உத்தரப் பிரதேசத்தில் உள்ள உன்னா மாவட்டத்தில், உள்ள ஒரு பள்ளியில் அந்த மாவட்ட ஆட்சியர் நடத்திய திடீர் ஆய்வில் ஆங்கில ஆசிரருக்கே ஆங்கிலம் தெரியாத அவலம் வெளிப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள உன்னா மாவட்டத்தின் ஆட்சியர் தேவேந்திர குமார். இவர் தனது மாவட்டத்தில் உள்ள சிக்கந்தர் சாரொசியில் உள்ள ஒரு அரசுப் பள்ளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென ஆய்வு நடத்தச் சென்றார்.
மாவட்ட ஆட்சியர் ஆய்வின்போது தேவேந்திர குமார் பாண்டே, ஒரு வகுப்பறைக்கு சென்று மாணவிகளிடம் ஆங்கிலப் பாடம் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது மாணவிகள் யாரும் பதில் சொல்ல முடியாமல் திணறி உள்ளனர்.
திடீர் ஆய்வு என்பதால் மாணவிகள் பதில் சொல்ல தடுமாறுகிறார்களோ என்று நினைத்த மாவட்ட ஆட்சியர் தேவேந்திர குமார் பாண்டே, மாணவிகளிடம் அவர்களுடைய ஆங்கிலப் பாடப்புத்தகத்தை எடுத்து படிக்கச் சொன்னார். அப்போது, மாணவிகள் ஆங்கிலம் வாசிக்கத் தெரியாமல் நின்றுள்ளனர்.
மாணவிகள் இப்படி வாசிக்கத் தெரியாமல் இருந்ததால், ஆங்கில வகுப்பு ஆசிரியை அழைத்து அவர் பாடம் நடத்தும் புத்தகத்தில் இருந்து ஒரு பகுதியை வாசிக்கச் சொன்னபோது ஆசிரியை படிக்க முடியாமல் திணறுவதைப் பார்த்து மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி அடைந்தார்.
இதனா, கோபமடைந்த மாவட்ட ஆட்சியர் தேவேந்திர குமார் பாண்டே, ஆசிரியருக்கே படிக்கத் தெரியவில்லை. அவரால் படிக்க முடியவில்லை. இவர் எப்படி மாணவிகளுக்கு பாடம் நடத்துவார் என்று கோபமாக கூறினார்.
இதையடுத்து, தனது அருகே நின்றிருந்த ஆரம்ப கல்வி அதிகாரி பிரதீப் குமார் பாண்டேவிடம், “இந்த ஆசிரியை உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படவேண்டும்.. ஒரு ஆங்கில ஆசிரியைக்கு ஆங்கிலத்தை பார்த்து வாசிக்க முடியவில்லை” என்று கோபமாக கடிந்துகொண்டார்.
இந்த சம்பவம் இணையத்தில் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.