இங்கிலாந்தில் பெருகி வரும் புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பினை கண்டு உலக நாடுகள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன. சாதாரன கொரோனாவை விட 70 மடங்கு தொற்று நோய்யை ஏற்படுத்தும் இந்த வைரசால் இங்கிலாந்து பெரும் இழப்பை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், இங்கிலாந்தில் இருந்து இந்திய திரும்பிய மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெங்களூரில் மூன்று பேரும், ஹைதராபாத்தில் இரண்டு பேரும் மற்றும் புனேவில் ஒருவரும் ஆவர். இவர்கள் அனைவரும் சமீபத்தில் இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பியவர்கள் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இவர்கள் 6 பேரும் அந்தந்த மாநில அரசுகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள சுகாதார மையங்களில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், விமானத்தில் ஒன்றாக வந்த பயணிகள், குடும்பத்தினர் ஆகியோரை கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களில் ரத்த மாதிரிகளை வைத்து மரபணு சோதனை நடைபெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் மேலும் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்களின் "நிலைமை கவனமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கன்சோர்டியம் (INSACOG) ஆய்வகங்களுக்கு, தொற்று கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல், மற்றும் சோதனை மாதிரிகள் அனுப்புவதற்கு மாநில சுகாதார அமைச்சகங்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன," எனவும் தெரிவித்துள்ளது.
இ்நிலையில் நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 வரை இங்கிலாந்தில் இருந்து சுமார் 33,000 பயணிகள் பல்வேறு இந்திய விமான நிலையங்களில் இறங்கியுள்ளதாகவும், அதில் 114 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும்’, சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களின் ரத்த மாதிரிகள், வரிசைப்படுத்துதலுக்காக 10 இன்சாகோக் ஆய்வகங்களுக்கு (என்ஐபிஎம்ஜி கொல்கத்தா, ஐஎல்எஸ் புவனேஸ்வர், என்ஐவி புனே, சிசிஎஸ் புனே, சிசிஎம்பி ஹைதராபாத், சிடிஎஃப்டி ஹைதராபாத், இன்ஸ்டெம் பெங்களூரு, நிம்ஹான்ஸ் பெங்களூரு, ஐஜிஐபி டெல்லி, என்சிடிசி டெல்லி) அனுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்தில் பரவும் புதுவகை கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவதை தடுக்கும் வகையில், கடந்த வாரம் முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை இங்கிலாந்துடனான விமானபோக்குவரத்து தடை செய்யப்படுவதாக, இந்திய சிவில் விமான போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் பரிந்துரையின் அடிப்படையில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் இந்த முடிவை எடுத்தது,
மேலும் இந்தியா மட்டுமல்லாது, டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, சுவீடன், பிரான்ஸ், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, கனடா, ஜப்பான், லெபனான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"