EPF Interest Rate : தொழிலாளர்களுக்கான பி.எப் வட்டிவிகிதம் ஆண்டுதோறும் மத்திய அரசால் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்த வட்டி விகித மாற்றம் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், வட்டி விகிதத்தை நிர்ணயிக்க தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் மற்றும் நிதித்துறை அமைச்சகத்தினிடையே பனிப்போர் நிலவி வருவதால், வட்டி விகித அறிவிப்பு தள்ளிப்போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பி.எப். வட்டி விகிதத்தை 8.65 சதவீதமாக உயர்த்தினால் 46 மில்லியன் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என்பதை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார், நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் எடுத்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 21ம் தேதி, ஐதராபாத்தில் நடைபெற்ற சென்ட்ரல் போர்ட் ஆப் டிரஸ்டிஸின் ஆலோசனை கூட்டத்தில் இந்த நிதியாண்டிற்கான வட்டிவிகித மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. 2018ம் நிதியாண்டில் பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதியாண்டில் இந்த வட்டி விகிதத்தை 8.65 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த வட்டிவிகித மாற்றத்திற்கு நிதித்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது. 2018-19ம் நிதியாண்டில் ரூ. 3,150 கோடி உபரி நிதியாக கிடைத்துள்ளதாக நிதித்துறை அமைச்சகத்திடம் தெரிவித்துள்ள தொழிலாளர் நிதித்துறை அமைச்சகம், நடப்பு நிதியாண்டில் வட்டி விகிதத்தை 8.65 சதவீதமாக மாற்ற வேண்டுகோள் வைத்துள்ளது.
பாரதிய மஜ்தூர் சங்க தேசிய செயலாளர் விர்ஜேஷ் உபத்யாய் தெரிவித்துள்ளதாவது, பி.எப் வட்டி விவகாரத்தில் நிதித்துறை அமைச்சகம் அறிவுரைகளை வழங்கவேண்டுமே தவிர, ஆணை பிறப்பிக்க இயலாது. பயனாளர்களுக்கு எவ்வளவு வட்டி வழங்க வேண்டும் என்று டிரஸ்டி குழு தான் முடிவு செய்ய வேண்டும்.
ஐஎன்டியூசி தலைவரும் டிரஸ்டி உறுப்பினருமான டாக்டர் ஜி. சஞ்சீவ ரெட்டி தெரிவித்துள்ளதாவது, உபரி நிதியை வைத்தே, 9 சதவீதம் வட்டி வழங்கமுடியும். தன்னிச்சையாக இயங்கி வரும் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தை, நிதித்துறை அமைச்சகம், தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்க கூடாது என்று அவர் கூறினார்.