Advertisment

இடஒதுக்கீடு சட்டத்தை வரவேற்ற பா.ஜ.க., காங்கிரஸ்.. மோசமான அநீதி என்று விமர்சித்த தி.மு.க.

விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டு, 2014க்குள் மசோதா தயாராகிவிட்டது. இந்த மசோதாவை நிறைவேற்ற மோடி சர்க்கார் ஐந்து ஆண்டுகள் எடுத்தது- காங்கிரஸ்

author-image
WebDesk
New Update
supreme court

BJP, Congress claim credit for quota law; DMK says ‘gross injustice’

பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் 10 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை பாஜகவும், காங்கிரஸும் வரவேற்றன.

Advertisment

தமிழ்நாட்டில் உள்ள திமுக இதை மோசமான அநீதி மற்றும் சமூக நீதிக் கொள்கைகளுக்கு எதிரானது என்று கூறியது, அதே நேரத்தில் JD (U) மற்றும் BSP கட்சிகள் தீர்ப்பை வரவேற்றன. கடந்த காலத்தில்10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்த RJD கட்சி, சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான அழைப்பை மீண்டும் வலியுறுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்தியது.

அமா்வில் இடம்பெற்றிருந்த 5 நீதிபதிகளில் 3 போ் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்றும், மற்ற இருவா் இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும் தீா்ப்பளித்தனா். இறுதியில் அரசியலமைப்பின் 103வது திருத்தச் சட்டம், 2019 இன் செல்லுபடியை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

இந்த தீர்ப்பு ஏழைகளுக்கு சமூக நீதி வழங்கும் நரேந்திர மோடியின் மிஷனுக்கு கிடைத்த வெற்றி என்று கூறிய பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் கௌரவ் பாட்டியா, எந்த சமூகத்தினரின் உரிமைகளையும் பறிக்காமல் பாஜகவின் அந்தியோதயா இலக்கை நிறைவேற்ற முடியும் என்பதை மோடி நிரூபித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் நோக்கம் ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பது, அவர்களைப் பலப்படுத்துவது மற்றும் அவர்களை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதாகும் என்றார்.

காங்கிரஸும், 10% இடஒதுக்கீட்டை வழங்கும் அரசியலமைப்பு திருத்தத்தை வரவேற்றது. அக் கட்சியின் தகவல் தொடர்புப் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், இந்த தீர்ப்பை வரவேற்று வெளியிட்ட அறிக்கையில்: 2005-06ல் மன்மோகன் சிங் அரசாங்கம், சின்ஹோ கமிஷனை நியமித்ததன் மூலம் தொடங்கப்பட்ட செயல்முறையின் விளைவுதான் இந்தத் திருத்தம். அது ஜூலை 2010 இல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதன்பின், விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டு, 2014க்குள் மசோதா தயாராகிவிட்டது. இந்த மசோதாவை நிறைவேற்ற மோடி சர்க்கார் ஐந்து ஆண்டுகள் எடுத்தது. சாதி அடிப்படையிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான தனது ஆதரவையும் கட்சி மீண்டும் வலியுறுத்தியது.

ஆர்ஜேடி கட்சியும் ஜாதிக் கணக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தது, அதன் எம்பி மனோஜ் ஜா இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், இது ஒரு பிளவு தீர்ப்பு. உச்சவரம்பு இப்போது போய்விட்டது, எனவே, இடஒதுக்கீடு மக்கள் தொகையில் பங்கு விகிதாசாரமாக இருக்க வேண்டும். அரசாங்கங்கள் சமூக நீதியை ஆழப்படுத்தவும் விரிவுபடுத்தவும் வேண்டும். இந்தத் தீர்ப்பு அதற்கான வாய்ப்பைத் திறந்துள்ளது என்றார்.

இந்தத் தீர்ப்பை ஆதரித்து, ஜேடியு மூத்த தலைவரும், பீகார் நிதியமைச்சருமான விஜய் குமார் சவுத்ரி பாட்னாவில் கூறியதாவது: பொருளாதரத்தில் நலிந்த பிரிவினருக்கு ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்திய முன்னோடி மாநிலங்களில் பீகார் ஒன்றாகும் (1978 இல்). உச்ச நீதிமன்றம் கூறியது முதல்வர் நிதிஷ் குமாரின் கொள்கைகளுடன் மிகவும் ஒத்துப்போகிறது. இடஒதுக்கீட்டிற்கான பொருளாதார அளவுகோலுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம் என்றார்.

மக்கள்தொகை அடிப்படையிலான இடஒதுக்கீடு விவகாரத்தில் கூட்டணிக் கட்சியான RJD உடன் JD(U) கைகோர்த்தது. அக்கட்சியின் தலைவர் கேசி தியாகி, RJD முன்மொழிந்ததை நாங்கள் எதிர்க்கவில்லை. நாங்கள் ஏற்கனவே பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பை தொடங்கிவிட்டோம், அது நாடு முழுவதும் நடக்க வேண்டும் என்று கூறினார்.

எவ்வாறாயினும், இந்த தீர்ப்புக்கு மிகவும் கடுமையான எதிர்ப்பு, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் இருந்து வந்தது, அவர் தீர்ப்பை ’சமூக நீதிக்கான நூற்றாண்டுகால போராட்டத்திற்கு பின்னடைவு’ என்று கூறினார்.

சமூக நீதியை ஆதரிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறிய ஸ்டாலின், 2019ல் மத்திய அரசு முதன்முதலில் இடஒதுக்கீட்டை முன்மொழிந்ததில் இருந்து நீதிமன்றத்தில் போராடி வருகிறோம். இன்றைய உத்தரவு குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து, இந்தியாவின் சமூக நீதி அமைப்புகளைப் பாதுகாக்க எங்களின் முயற்சிகளை மேற்கொள்வோம் என்றார்.

பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தத்தை ஆதரித்த சிபிஐ(எம்) கட்சி, அப்போது பல கேள்விகளை எழுப்பிய போதிலும், திங்களன்று, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான ஒதுக்கீட்டிற்கு அரசாங்கம் நிர்ணயித்த ரூ.8 லட்சம் ஆண்டு வருமான அளவுகோலைத் திருத்தியமைத்து குறைக்க வேண்டும். அப்போதுதான் தேவைப்படுபவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று கோரியது.

உத்தர பிரதேசத்தில், BSP கட்சியும் அரசியலமைப்பு திருத்தத்தை வரவேற்றது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் தரம்வீர் சவுத்ரி கூறுகையில்; இந்த ஒதுக்கீடு, கட்சியின் நீண்டகால கோரிக்கையாகும். மாயாவதி முதன்முதலில் அத்தகைய ஒதுக்கீட்டைக் கோரி அரசாங்கத்திற்கு கடிதம் எழுதினார், அதைத் தொடர்ந்து அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டது. SC, ST மற்றும் OBC களுக்கு ஏற்கனவே ஒதுக்கீடு உள்ளது, எனவே பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளும் இடஒதுக்கீட்டின் பலனைப் பெறுவது நல்லது.

ஆனால் கட்சித் தலைவர் மாயாவதி இது தேர்தல் ஸ்டண்ட் என்று விமர்சித்தார்.

பிஜேடி கட்சியும் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளது. பாராளுமன்றத்தில் சட்டத்தை கட்சி ஆதரித்தது. அதை தற்போது உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. நாங்கள் அதை வரவேற்கிறோம் என்று பிஜேடி எம்பி பினாகி மிஸ்ரா கூறினார்.

டிஎம்சி எம்பி சவுகத் ராய் இந்த தீர்ப்பு ஜனநாயகத்திற்கு நல்லது என்று கூறினார். தீர்ப்பின் விளைவாக, உயர் சாதியினரில் பொருளாதார ரீதியாக நலிவடைந்தவர்கள் பயனடைவார்கள். சமூகத்தில் பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்த இந்த தீர்ப்பு பெரிதும் உதவும், என்றார்.

இந்த தீர்ப்புக்கு தெற்கில் உள்ள சில பிராந்திய கட்சிகளின் ஆதரவும் இருந்தது.

நாங்கள் நாடாளுமன்றத்தில் மசோதாவை ஆதரித்தோம்... முன்னேறிய வகுப்பினரிடையே உள்ள ஏழைகளின் மேம்பாட்டிற்கு இது அவசியம். நாங்கள் ஏற்கனவே கல்வியில் அதை செயல்படுத்தி வருகிறோம்,' என்று டிஆர்எஸ் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பி வினோத் குமார் கூறினார்.

ஆந்திரப் பிரதேசத்தில் YSRCP தலைவரும் சமூக நலத்துறை அமைச்சருமான எம் நாகார்ஜுனா, ஜூன் 2019 இல் அரசாங்கத்தை அமைத்த உடனேயே மாநில அரசு கல்வி நிறுவனங்களில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்தத் தொடங்கியதாக தெரிவித்தார்.

செய்தி: லிஸ் மேத்யூ, மனோஜ் சி ஜி- புதுதில்லி, சென்னையில் அருண் ஜனார்த்தனன், பாட்னாவில் சந்தோஷ் சிங், ஹைதராபாத்தில் ஸ்ரீனிவாஸ் ஜன்யாலா.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment