அசாம் மாநிலத்தில் பாஜக வேட்பாளர் ஒருவரின் காரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் எடுத்து செல்வது போன்று வீடியோ வெளியான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
அசாம் மாநிலத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில் வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரங்களுக்கு பிறகு பதர்கண்டி தொகுதி பாஜக வேட்பாளர் கிருஷ்ணேந்து பால் என்பவர் காரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை எடுத்து செல்வது போன்ற ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவை அசாமைச் சேர்ந்த பத்திரிகையாளர் அதானு புயான் என்பவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து “பதர்கண்டியில் நிலைமை பதட்டமாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மீது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் தனியார் வாகனங்களில் பாஜக வேட்பாளர்களோ அல்லது அவர்களை சார்ந்தவர்களோ ஈவிஎம் மெஷின்களை எடுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாவது வழக்கமாகி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ காட்சிகள் ஒரு குற்ற நிகழ்வாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும் பின்னர் காரமின்றி கைவிடப்படுகிறது.மேலும் இந்த வீடியோவை வெளி கொண்டுவருபவர்களை பாஜக சார்பு ஊடகங்கள் வேறுவிதமாக காட்சிப்படுத்துகின்றன.தொடர்ந்து இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாவதாகவும் ஆனால் அவை குறித்து எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மின்னணு வாக்கு எந்திரங்களைப் பயன்படுத்தும் முடிவை தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மற்றும் புகார்களின் அடிப்படையில் ஆணையம் உறுதியோடு தீர்வு காண வேண்டும். இதனை அனைத்து தேசிய கட்சிகளும் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்
அசாமில் வியாழக்கிழமை 9 சட்டமன்ற தொகுதிக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. மாலை 6 மணி நிலவரப்படி 73.03 சதவீதம் வாக்குகள் பதிவானது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil