Deeptiman Tiwary
Influence of Islamic State : இலங்கையில் குண்டு வெடிப்பு நடந்ததை தொடர்ந்து அங்கு மிகவும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. 250 நபர்கள் உயிரிழப்பிற்கு காரணமான முக்கிய குற்றவாளி ஒருவர் கணிசமான நாட்களை இந்தியாவில் கழித்திருப்பது பெரும் அச்சத்தையும் வருத்தத்தையும் மக்கள் மத்தியில் அளித்துள்ளது.
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் ஊடுருவல் குறித்து 2013ம் ஆண்டில் இருந்து இந்திய அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். சிரியாவில் உள்நாட்டுப் போர் மிகவும் உக்கிரமாக இருந்த காலக்கட்டத்தில் அங்கிருந்து, இந்திய அரசாங்கத்திற்கு ஒரு முக்கிய செய்தி அனுப்பிவைக்கப்பட்டது. அந்த செய்தியில், இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்கள், ஐ.எஸ். அமைப்பிற்கு ஆதரவாக சிரியாவில் போரிட்டு வருகின்றனர் என்று கூறப்பட்டிருந்தது.
மேலும் படிக்க : இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி : கேரளாவில் பல்வேறு இடங்களில் சோதனை… 6 பேர் கைது
இந்தியாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தடுத்து நிறுத்தப்பட்டது எப்படி ?
2014ம் ஆண்டு ஈராக்கில் இருந்த 39 இந்தியர்களை கடத்திச் சென்று கொலை செய்தது ஐஎஸ் அமைப்பு. அதன் பின்பு நடத்தப்பட்ட விசாரணையில் ஐ.எஸ். அமைப்பு இந்தியாவின் மீது தங்களின் பார்வையை வைத்துள்ளனர் என்றும், சில முக்கியமான நகரங்களில் தங்களின் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிவித்தனர்.
அதன் பின்பு, இந்தியாவில் இருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சிரியாவிற்கு சென்று ஐ.எஸ். ஆதரவாக போரிட சென்றனர். சிலரை சிரியாவிற்குள் நுழையும் போது கைது செய்தனர், சிலர் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பும் போது கைது செய்யப்பட்டு முறையாக கவுன்சிலிங்க் கொடுக்கப்பட்டது.
Influence of Islamic State in India
ஆரம்பத்தில் இருந்து அதி தீவிர எச்சரிக்கையுடன் ஐ.எஸ். அமைப்பில் இணைய இருக்கும் இளைஞர்கள் குறித்த ஆய்வினை நடத்தியது இந்திய அரசு. ஆன்லைனில் ஐ.எஸ். அமைப்பின் இணையம் மற்றும் அவர்கள் தரும் தரவுகளை காண்பவர்கள் வாயிலாக இந்த இளைஞர்களை அடையாளம் காண முடிந்தது. பின்னர் deradicalisation programme அவர்களுக்கு முறையான கவுன்சிலிங் அளிக்கப்பட்டு, எச்சரிக்கை செய்து விடப்பட்டனர். இதன் மூலம் ஆரம்பம் முதலே ஐ.எஸ். க்கு ஆதரவாக சிரியா செல்ல முயன்ற இளைஞர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
வீடியோகேமில் மிக கொடூரமாக காட்டப்படும் பேக்ரவுண்ட் செட்டிங்குகள் போன்றே பேக்ரவுண்ட்களை வைத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் பேசும் பேச்சுகளில் கவர்ந்திழுக்கப்பட்டு தீவிரவாதிகளாக மாறியவர்கள் தான் அதிகம் என்று கூறியது இந்திய புலனாய்வு முகமை.
ஐ.எஸ். அமைப்புகளால் ஈர்க்கப்படுபவர்களுக்கு கவுன்சிலிங் மட்டுமே தரும் அதிகாரிகள், தாக்குதலில் ஈடுபட்டவர்கள், மற்றும் தாக்குதலுக்காக திட்டங்கள் தயாரித்து தருபவர்கள் என மிக முக்கியமானவர்களை கைது செய்கிறது. மேலும் சிரியாவிற்கு செல்ல தொடர்ந்து முயற்சி செய்பவர்களையும் கைது செய்து வருகின்றனர்.
ஹைதராபாத்தில் உள்ள அப்துல்லா பஷித் என்பவர் மூன்று முறை சிரியா செல்ல முயற்சி செய்தார். இரண்டு முறை கைது செய்து வீட்டுக்கு அனுப்பி வைக்க, மூன்றாவது முறையாக முயற்சி செய்தார். அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் காவல்த்துறையினர்.
தென்னிந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தாக்கம் !
வட இந்தியாவில் அதிக அளவு மதக்கலவரங்கள் நடைபெற்றாலும் கூட, அதிக அளவில் ஐ.எஸ். அமைப்பிற்கு தென்னிந்தியாவில் இருந்தே ஆட்கள் சென்றுள்ளனர். இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், இந்தியாவில் இருந்து ஐ.எஸ். அமைப்பிற்கு சென்றவர்களில் 90% பேர் தென்னிந்தியர்கள்.
தாக்குதலுக்காக திட்டமிட்டவர்களில் பெரும்பாலானோரும் தென்னிந்தியர்களே. அவர்கள் தமிழகம், கேரளா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்ராவில் இருந்து கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இருந்து ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்த முதல் நபர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த, கடலூரைச் சேர்ந்த காஜா ஃபக்ரூதின் ஆவார். தமிழகத்தை சேர்ந்த இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது ஐ.எஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்டு சிரியாவிற்கு சென்றார்.
கேரளாவில் இருந்து சிரியாவிற்கு சென்ற இளைஞர்களில் பெரும்பாலானோர் வளைகுடா நாடுகளில் வேலை பார்த்தவர்களாகவும், அங்கிருந்து இந்தியாவிற்கு திரும்பி வந்தவர்களாகவும் இருக்கின்றனர். தென்னிந்தியாவைத் தொடர்ந்து ஜம்மு & காஷ்மீர், மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஐ.எஸ். அமைப்பின் தாக்கம் அதிகம் உள்ளது.
இந்தியாவில் ஐ.எஸ். அமைப்பு ஆட்களை சேர்ப்பதற்கு ஏதேனும் நிறுவனங்கள் உதவுகின்றனவா ?
நிச்சயமாக இல்லை. ஐ.எஸ். அமைப்பினர் இளைஞர்களை ஈர்த்து சிரியாவிற்கோ, ஈராக்கிற்கோ சொந்த வர வைக்க முயற்சி மேற்கொள்கின்றனர். இல்லையென்றால் தங்களின் சொந்த முயற்சியில் இந்தியாவில் தாக்குதல் நடத்த அந்த இளைஞர்களை ஊக்குவிக்கின்றனர். ஐ.எஸ் அமைப்பிற்கு ஆட்களை சேர்ப்பதில் மிக முக்கியமான அமைப்பாக இருக்கிறது முஜாஹிதீன் அமைப்பு. அதன் இந்திய தலைவராக முன்னாளில் பணியாற்றிய ஷஃபி அர்மர் இந்தியாவில் இருந்து ஆட்களை திரட்டும் பணிகளில் ஈடுபட்டார்.
இங்கு ஒருங்கிணைப்பாளர்கள் என்று யாரும் கிடையாது. ஐ.எஸ் என்ற பெயரால் தாமாக பலர் முன்வந்து தீவிரவாத தாக்குதல்களை நடத்துகின்றனர். உம்மத் இ முஹமதியா, ஹர்கத் உல் ஹர்ப்-எ-இஸ்லாம், அன்சர் உல் தவ்ஹீத் ஃபி பிலாத் அல் ஹிந்த், ஜூனூத் அல் கலிஃபா எ இந்த் என்ற பல பெயரில் அமைப்புகளை உருவாக்கி அதன் மூலம் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். ஒன்றை மற்றொன்றோடு இணைக்கும் மையப்புள்ளி என்று இங்கு ஒன்றும் கிடையாது.
தங்களின் கைப் பணத்தில் இருந்து, வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை வாங்கியே இவர்கள் தாக்குதல்களை நடத்துகின்றனர். தீக்குச்சியில் இருக்கும் பொட்டாசியம் க்ளோரேட் மற்றும் அம்மோனியம் நைட்ரேட் போன்ற வெடிபொருட்களை பயன்படுத்தியே இந்த தாக்குதல்களை நடத்துகின்றனர். வெடிகுண்டுகளை உருவாக்கும் முறையை ஆன்லைன் மூலமாக கற்றுக் கொள்கின்றனர்.