முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் (ஓய்வு பெற்றவர்) “இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ராஜ்யசபா நியமனத்தை ஏற்றுக்கொள்வது நிச்சயமாக நீதித்துறையின் சுதந்திரத்தில் சாமானிய மக்களின் நம்பிக்கையை உலுக்கியுள்ளது என்றும் இது இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புகளில் ஒன்றாகும்” என்று செவ்வாய்க்கிழமை கூறினார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தால் திங்கள்கிழமை முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மேலவைக்கு பரிந்துரைக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, நீதிபதி குரியன் ஜோசப் பதில் அளிக்கையில், முன்னாள் சி.ஜே.ஐ நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் பக்கச்சார்பற்ற தன்மை பற்றிய உன்னதமான கொள்கைகளை எப்படி சமரசம் செய்துகொண்டார் என்பதைக் கண்டு அவர் ஆச்சரியப்பட்டதாகக் கூறினார்.
முன்னதாக, நீதிபதி ரஞ்சன் கோகாயின் நியமனத்திற்கு பதிலளித்த நீதிபதி லோகூர், இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், இந்த நடவடிக்கை நீதித்துறையின் சுதந்திரம், பக்கச்சார்பற்ற தன்மை மற்றும் ஒருமைப்பாட்டை மறுவரையறை செய்துள்ளது என்று கூறினார். மேலும், அவர் கடைசி கோட்டையும் விழுந்ததா? என்று கேள்வி எழுப்பினார்.
நீதிபதி குரியன் ஜோசப், ஓய்வுக்குப் பிறகு நீதிமன்றங்களை மூழ்கடிக்கும் வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மத்தியஸ்தம் செய்து முடித்து வைத்தல் அல்லது சமரச நடுவர்மன்றம் தொடர்பான பணிகளை மேற்கொண்டவர். அவரும் இதே போன்று சுட்டிக்காட்டி உணர்வுகளை எதிரொலித்தார். “இந்த தருணம் மக்களின் நம்பிக்கை அசைந்திருக்கிறது. நீதிபதிகள் மத்தியில் ஒரு பகுதியினர் பக்கச்சார்பானவர்கள் அல்லது எதிர்பார்க்கிறார்கள் என்ற கருத்து இருக்கும் தருணத்தில், உறுதியான அஸ்திவாரங்களில் கட்டப்பட்ட தேசத்தின் டெக்டோனிக் சீரமைப்பு அசைக்கப்படுகிறது.” என்று குரியன் ஜோசப் கூறினார்.
ஜனவரி 2018-இல், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜோசப், ரஞ்சன் கோகாய், ஜே.செலமேஸ்வர் மற்றும் மதன் பி லோகூர் ஆகியோர் முன்னொருபோதும் இல்லாத நிகழ்வாக செய்தியாளர் சந்திப்பை நடத்தி, அப்போதைய சி.ஜே.ஐ தீபக் மிஸ்ராவின் நடத்தை குறித்து உச்ச நீதிமன்றத்தில் முக்கியமான வழக்குகளை ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பினர்.
நீதிபதி குரியன் ஜோசப், நீதிபதி ரஞ்சன் கோகோய், நாங்கள் மூவரும் ஜனவரி 12, 2018 அன்று அளித்த அறிக்கையில் “நாங்கள் தேசத்திற்கு எங்கள் கடனை விடுத்துள்ளோம்” என்று கூறியதை நினைவு கூர்ந்தார்.
மேலும், “ஒரு காலத்தில் நீதித்துறையின் சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கான உறுதியான தைரியத்தை வெளிப்படுத்திய நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் பக்கச்சார்பற்ற தன்மை பற்றிய உன்னதமான கொள்கைகளை எவ்வாறு சமரசம் செய்தார் என்பதில் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.” நீதிபதி குரியன் ஜோசப் கூறினார்.
நீதித்துறையை முற்றிலும் சுயாதீனமானதாகவும், ஒன்றுக்கொன்று சார்ந்திருக்காததாகவும் மாற்றுவதற்காக 1993 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் கொலீஜியம் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது என்று ஜோசப் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
தொடர்ந்து பேசிய நீதிபதி குரியன் ஜோசப், “இந்த அடித்தளத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதாக நாட்டிடம் சொல்ல முன்னோடியில்லாத வகையில் நான் பகிரங்கமாக வெளியே வந்தேன். இப்போது அச்சுறுத்தல் பெரியதாக இருப்பதாக நான் உணர்கிறேன். ஓய்வுக்குப் பிறகு எந்தப் பதவிகளையும் எடுக்க வேண்டாம் என்று நான் முடிவு செய்ததற்கு இதுவும் காரணமாக இருந்தது” என்று தெரிவித்தார்.
இதனிடையே, முன்னாள் சிஜேஐ நீதிபதி கோகோய் (ஓய்வு) செவ்வாய்க்கிழமை அவர் ஏன் மேல் சபைக்கான வேட்புமனுவை ஏற்றுக்கொண்டார் என்பதை விரைவில் வெளிப்படுத்துவதாகக் கூறினார். “நான் நாளை டெல்லிக்குச் செல்வேன். நான் முதலில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்கிறேன். பின்னர், நான் இதை ஏன் ஏற்றுக்கொண்டேன். நான் ஏன் மாநிலங்களவைக்கு செல்கிறேன் என்று விரிவாக ஊடகங்களுடன் பேசுவேன்.” என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.