Advertisment

‘தி கேரளா ஸ்டோரி’ காலத்தில் பார்வையாளர்களை ஈர்த்த ‘என்னு ஸ்வந்தம் ஸ்ரீதரன்’

“நாங்கள் அதைத் தடை செய்யவில்லை. அது முக்கியமில்லை. கேரளாவில் பலர் இதைப் பார்ப்பதில்லை; அதற்கு காரணம் சுபைதாக்களும் ஸ்ரீதரன்களும் இன்னும் கேரளாவில் வாழ்கிறார்கள்’ என்று முன்னாள் அமைச்சர் தாமஸ் ஐசக் ட்வீட் செய்தார்.

author-image
WebDesk
New Update
The Kerala Story, Ennu Swantham Sreedharan, small-budget Malayalam film, screening of Ennu Swantham Sreedharan, தி கேரளா ஸ்டோரி, தி கேரளா ஸ்டோரி காலத்தில் பார்வையாளர்களை ஈர்த்த‘என்னு ஸ்வந்தம் ஸ்ரீதரன், ‘என்னு ஸ்வந்தம் ஸ்ரீதரன், Jawahar Bhavan on Rajendra Prasad Road, Tamil indian express, Tamil indian express news

என்னு ஸ்வந்தம் ஸ்ரீதரன் திரைப்படம்

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தொடர்பான சர்ச்சை எழுந்தபோது, ​​கேரள முன்னாள் அமைச்சர் தாமஸ் ஐசக் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாங்கள் அதைத் தடை செய்யவில்லை. அது முக்கியமில்லை. கேரளாவில் பலர் இதைப் பார்ப்பதில்லை… அதற்கு காரணம் சுபைதாக்களும் ஸ்ரீதரன்களும் கேரளாவில் இன்னும் வாழ்கிறார்கள்’ என்று ட்வீட் செய்தார்.

Advertisment

தென்னிந்தியாவில் இருந்து வருகிற ஒரு படம், பெரிய அளவில் விளம்பரம் இல்லாமல், மெகா ஸ்டார் ஹீரோ, உலகத் தரம் வாய்ந்த வி.எஃப்.எக்ஸ் என வட இந்தியாவில் ஒரு திரையரங்குக்கு பார்வையாளர்களை ஈர்ப்பது என்பது எல்லா நாளும் நடப்பதில்லை. ஆனால், சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மலையாளப் படம் டெல்லியில் வெள்ளிக்கிழமை திரையிடப்பட்டபோது, திரையரங்கின் இறுக்கைகள் கிட்டத்தட்ட நிரம்பியிருந்தது.

இந்தியாவின் பிற பகுதிகளில் திரையிடப்பட்ட சில காட்சிகள் மூலம் பார்வையாளர்களின் இதயங்களைக் கவர்ந்த பிறகு, தலைநகர் டெல்லியில் ராஜேந்திர பிரசாத் சாலையில் உள்ள ஜவஹர் பவனில் ‘என்னு ஸ்வந்தம் ஸ்ரீதரன்’ (தங்கள் உண்மையுள்ள ஸ்ரீதரன்) திரைப்படம் திரையிடப்பட்டது. திரையரங்குக்குள் வந்த ஒரு பார்வையாளர் கூட அசையவில்லை.

இந்து குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஸ்ரீதரன், தனது இரண்டு மூத்த சகோதரிகளுடன், கடலோர மாநிலத்தில் ஒரு முஸ்லீம் தம்பதியினரால் வளர்க்கப்பட்ட கதையை விவரிக்கும் இந்த படம், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தால் இந்தி சினிமாவைச் சுற்றியுள்ள சத்தங்களுக்கு மத்தியில் “உண்மையான கேரளக் கதையை” கூறுவதற்காகப் பாராட்டப்படுகிறது.

