Ericsson Case Anil Ambani found guilty : ஜியோ வருவதற்கு முன்பு வரை ரிலையன்ஸ் கம்யூனிகேஷனை நடத்தி வந்தவர் அனில் அம்பானி. தொலைத் தொடர்பு வர்த்தகத்தில் எரிக்சன் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தது ரிலையன்ஸ் நிறுவனம்.
கடனில் தத்தளித்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்
ஆனால் பல்வேறு காரணங்களால் நிறுவனம் நஷ்டமடைந்தது. மேலும் 45 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடனில் இருந்தது அந்த நிறுவனம். ரூ.24 ஆயிரம் கோடியை அனில் அம்பானிக்கு கொடுத்து ரிலையன்ஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார் அவருடைய சகோதரர் முகேஷ் அம்பானி.
இந்நிலையில் அனில் அம்பானி நடத்தி வந்த நிறுவனம், அலைவரிசையை பயன்படுத்தியதிற்கு ரூ.2,900 கோடியை தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கு அளிக்கவில்லை. அதே போல் எரிக்சன் நிறுவனத்திற்கும் 1,600 கோடி ரூபாய் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
நீதிமன்ற உதவியை நாடிய எரிக்சன் நிறுவனம், செட்டில்மெண்டிற்கு பிறகு ரூ.550 கோடி ரூபாயை பெற்றுக் கொள்ள ஒத்துக் கொண்டது எரிக்சன் நிறுவனம். அந்த தொகையை செலுத்த அனில் அம்பானிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஆண்டு செப்டம் 30ம் தேதிக்குள் அதனை வழங்க வேண்டும் என்று கூறியிருந்த உத்தரவை மீறினார் அம்பானி.
ஒரு கோடி ரூபாய் அபராதம்
உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியதாக அம்பானி மீதும் மீண்டும் வழக்கு பதிவு செய்தது எரிக்சன் நிறுவனம். டிசம்பர்15க்குள் 12% வட்டியுடன் கடனை திருப்பி அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனையும் மீறியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது எரிக்சன் நிறுவனம்.
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முறையாக கடனை திருப்பி செலுத்த வேண்டும் இல்லை மூன்று மாதம் சிறை தண்டனை பெற வேண்டும் என்று கூறி உத்தரவிட்டது.
இதன்படி அடுத்த நான்கு வாரங்களுக்குள் 453 கோடி ரூபாயை அனில் அம்பானி திருப்பி செலுத்த வேண்டும். அதே போல் உச்ச நீதிமன்ற உத்தரவை உதாசீனம் செய்ததால் 1 கோடி ரூபாயை அபராதம் செலுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : ஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்