Advertisment

ஜெயலலிதா மீதான அனுதாபம் இபிஎஸ்-ஓபிஎஸ்.ஸுக்கு கிடைக்காது : இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு கனிமொழி பேட்டி

ஜெயலலிதாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நம்பகமானவர்களாக இல்லை. எனவே இவர்களுக்கு எந்த அனுதாபமும் கிடைக்காது என கனிமொழி கூறினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kanimozhi, dmk, mk stalin, tamilnadu government, EPS and OPS

ஜெயலலிதாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நம்பகமானவர்களாக இல்லை. எனவே இவர்களுக்கு எந்த அனுதாபமும் கிடைக்காது என கனிமொழி கூறினார்.

Advertisment

நிதானமாக கேள்விகளை உள்வாங்குவது, பதில்களில் ஒரு தெளிவு, மேலோட்டமாக இல்லாமல் ஒவ்வொரு பிரச்னையையும் சற்றே ஆழமாக கொள்கை ரீதியாக அலசுவது... இதுதான் கனிமொழி கருணாநிதியின் அடையாளம்!

இந்தியன் எக்ஸ்பிரஸ் டெல்லி அலுவலகம் வந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி ‘ஐடியா எக்சேஞ்ச்’ நிகழ்வில், சீனியர் உதவி ஆசிரியர் மனோஜ் சி.ஜி மற்றும் ஆசிரியர் குழுவினருடன் நடத்திய உரையாடல் இது!

மனோஜ் சி.ஜி : அதிமுக-வின் சமீபத்திய நிகழ்வுகளால் திமுக எப்படி லாபம் அடைகிறது?

பதில் : திமுக லாபம் அடைவதாக கூற மாட்டேன். ஆனால் பொதுவாக ஆளும்கட்சி சீர்கேடுகளில் சிக்குகிற வேளையில், எந்த ஒரு எதிர்க்கட்சியும் அதில் பலன் பெறும். தமிழக மக்கள் அதிமுக மீதும், அரசு மீதும் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். பல வகையிலும் அவர்கள் பாதிக்கப்பட்டு, களைப்படைந்து திமுக-வை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

புதிதாக எந்தத் தொழிற்சாலையும் இல்லை. புதிய முதலீடு இல்லை. டெங்கு கொடூரத்தை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அங்கு நிலைமை மிக மோசமாக இருக்கிறது. அதை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஜெயலலிதாவின் நிர்வாக முறை, ஆட்சி ஆகியவற்றில் திமுக-வுக்கு மாறுபாடு உண்டு. ஆனால் ஜெயலலிதாவுக்கு வாக்களித்த மக்களே இவர்களை அங்கீகரிப்பதாக நான் நினைக்கவில்லை. முன்னாள் முதல்வருக்கு (ஜெயலலிதாவுக்கு) என்ன நேர்ந்தது? அவரது மருத்துவ நிலை என்ன? அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை என்ன? என்பதில்கூட பொய் சொன்னதாக மொத்த அமைச்சரவையும் ஒப்புக் கொள்கிறது.

ஒரு வளர்ச்சியடையும் மாநிலமாக நாங்கள் இருந்தோம். பொருளாதார ரீதியாகவும், சமூக வெளிப்பாடுகளிலும் சிறந்த செயல்பாட்டை கொண்டிருந்தோம். இதர மாநில மக்கள் தமிழ்நாட்டை உதாரணமாக பார்த்தார்கள். ஆனால் இப்போது தவறான காரணங்களுக்காக தேசிய அளவிலான ஊடகங்களின் கவனத்தை தமிழ்நாடு பெற்றுக் கொண்டிருப்பது வருத்தம் தருகிறது.

மனோஜ் சி.ஜி : ஜெயலலிதாவுக்கான அனுதாபம் எப்படி இருக்கிறது? அடுத்த தேர்தலில் அதன் தாக்கம் இருக்காதா?

பதில் : அனுதாபமே இல்லை என நான் கூறவில்லை. மக்கள் கோபமாக இருக்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு என்ன நிகழ்ந்தது? என அறிய விரும்புகிறார்கள். அவரை மரியாதையாகவும், அன்பாகவும் வைத்திருந்தார்கள். ஆனால் அனுதாபம் என பார்க்கையில், இப்போதைய அதிமுக நிர்வாகிகளை ஜெயலலிதாவின் விசுவாசிகளாக யாரும் பார்க்கவில்லை. அதுதான் உண்மை. அது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியாக இருந்தாலும் சரி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமாக இருந்தாலும் சரி!

ஜெயலலிதாவை சுற்றியிருந்த குடும்பத்தினர் மீதும் நிறைய கோபத்துடன் மக்கள் இருக்கிறார்கள். இவர்களை ஜெயலலிதாவுக்கு நம்பகமானவர்களாக மக்கள் பார்க்காத காரணத்தால், இவர்களுக்கு அனுதாபமும் கிடைக்காது.

ராவிஷ் திவாரி : ஜெயலலிதாவையும் அவரது அரசியலையும் எப்படி பார்க்கிறீர்கள்? உங்கள் மதிப்பீடு என்ன?

பதில்: அவர் ரொம்பவும் பலம் வாய்ந்த தலைவர். எம்ஜிஆர் மறைந்த பிறகு அந்தக் கட்சியை ஒருங்கிணைத்தார். நிறைய வழக்குகளை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. திமுக-வை சேர்ந்தவர் என்ற முறையில் அரசியலில் அவர் செயல்பட்ட முறைகளை நான் அங்கீகரிக்கவில்லை. உதாரணத்திற்கு, முந்தைய அரசு அறிமுகப்படுத்திய ஒவ்வொரு திட்டத்தையும் அவர் முடக்கிப் போட்டதை கூறலாம். எனவே எங்களுக்குள் வேறுபாடு உண்டு.

ஆனால் அவர் பலமும் செல்வாக்கும் கொண்ட தலைவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு அரசியல்வாதியை அவர் ஆணா, பெண்ணா என்ற அளவுகோலை வைத்து நீங்கள் பார்க்க முடியாதுதான். ஆனா ஒரு பெண் அரசியலில் இருப்பதிலும், முடிவுகளை எடுக்கும் இடத்தில் இருப்பதிலும் கூடுதல் சிரமங்கள் இருப்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அதை அவர் செய்தார். அந்த வகையில் அவர் தனது இலக்கை அடைந்தவர்.

(அதிமுக-வின் பலவீனங்களை பயன்படுத்தி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர திமுக-வால் முடியவில்லையா? என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு கனிமொழியின் பதில், நாளை...)

தமிழில் : ச.செல்வராஜ்

 

Mk Stalin Dmk M Karunanidhi Kanimozhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment