Ravik Bhattacharya, Atri Mitra, Joyprakash Das
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் திங்களன்று சுட்டிக் காட்டியபடி மேற்கு வங்கம் முழுவதும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – கிராமின் (கிராமப்புறம்) (PMAYG) பயனாளிகளின் சாத்தியமான பட்டியலில் தகுதியில்லாத தனிநபர்கள் இடம் பெறுவது ஆச்சரியமாக இருக்க வேண்டியதில்லை, குறிப்பாக இந்தச் செயல்முறையைக் கண்காணிக்கும் வேலையைச் செய்தவர்களுக்கு ஆச்சரியமில்லை.
ஏனெனில், சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு, இந்தத் திட்டத்திற்கு பொறுப்பான மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் செயலாளரான நாகேந்திரநாத் சின்ஹா, மாநில பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் செயலர் பி.உலகநாதனுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.
இதையும் படியுங்கள்: எக்ஸ்பிரஸ் விசாரணை – பகுதி 1: கிராமப்புற ஏழைகளுக்கான பிரதம மந்திரி வீடு; ஆனால் மேற்கு வங்கத்தில் நடப்பது என்ன?
அரசியல் மோதலால் எட்டு மாதங்களுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து திட்டத்தை மீண்டும் தொடங்க மத்திய அரசு முடிவு செய்த பின்னர் வந்த இந்த கடிதம், சில வார்த்தைகளைக் குறிப்பிடுகிறது.
செயல்படுத்தும் கட்டமைப்பை "கவனமாக" பின்பற்றுமாறு மாநில அரசுக்கு அழைப்பு விடுத்த நாகேந்திரநாத் சின்ஹா, "எந்தவொரு லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கும் எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மையின்" அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும், "லஞ்சம்/ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை சரிபார்க்கவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும்" மாவட்டங்களில் பொறியாளர்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழுக்கள் அமைக்கப்படுவதை உறுதிசெய்யுமாறும் அவர் மாநில அரசைக் கேட்டுக் கொண்டார்.
அந்தச் சரிபார்ப்பு, ஒருவேளை, தெற்கு 24 பர்கானாஸில் உள்ள பருய்பூர் தொகுதிக்கு உட்பட்ட மதர்ஹாட் கிராமப் பஞ்சாயத்தின் மஸ்ஜித்பாரா கிராமத்தில் ஜஹாங்கிர் ஷேக் மற்றும் அவரது உறவினர்கள் ஏழு பேர் உள்ளிட்டவர்களின் பெயர்கள் பயனாளிகளின் பட்டியலில் இருப்பது போன்ற ஒரு சூழ்நிலையைத் தவிர்க்க வேண்டி வரலாம்.
ஜஹாங்கீர் உள்ளூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவும் இருக்கிறார், அதே பகுதியில் வசிக்கும் அவரது உறவினர்களைப் போலவே அவர் ஒரு பக்கா (நிரந்தர கான்கிரீட்) வீட்டில் வசித்து வருகிறார். இந்தத் திட்டம் வறுமை, ஏழ்மை மற்றும் கட்சா அல்லது பாழடைந்த வீடு போன்ற நிலைமைகளைக் கொண்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும், ஏற்கனவே பக்கா வீடுகள் வைத்திருப்பவர்களுக்கு அல்ல. ஜஹாங்கீர் மற்றும் அவரது உறவினர்களின் விவகாரத்தில், பட்டியலில் அவர்கள் பெயர்கள் இடம்பெற்றிருப்பது பயனாளிகளை அடையாளம் காணும் செயல்முறையில் உள்ள தவறுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இவற்றைக் கருத்தில் கொள்ளுங்கள்:
* ஜஹாங்கீர் ஷேக்: அவர் கான்கிரீட் கூரையுடன் கூடிய பக்கா ஒற்றை மாடி வீட்டில் வசிக்கிறார். கூரையில் உள்ள கான்கிரீட் தூண்கள் மற்றொரு தளம் வர இருப்பதைக் குறிக்கிறது. அவரது வீட்டிற்குள், ஒரு சமையலறை தவிர குறைந்தது மூன்று அறைகள் உள்ளன.
“நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு PMAYG இன் கீழ் ஒரு வீட்டிற்கு விண்ணப்பித்தேன். அப்போது எனக்கு ஒரு கட்சா வீடு இருந்தது. பின்னர், எனது பொருளாதார நிலை மேம்பட்டு, இந்த வீட்டைக் கட்டினேன்...'' என ஜஹாங்கீர் கூறினார். அவரது உறவினர்கள் பயனாளிகள் பட்டியலில் இருப்பது பற்றி கேட்டதற்கு, ''இந்த கிராமத்தில் எனக்கு இவ்வளவு உறவினர்கள் இருந்தால், அது என் தவறு அல்ல. அவர்கள் நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என்றால், அவர்களின் பெயர்கள் நீக்கப்படும். ஆனால் அவர்களின் தேவைகள் உண்மையானவை,” என்று ஜஹாங்கீர் கூறினார்.
இது களச் சூழலுடன் பொருந்தவில்லை.
* ரோஷன் ஷேக், ஜஹாங்கிரின் சகோதரர்: அவரது இரண்டு மாடி கான்கிரீட் வீடு ஜஹாங்கிரின் வீட்டிலிருந்து இரண்டு நிமிட நடை தூரத்தில் உள்ளது. இதுகுறித்து ரோஷனின் மனைவி ரோஷனரா பீபி கூறுகையில், ”நாங்கள் இங்கு நிரந்தரமாக தங்க மாட்டோம். கிராமத்தில் எங்களுக்கு ஒரு நிலம் மற்றும் ஒரு சிறிய அறை உள்ளது. PMAYG பணம் கிடைத்தால் அங்கு முறையான வீடு கட்டிக் கொள்வோம்” என்றார்.
* ஃபிரோஸ் ஷேக் & சிராஜ் ஷேக், ஜஹாங்கிரின் உறவினர்கள்: ரோஷனின் வீட்டின் முன்புறம் மற்றும் பின்புறம் நீட்டிப்புகளுடன் கூடிய இரண்டு மாடி பக்கா வீட்டில் அவர்கள் வசித்து வருகிறார்கள். எதிரில் ஒரு மாட்டு கொட்டகை உள்ளது. ஃபிரோஸின் சகோதரி முர்ஷிதா காதுன், “எங்களுக்கு ஒரு வீடு இருப்பதை நீங்கள் பார்க்கலாம். ஆனால் மழை பெய்தால் கூரையில் இருந்து தண்ணீர் கசிகிறது” என்று கூறினார்.
* யாசின் ஷேக், ஜஹாங்கிரின் சகோதரர்: ஃபிரோஸ் மற்றும் சிராஜின் வீட்டை ஒட்டி, கான்கிரீட் சுவர்கள் மற்றும் ஓடு வேயப்பட்ட கூரையுடன் கூடிய யாசின் ஷேக்கின் குடியிருப்பு உள்ளது. வலதுபுறத்தில் அறைகளின் வரிசைகளும் இடதுபுறத்தில் குளியலறைகளும் நடுவில் ஒரு முற்றத்தால் பிரிக்கப்பட்டுள்ளன.
"நான் 2018 இல் திட்டத்திற்கு விண்ணப்பித்தேன். கடந்த ஆண்டு டிசம்பரில், அவர்கள் (உள்ளூர் அதிகாரிகள்) எனது வீட்டை ஆய்வு செய்தனர். எனக்கு சரியான வீடு இல்லை. நான் இந்த வீட்டை இன்னொரு சகோதரனுடன் பகிர்ந்து கொள்கிறேன். நான் ஏன் PMAYG பணத்தை மறுக்க வேண்டும்? என்று யாசின் கேட்டார்.
* சுபியா பீபி, ஜஹாங்கிரின் சகோதரி: அவரது வீட்டில் கான்கிரீட் சுவர்கள் மற்றும் இரண்டு அறைகள் கொண்ட ஓடு வேயப்பட்ட கூரை மற்றும் ஒரு தனி மூடப்பட்ட சமையலறை பகுதி இருந்தது. “நான் ஒரு விதவை. நீண்ட நாட்களாக வீடு கிடைக்க முயற்சி செய்து வருகிறேன். எனது நான்கு மகன்களும் குறைந்த சம்பளத்தில் வேலை செய்கிறார்கள், எனக்கு சொந்தமாக வருமானம் இல்லை. என்னிடம் சில பசுக்கள் மட்டுமே உள்ளன,'' என்று சுபியா பிபீ கூறினார்.
* ஜஹாங்கிரின் சகோதரி சுபியாவின் மைத்துனர் சல்மான் பாஜிகர்: வரிசையாக அறைகள், கான்கிரீட் சுவர்கள் மற்றும் ஓடு வேயப்பட்ட கூரையுடன் கூடிய பக்கா வீட்டில் சல்மான் வசித்து வருகிறார். “நான் என் சகோதரர்களுடன் என் அம்மா வீட்டில் தங்கி ஒரு ஆடைக் கடையில் வேலை செய்கிறேன். எனக்கு PMAYG பணம் கிடைத்தால், எனக்கு சொந்தமாக ஒரு தனி வீடு கிடைக்கும்” என்று சல்மான் கூறினார்.
