் சேது பாலத்தை, நமது முன்னோர்கள் எவ்வாறு கடலுக்கு அடியில் அத்தனை உறுதித்தன்மையுடன் கட்டினார்கள் என்பதுபோன்ற பல உண்மைகள் அதில் பொதிந்துள்ளன. இன்றைய மாணவர்கள், ராமர் சேது பாலம், பகவத் கீதை, ஆயுர்வேத மருத்துவம், வேதங்கள், சமஸ்கிருத மொழி உள்ளிட்டவைகளில் ஆய்வுகள் மேற்கொண்டு அதனுள் பொதிந்துள்ள உண்மைகளை வெளிக்கொணர வேண்டும்.
ராமர் சேது பாலம் மனிதர்களால் கட்டியதற்கான ஆதாரம் இல்லை என்று இந்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. இஞ்ஜினியரிங் மாணவர்கள் இதுபோன்ற விஷயங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு இதுபோன்ற பாலத்தை, வருங்காலத்தில் மனிதர்களால் மீண்டும் கட்ட இயலுமா என்ற கேள்விக்கு விடை காண முயல வேண்டும். இந்த ஆய்வுகள், பின்வரும் சந்ததியினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறினார்.