Expert had told House panel on CAB : இந்திய நாடாளுமன்றத்தின் முன்னாள் மக்களவை பொதுச்செயலாளரும், இந்திய அரசியல் சாசனத்தின் துறைசார் வல்லுநருமான சுபாஷ் கேஷ்யாப் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் குறித்து தன்னுடைய கருத்துகளை பதிவு செய்துள்ளார். 2016ம் ஆண்டின் போதே பாராளுமன்ற கூட்டுக் குழுவில் இந்த சட்டத்தை மேற்பார்வையிட்டப்போது மதம் சார்ந்த கூறுகளை இணைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக கூறியுள்ளார். இந்து, சீக்கியர்கள், பார்சிகள் என்று குறிப்பிடப்படுவதற்கு பதிலாக ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர் என்று குறிப்பிடலாம் என்று அறிவுரை வழங்கியதாகவும் தெரிய வந்துள்ளது.
2016ம் ஆண்டு ஜாய்ண்ட் பாரிலிமெண்ட் கமிட்டியில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர் என்ற வார்த்தைகளே போதும். அந்த சட்ட திருத்தமும், என்னுடைய கருத்தும் ஒன்றைதான் கூறுகிறது. இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள் என்று பிரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனை கூறாமலே அந்த சட்டத்தின் மூலம் அடைய வேண்டிய இலக்கை அடைந்திருக்கலாம் என்று கூறுகிறார் கேஷ்யாப்.
Advertisment
Advertisements
இந்திய பாராளுமன்றத்தின் ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது மக்களவை செயலாளராக அவர் பணியாற்றியுள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்ற இந்த குடியுரிமை திருத்த சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த நீதிமன்றத்தை நாட வேண்டும் அல்லது நாடாளுமன்றம் இந்த சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
இந்திய அரசியல் சாசனம் தான் இந்த ஜனநாயக நாட்டின் முக்கிய மேல் அங்கமாக பாராளுமன்றத்தை முன் மொழிந்துள்ளது என்பதை இந்த சட்டத்திற்கு எதிராக போராடும் போராட்டக்காரர்கள் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். இந்திய அரசியல் சாசனத்தை நம்பும் நாம், இது போன்ற சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள இயலும் என்பதையும் உணர வேண்டும் என்பதை மேற்கோள் காட்டினார்.
மேலும் இந்த சட்டத்திற்கு எதிரான கேள்விகளை நீதிமன்றங்கள் மூலம் நாம் கேட்கலாம் அல்லது வருகின்ற தேர்தல்களில் மக்களவையில் தற்போது நிலவும் நிலைமை மாறிய பின்பு மாற்றங்களை உருவாக்கலாம். அல்லது புதிய திருத்தங்களை மேற்கொண்டு அதில் பெரும்பான்மை பெற முயற்சிகள் மேற்கொள்ளலாம் என்று கூறினார். இந்த திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தவர்கள் அவர்கள் அனைவரும் சிறுபான்மை வகுப்பினை சேர்ந்தவர்கள். நாடாளுமன்றத்தில் வாக்களித்துவிட்டு தற்போது வீதியில் இறங்கி போராடுபவர்கள் அரசியலில் ஆதாயம் பார்க்க முயல்பவர்கள் என்றும் அவர் சாடினார்.
அசாம் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ், 16வது நாடாளுமன்றத்தின் ஜாயிண்ட் பாரிலிமெண்ட் கமிட்டியில் உறுப்பினராக இருந்தார். அப்போது இந்த மசோதா தொடர்பாக தன்னுடைய மாறுபட்ட கருத்தினை முன்வைத்த அவர் கேஷ்யப்பின் “அகதிகளின் பிரச்சனைகளுக்கு அரசியல் சாசனம் வழியே தான் தீர்வு காண வேண்டும்” என்ற வாக்கியங்களை மேற்கோள் காட்டியுள்ளார். பாஜக ஏன் இப்படி ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும். அனைத்தும் அரசியல் ஆதாயத்திற்காக தான் என்றும் அவர் தன்னுடைய கருத்தினை பதிவு செய்தார்.
ஜாய்ண்ட் பாரிலிமெண்ட்ரி கமிட்டியின் கருத்து நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வைக்கப்பட்டது. கேஷ்யாப்பின் கருத்தினை, அவரின் பெயரில்லாமல் மேற்கோள்காட்டி அந்த கருத்து முன்வைக்கப்பட்டது. சிறுபான்மையினருக்கான அளவுகோல் என்ன என்பதை இந்திய அரசியல் சாசனம் நிறுவவில்லை. சிறுபான்மையினர் என்பது மதம் சார்ந்து மட்டுமல்லாமல், பல்வேறு சூழ்நிலைகள் சார்ந்தும் சிறுபான்மையினர் வரையறுக்கப்படலாம். ஒடுக்கபப்பட்ட சிறுபான்மையினர் என்று இந்த சட்டத்தில் மேற்கோள் காட்டினால் யாருக்கெல்லாம் உதவ நீங்கள் விரும்புகின்றீர்களோ அவர்கள் எல்லாம் இந்தசட்டத்தின் கீழ் வருவார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
குடியுரிமை (திருத்த) மசோதா முதன்முதலில் மக்களவையில் 2016 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அது ஜேபிசிக்கு பரிந்துரைக்கப்பட்டது. குழு தனது அறிக்கையை சமர்ப்பித்த பின்னர், CAB 2019 ஜனவரி 8 ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது, ஆனால் மாநிலங்களவையின் பரிசீலனை நிலுவையில் இருந்தது. மே மாதம் நடக்க இருந்த தேர்தலுக்காக 16 வது மக்களவை கலைக்கப்பட்ட பின்னர் இந்த மசோதா முடிந்தது. பின்பு மீண்டும் இந்த மசோதா 17ம் மக்களவையின் குளிர்கால அமர்வில் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் அதிக பெரும்பான்மையைக் கொண்டுள்ள பாஜக இதனை மிக எளிமையாக நிறைவேற்றியது. மாநிலங்களவையிலும் ஒருவாறாக கிடைத்த வாக்குகளை வைத்து இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.