இந்த மாத தொடக்கத்தில் வெளியான, அடா சர்மா நடித்த, கேரளாவைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் ஐ.எஸ்.ஐ.எஸ்-ல் இணைந்த கதையை கூறியது. இது தென் மாநிலத்தின் எதார்த்தத்தை காட்டுவதாகக் கூறி பார்வையாளர்களை பிளவுபடுத்தியுள்ளது. மற்றொரு படம், ஒரு மாநிலத்தையும் மத சிறுபான்மையினரையும் இழிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட பிரச்சாரம் என்று அதை நிராகரித்துள்ளது. ஆனால், இந்தி திரைப்பட இயக்குனர்கள் பொறுப்பு துறப்பு மூலம், இது ஒரு கற்பனையான கதை என்று கூறுவார்கள். ஆனால், “என்னு ஸ்வந்தம் ஸ்ரீதரன்” படம் ஒரு உண்மையான கதையை அடிப்படையாகக் கொண்டது. இந்த படத்தின் கதாநாயகன் தனது வாழ்க்கைக் கதையை முன் வரிசையில் இருந்து திரையில் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஸ்ரீதரனுடன் இயக்குனர் சித்திக் பரவூர் (இடது)

“என்னைப் பொறுத்தவரை, உம்மாதான் என் தாய், என் உலகமாக இருந்தாள்… என் அம்மாவை (பெற்றெடுத்த தாய்) பற்றி எனக்கு எந்த நினைவும் இல்லை” என்று தன்னை வளர்த்த தாயை நினைத்து கண்ணீருடன் ஸ்ரீதரன் கூறினார். அவர் தனது தாய் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்த பிறகு, உம்மா என்று அவரை வளர்த்த பெண் தேங்காடன் சுபைதாவைக் குறிப்பிடுகிறார்.

ஸ்ரீதரனின் தனித்துவமான கதை, ஜூலை 2019 இல், அவரது ‘உம்மா’ (கேரளாவில் முஸ்லிம் குடும்பங்களில் அம்மாவை உம்மா என்று அழைப்பார்கள்) மறைவு செய்தியை பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டபோது முதலில் வெளிச்சத்திற்கு வந்தது. ஒரு இந்து மனிதனுக்கு முஸ்லிம் உம்மா எப்படி இருந்தார் என்ற கேள்வியை இந்தப் பதிவு எழுப்பியது. இரண்டாவது பதிவில் ஸ்ரீதரன் வாசகர்களுக்கு விவரமாகக் கூறினார்.

மலையாளத்தில் அவருடைய பதிவின் ஒரு பகுதி பின்வருமாறு: “…என் அம்மா இறந்த அன்று, இந்த உம்மாவும் உப்பாவும் (அப்பா) எங்களை அவர்களின் வீட்டிற்கு அழைத்து வந்தனர். அவர்கள் தங்கள் சொந்தக் குழந்தைகளுக்குக் கல்வி கொடுத்தது போல, எங்களுக்கும் கல்வி கொடுத்தார்கள். என்னுடைய சகோதரிகள் திருமண வயதை எட்டியதும் உப்பாவும் உம்மாவும் தான் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். அவர்கள் எங்களை அழைத்துச் சென்றது குழந்தை இல்லாததால் அல்ல. அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். சிறுவயதிலேயே எங்களை தத்தெடுத்தாலும் எங்களை மதம் மாற்ற முயலவில்லை. ஒரு வளர்ப்பு தாய் பெற்ற தாயாக முடியாது என்று மக்கள் கூறுகிறார்கள். ஆனால், அவர் எங்களுக்கு ஒருபோதும் தத்தெடுத்த தாய்' அல்ல, அவர் உண்மையிலேயே எங்கள் தாய்.” என்று தெரிவித்திருந்தார்.

திரைப்பட இயக்குனர் சித்திக் பரவூர் இந்த பதிவில் இருந்துதான் கதையைப் பெற்றார், ‘என்னு ஸ்வந்தம் ஸ்ரீதரன்’ திரைப்படம் உருவானது.

கேரளாவில் சகோதரத்துவத்தின் ‘வாழும் உதாரணம்’ என்று தன்னை அழைத்துக் கொண்ட ஸ்ரீதரன், ‘உம்மா எனக்கும் ஜாஃபருக்கும் ஒன்றாக தாய்ப்பால் கொடுத்ததை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்’ என்று கூறினார். ஜாஃபர் சுபைதா பெற்றெடுத்த குழந்தை.

மற்றவர்களுக்கு உதவி செய்வதில் பெயர்பெற்ற சுபைதாவுக்கு, சக்கி வீட்டு வேலைக்கு உதவி செய்பவர் என்பதை விட அவர் ஒரு நல்ல துணையாக இருந்தார். நான்காவது குழந்தை கர்ப்பமாக இருந்தபோது சக்கி இறந்தார். சுபைதாவும் அவரது கணவர் அப்துல் அஜீஸ் ஹாஜியும், அப்போது குழந்தையாக இருந்த ஸ்ரீதரன் உட்பட அவரது மூன்று குழந்தைகளை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். ஸ்ரீதரனைப் பெற்ற தந்தை, தனது குழந்தைகளை ஆதரிக்க முடியாததால், சுபைதா அந்த குழந்தைகள் தனது குடும்பத்துடன் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று உணர்ந்தார்.

