பொது முடக்கநிலையில் இருந்து படிப்படியாக தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வரும் நிலையில், கோவிட் -19 தொடர்பான ஐ.சி.எம்.ஆர் ஆராய்ச்சி குழுவின் இரண்டு உறுப்பினர்கள் உட்பட நாட்டின் முக்கிய பொது சுகாதார வல்லுநர்கள் அரசின் நடவடிக்கையை விமர்சித்துள்ளனர்.
"இந்த கட்டத்தில் கோவிட்-19 தொற்றை அகற்ற முடியும் என்று எதிர்பார்ப்பது அர்த்தமற்றது. சமூக அளவிலான கொரோனா பரவல் ஏற்கனவே பெருவாரியான மக்கள் கூட்டங்களுக்கிடையே காணப்படுகிறது" என்று இந்திய பொது சுகாதார அமைப்பு , சமூக மருத்துவத்திற்கான இந்திய மருத்துவர்கள் சங்கம், தொற்றுநோயியல் நிபுணர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் கூட்டாக எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.
நாட்டில் மொத்த பாதிப்புகள் 1,73,763-ஐக் கடந்த போதும் சமூக அளவிலான பரவல் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 7,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது ஒரு நாள் பாதிப்பில் அதிகபட்ச உயர்வாகும். இருப்பினும், மருத்துவக் கண்காணிப்பில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை முதல் முறையாக குறைந்தது. வெள்ளிக்கிழமை 89,987 பேர் வெள்ளிக்கிழமை மருத்துவக் கண்காணிப்பில் இருந்தனர். சனிக்கிழமை இந்த எண்ணிக்கை 86,422 ஆக குறைந்தது.
மார்ச் 25 முதல் மே 30 வரை மிகக் கடுமையான தேசிய பொது முடக்கநிலையை இந்தியா அமல்படுத்தியது; இருப்பினும் இந்த கால கட்டத்தில் கொரோனா பாதிப்புகள் அதிவேகமடைந்தன. இந்தியாவின் செல்வாக்குமிக்க ஒரு அமைப்பின் மாடலிங் முறையின் பிரதிபலிப்பாக இந்த கடுமையான ஊரடங்கு அமைந்தது. எவ்வாறாயினும் அடுத்தடுத்த நிகழ்வுகள் மாடலிங் தெரிவித்த கணிப்புகளை கேள்விக்குறியாக்கின. மாடலிங் முறையை ஒப்பிடும்போது நோய் பரவல் இயக்கவியலை நன்கு புரிந்துகொள்ளக்கூடிய தொற்றுநோயியல் நிபுணர்களை இந்திய அரசு கலந்தாலோசித்திருந்தால், நிலைமை இன்னும் கட்டுக்குள் வந்திருக்கும் … ”என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
புதுடெல்லி எய்ம்ஸ் Community Medicine மையத்தின் தலைவருமான டாக்டர் சஷி காந்த், Community Medicine துறையின் முன்னாள் பேராசிரியர் டாக்டர் டி.சி.எஸ் ரெட்டி ஆகியோரும் இந்த கூட்டறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர். இருவரும் ஏப்ரல் 6-ம் தேதி அமைக்கப்பட்ட கோவிட் -19 க்கான தொற்றுநோயியல் மற்றும் கண்காணிப்பு பற்றிய ஐ.சி.எம்.ஆர் ஆராய்ச்சி குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர். டாக்டர் ரெட்டி அந்த குழுவுக்கு தலைமை தாங்குகிறார்.
சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் அனில் குமார், எய்ம்ஸ் சமூக மருத்துவம் பேராசிரியர் டாக்டர் புனீத் மிஸ்ரா, எய்ம்ஸ் சமூக மருத்துவ மையத்தின் கூடுதல் பேராசிரியர் டாக்டர் கபில் யாதவ் போன்றோரும் கூட்டறிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.
புலம்பெயர் தொழிலாளர்களை கையாண்ட விதம் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையை மேலும் கடினமாக்கியதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
பொது சுகாதாரம் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு தீர்வு காண மத்திய, மாநில, மாவட்ட அளவில் பொது சுகாதார நிபுணர்கள், நோய் தடுப்பு சுகாதார நிபுணர்கள், சமூக ஆய்வாளர்கள் அடங்கிய குழுவை அமைக்க கூட்டறிக்கை பரிந்துரைசெய்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.