இஸ்ரோவில் பணி புரிந்து வந்தவர் விஞ்ஞானி நம்பி நாராயணன். அவர் இந்தியாவில் தயாரிக்கப்படும் ராக்கெட்டுகள் தொடர்பான க்ரையோஜெனிக் தொழில் நுட்பத் தகவல்களை பாகிஸ்தானுக்கு விற்றுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதியப்பட்டது.
அதனை சிபிஐ அமைப்பு விசாரணை செய்து, அவர் மீது குற்றம் இல்லை என்று கூறிவிட்டது. அதனைத் தொடர்ந்து நம்பி மீது போலியான வழக்கு பதிவு செய்து அவரின் மரியாதைக்கு குந்தகம் விளைவித்ததிற்காக நஷ்ட ஈடாக ரூபாய் 50 லட்சத்தினை தர வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
நம்பி நாராயணன் கைது
பாகிஸ்தானிடம் பணம் வாங்கிக் கொண்டு இந்தியாவின் ராக்கெட் தொழில் நுட்ப தகவல்களை விற்பனை செய்ததாக அவர் மீது 1994ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் மாலத்தீவு உளவுப் பிரிவைச் சேர்ந்த மரியம் ரஷீதா, ஃபவுஸியா ஹூசேன் மூலமாக விற்பனை செய்தார் என்று கூறி 1994ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி கைது செய்யபட்டார்.
அவருடன் சேர்த்து சந்திர சேகரன் மற்றும் எஸ்.கே ஷர்மா ஆகியோரை கைது செய்தார்கள் கேரள காவல்துறையினர். 50 நாட்களுக்கும் மேலாக சிறை வாசம் அனுபவித்த நம்பி நாராயணனுக்கு சிறையில் பலவிதமான தொல்லைகள் தரப்பட்டன. பின்னர் இந்த விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. விசாரணையின் இறுதியில் நம்பி நாராயணன் குற்றமற்றவர் என்பது நிரூபிக்கப்பட்டது.
மான நஷ்ட வழக்கு
இதனைத் தொடர்ந்து தன்னை வழக்கில் கைது செய்த காவல்துறை அதிகாரிகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமென சட்ட ரீதியாக போராடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன்னை கைது செய்த காவல்துறை அதிகாரிகளான சிபி மேத்யூஸ், விஜயன் ஆகியோர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் நஷ்ட ஈடு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார் நம்பி நாராயணன்.
இன்று நீதிபதி டிகே ஜெய்ன் தலைமையில் வெளியிடப்பட்ட உத்தரவில் நம்பி நாராயணின் மரியாதைக்கு குந்தகம் விளைவித்த காரணத்தால் கேரள அரசு அவருக்கு 50 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.