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் வசித்து வந்த இந்த தம்பதியினர் மூவரையும் முஸ்லீம் மதத்திற்கு மாற்றாமல் தங்களது சொந்த மூன்று குழந்தைகளுடன் சேர்த்து வளர்த்தனர். பின்னர், அவர்கள் ஸ்ரீதரனின் சகோதரிகளான லீலா மற்றும் ரமணி ஆகியோரை இந்து முறைப்படி திருமணம் செய்து கொடுத்தனர்.

“என்னால் இந்தப் படத்தை முழுவதுமாகப் பார்க்கவே முடியாது… நான் எப்போதுமே உடைந்துபோய் இடையில் விட்டுவிடுவேன்… இன்றுதான் முதன்முறையாக முழுவதுமாகப் பார்த்தேன்… (நான்) உம்மாவை மிகவும் நேசித்தேன்…” என்று ஸ்ரீதரன் கூறினார்.

டெல்லியில் சஃப்தர் ஹஷ்மி மெமோரியல் டிரஸ்ட் (SAHMAT) மற்றும் ஜனசம்ஸ்கிருதி என்ற சமூக-கலாச்சார அமைப்பினால் இந்தப் படம் திரையிடப்பட்டது. டெல்லியில் படம் திரையிடப்படுவதில் முக்கியப் பங்கு வகித்த நாடக ஆசிரியரும் இயக்குநருமான மறைந்த சப்தர் ஹஷ்மியின் நண்பரான செரியன் வி.கே கூறுகையில், “தி கேரளா ஸ்டோரி பட விவாதத்தின் போது, எனது நண்பர் சித்திக் உருவாக்கிய இந்த உண்மையான கேரளக் கதையைத் திரையிட வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். இது ‘தி கேரளா ஸ்டோரி’க்கு எதிரானது அல்ல, ஏனென்றால், இது கேரள மக்களுக்கு இயல்பானது” என்று கூறினார்.

இயக்குனர் சித்திக் பரவூர் கூறுகையில், “அன்பு மற்றும் மனிதாபிமானத்தைப் பேசும் கதைகளைத் தேடுகிறேன்.” என்று கூறினார்.

நான் வேறொரு திரைப்பட இயக்குனருக்கு எதிராக தனது படைப்பை நிறுத்துபவன் அல்ல என்று கூறிய இயக்குனர் சித்திக் பரவூர், “இது ‘தி கேரளா ஸ்டோரி’ அல்லது வேறு எந்த படத்திற்கும் எதிரானது அல்ல. உண்மையான கதை 48 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதரனின் உம்மா (மூன்று குழந்தைகளையும் தத்தெடுக்க) முடிவெடுத்தபோது தொடங்கியது.” என்று கூறினார்.

இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட தன்னிடம் போதுமான நிதி இல்லை என்று கூறிய சித்திக், “சகோதரத்துவம், ஒற்றுமை, மனித விழுமியங்களின் கதையை” தான் சொல்ல விரும்புவதாகக் கூறினார்.

தனது மனைவி தங்கம்மு, 17 வயது மகன் அன்ஷ்யாம் உடன் இப்போது மலப்புரத்தின் பரசேரியில் வசிக்கும் ஸ்ரீதரன், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், அவருடைய கனவில் உம்மா வரும்போதெல்லாம் அவருக்காக பிரார்த்தனை செய்ய மசூதிக்கு செல்வதாகக் கூறுகிறார்.

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தொடர்பான சர்ச்சை எழுந்தபோது, ​​கேரள முன்னாள் அமைச்சர் தாமஸ் ஐசக், “நாங்கள் அதைத் தடை செய்யவில்லை. அது முக்கியமில்லை. கேரளாவில் பலர் இதைப் பார்ப்பதில்லை… சுபைதாக்களும் ஸ்ரீதரன்களும் இன்னும் கேரளாவில் வாழ்கிறார்கள்” என்று ட்வீட் செய்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment