நெறிமுறைக் குழு வரைவு அறிக்கை; மஹுவா மொய்த்ராவை மக்களவையில் இருந்து வெளியேற்ற பரிந்துரை
நெறிமுறைக் குழு இன்று கூடி வரைவு அறிக்கையை ஏற்று, பின்னர் சபாநாயகருக்கு அனுப்பும்; சி.பி.ஐ விசாரணைக்கு லோக்பால் பரிந்துரைத்தாக கூறும் நிஷிகாந்த் துபேக்கு மஹுவா மொய்த்ரா பதிலடி
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா மீது பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே முன்வைத்த, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்த மக்களவையின் நெறிமுறைக் குழு, தனது வரைவு அறிக்கையில் 17வது மக்களவையில் இருந்து மஹூவா மொய்த்ராவை வெளியேற்ற பரிந்துரைத்ததாக அறியப்படுகிறது.
இந்த நெறிமுறைக் குழு வியாழக்கிழமை கூடி அறிக்கையை ஏற்கும். பின்னர் மக்களவை சபாநாயகருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும்.
Advertisment
Advertisements
வரைவு அறிக்கை, நாடாளுமன்றக் குழுக்களின் நடவடிக்கைகளின் ரகசியத்தன்மையைக் கையாளும் மக்களவையில் நடைமுறை மற்றும் நடத்தை விதிகளின் விதி 275 ஐ மீறியதற்காக பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலிக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் அறியப்படுகிறது.
இந்த மாத தொடக்கத்தில் நடந்த கூட்டத்தில் நெறிமுறைக் குழுத் தலைவர் வினோத் குமார் சோங்கரின் கேள்விக்கு ஆட்சேபனை தெரிவித்த டேனிஷ் அலி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களின் பெயர்களை அறிக்கை குறிப்பிடுகிறது.
நெறிமுறைக் குழுவில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் உள்ள 15 பேர் கொண்ட குழுவின் பரிந்துரைகளை ஏற்காமல், கருத்து வேறுபாடுகளை சமர்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹூவா மொய்த்ரா மற்றும் ஐந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களான டேனிஷ் அலி, காங்கிரஸின் உத்தம் குமார் ரெட்டி மற்றும் வி வைத்திலிங்கம், சி.பி.எம் கட்சியின் பி.ஆர் நடராஜன் மற்றும் ஜே.டி.யு.,வின் கிரிதாரி யாதவ் ஆகியோர் நவம்பர் 2 அன்று நெறிமுறைக் குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
நல்கொண்டாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., உத்தம் குமார் ரெட்டி, தெலுங்கானாவில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதால், நவம்பர் 9-ம் தேதி கூட்டத்தை ஒத்திவைக்குமாறு நெறிமுறைக் குழுத் தலைவர் வினோத் குமார் சோங்கருக்கு கடிதம் எழுதியுள்ளதாகக் கூறினார்.
தெலுங்கானாவில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்வதை பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், நெறிமுறைக் குழுவின் கூட்டம் நவம்பர் 6 முதல் நவம்பர் 9 வரை மாற்றப்பட்டதாக மஹூவா மொய்த்ரா செவ்வாயன்று கூறியிருந்தார்.
இதற்கிடையில், மஹூவா மொய்த்ரா மீதான தனது புகாரை லோக்பால் அமைப்பு சி.பி.ஐ விசாரணைக்கு அனுப்பியதாக நிஷிகாந்த் துபே கூறினார்.
"லோக்பாலின் விசாரணை அமைப்பான சி.பி.ஐக்கு புகாரை அனுப்பியதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்" என்று நிஷிகாந்த் துபே தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் மஹூவா மொய்த்ரா தனது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மீடியாக்கள் என்னை அழைத்ததற்கு - எனது பதில்: 1. சி.பி.ஐ முதலில் ₹13,000 கோடி அதானி நிலக்கரி ஊழல் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும். 2. உள்துறை அமைச்சக அனுமதியுடன் இந்திய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை வாங்கும் அதானி நிறுவனங்கள் எஃப்.பி.ஐ நிறுவனங்களுக்கு (inc Chinese&UAE) எப்படி சொந்தமானது என்பது தேசிய பாதுகாப்பு பிரச்சினை. பிறகு சி.பி.ஐ எனது வீட்டிற்கு வருவதை வரவேற்கிறேன், வந்து என் செருப்புகளை எண்ணுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
X தளத்தில் வெளியிட்ட மற்றொரு பதிவில், "லோக்பால் இன்னும் உயிருடன் இருக்கிறதா?" என்று கூறினார்.
மஹூவா மொய்த்ரா சம்பந்தப்பட்ட கேள்வி கேட்க பணம் பெற்ற குற்றச்சாட்டுகள் கடந்த மாதம் நிஷிகாந்த் துபே இரண்டு கடிதங்களை எழுதிய பிறகு வெளிவந்தன - ஒன்று ஹிரானந்தானி குழுமத்தின் நலனைப் பாதுகாக்க மஹூவா மொய்த்ரா லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் இருப்பதாகக் கூறி லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதினார்; மற்றொன்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவிடம், மக்களவைக்கான மஹூவா மொய்த்ராவின் உள்நுழைவுச் சான்றுகளின் ஐ.பி முகவரிகளை வேறு யாராவது அணுகியிருக்கிறார்களா என்பதைச் சரிபார்க்கும்படி அவரை வலியுறுத்தினார்.
மஹூவா மொய்த்ராவுக்கு எதிரான புகார் தொடர்பாக நிஷிகாந்த் துபே மற்றும் வழக்கறிஞர் ஜெய் அனந்த் தெஹாத்ராய் ஆகியோரிடம் நெறிமுறைக் குழு விசாரணை நடத்தியது.
மறுபுறம், நெறிமுறைக் குழுவிடம் ஹிரானந்தானி உறுதிமொழிப் பத்திரத்தில், "தேவைப்படும் போது அவர் சார்பாக நேரடியாக கேள்விகளை பதிவிட" முடியும் வகையில், மஹூவா மொய்த்ரா தனது பாராளுமன்ற உள்நுழைவு மற்றும் கடவுச்சொல்லை தனக்கு வழங்கியதாகக் கூறினார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில், மஹூவா மொய்த்ரா தனது பாராளுமன்ற உள்நுழைவு மற்றும் கடவுச்சொல் விவரங்களை ஹிரானந்தனியிடம் கொடுத்ததாக ஒப்புக்கொண்டார், ஆனால் சி.பி.ஐ.,க்கு ஜெய் அனந்த் தெஹாத்ராய் அளித்த புகாரில் கூறியது போல், அவரிடம் இருந்து பணம் பெறவில்லை என்று உறுதியாக மறுத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“