/tamil-ie/media/media_files/uploads/2018/07/Narendra-modi.jpg)
Narendra modi on Guinness Record
கோவாவில் செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியினர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இணைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறார்கள்.
கோவா மாநிலத்தின் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சங்கல்ப் அமோன்கர் “அதிக வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் என்ற சாதனைக்காக எங்கள் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை பரிந்துரை செய்கிறோம்” என்று இங்கிலாந்தில் செயல்படும் கின்னஸ் அலுவலகத்திற்கு அஞ்சல் அனுப்பியுள்ளார்.
”42 பயணங்களில் சுமார் 52 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட எங்களின் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை கின்னஸ் சாதனைக்காக பரிந்துரைப்பதில் அதிக மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். இப்பயணங்களுக்காக சுமார் 355 கோடி ரூபாயினை அவர் செலவு செய்திருக்கிறார்” என்றும் அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
இது குறித்து அமோன்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில் “வருங்கால சந்ததியினருக்கு அவர் ரோல் மாடலாக செயல்படுவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை” என்று நகைக்கும் தொனியில் பதில் அளித்தார். மேலும் “மோடியின் ஆட்சியில் மிகப் பெரிய சாதனையே டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 69.03 என்று ஆனது தான். அதனால் தான், ஆசிய நாடுகளில் மிகவும் மோசமான பண மதிப்பினை உடைய நாடாக இந்தியா இருக்கிறது” என்றும் குறிப்பிட்டார்.
மோடி இந்தியாவில் இருப்பதை விட அதிக நேரம் வெளிநாடுகளில் தான் இருக்கிறார் என்பதை அவர் உணர்வதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று குறிப்பிட்டார் அமோன்கர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.