* அல்தாஃப் அன்சாரி, ஜஹாங்கீரின் மைத்துனர்: அல்தாஃப் ஜஹாங்கிரின் வீட்டிற்கு அருகில் கான்கிரீட் கூரையுடன் கூடிய இரண்டு மாடி கான்கிரீட் கட்டிடத்தில் வசித்து வருகிறார். எதிரே கூடுதல் நிலம், சுற்றிலும் கான்கிரீட் சுவர் உள்ளது. தனது மாமனார் தனக்கு நிலத்தை கொடுத்ததாக அல்தாப் கூறினார். “நான் இங்கே வாடகைக்கு தங்கியிருக்கிறேன். எனக்கு வீடு இல்லை,'' என்று அவர் கூறினார்.
இந்த விவகாரங்கள் பற்றி கேட்டதற்கு, பருய்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) சவுரவ் மாஜி கூறினார்: “ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களால் கணக்கெடுப்பு செய்யப்பட்டது… தகுதியானவர்களின் பெயர்கள் கிராம சபையால் அங்கீகரிக்கப்பட்டது. பின்னர், பொதுமக்களுக்கு புகார் பெட்டியை வைத்தோம். புகார்களை பெற்று நடவடிக்கை எடுத்துள்ளோம். சில சரியானவை, சில தவறான புகார்கள். இந்தத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பட்டியலில் இருந்து சுமார் 1,264 பெயர்கள் நிராகரிக்கப்பட்டன. நிராகரிப்பு செயல்முறை இன்னும் உள்ளது. பக்கா வீடு உள்ள எவரும் பயனாளிகளாக இருக்க அனுமதிக்கப்படுவதில்லை,” என்று கூறினார்.
தெளிவாக, பட்டியல்கள் செயல்பாட்டில் உள்ளன, மேலும் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படும். கடந்த நிதியாண்டில் திட்டத்தின் பெயரில் ஏற்பட்ட மோதலால் முன்னேற்றம் தடைபட்டது, கிராமப்புற திட்டத்தை "பங்களார் ஆவாஸ் யோஜனா" அல்லது "பங்களார் பாரி" என்றும் அழைக்க அரசு விரும்பியது.
2022 முதல் 2023 வரை மாநிலத்தில் இத்திட்டத்தின் கீழ் 11,36,488 வீடுகள் கட்ட ரூ. 8,200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அரசு மாநிலத்திற்கு எழுதிய கடிதத்தில் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஆனால் மாநில பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சர் பிரதீப் மஜூம்டர் ”இன்னும் ஒரு பைசா கூட பெறவில்லை" என்று இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார், மேலும் இந்த தடை "அரசியல் பழிவாங்கலைத் தவிர வேறில்லை" என்றும் கூறினார்.
இருப்பினும், டிசம்பர் மாதத்தில், மத்திய அரசின் கடிதம் வந்த சில வாரங்களுக்குப் பிறகு, தகுதியற்ற நபர்கள் சாத்தியமான பயனாளிகளின் பட்டியலில் இடம்பெறுவதற்கு எதிராக வடக்கு 24 பர்கானாஸ், தெற்கு 24 பர்கானாஸ், முர்ஷிதாபாத் மற்றும் மால்டா போன்ற பல மாவட்டங்களில் போராட்டங்கள் வெடித்தபோதும், திட்டத்திற்கான ஆய்வு செயல்முறையை அரசு தொடங்கியது.
உதாரணமாக, முர்ஷிதாபாத்தில், களத்தில் ஏற்பட்ட அதிருப்தியால் அதிர்ச்சியடைந்து, திரிணாமுல் காங்கிரஸின் 17 பஞ்சாயத்து உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர், இதனால் உறுப்பினர்கள் இழப்பை தடுக்க கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று மற்றும் ராஜினாமாக்களை நிராகரித்தது.
ஜனவரி 5 அன்று, ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் இரண்டு குழுக்கள் பூர்பா மெதினிபூர் மற்றும் மால்டா மாவட்டங்களுக்குச் சென்று, புதிய அரசியல் வார்த்தைப் போரைத் தூண்டின. தி இந்தியன் எக்ஸ்பிரஸில் இருந்து கருத்து கேட்கும் குறுஞ்செய்திகள் மற்றும் அழைப்புகளுக்கு ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் உலகநாதன் பதிலளிக்கவில்லை.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குணால் கோஷ் கூறுகையில், மாநில அரசு ஊழலை பொறுத்துக்கொள்ளாது என்று கூறினார். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் விசாரணை நடத்திய குறிப்பிட்ட விவகாரங்களைப் பற்றி கூறியபோது, “தகுதியில்லாத யாரேனும் பட்டியலில் சேர்க்கப்பட்டால், கணக்கெடுப்புக்குப் பிறகு பெயர் நீக்கப்படும். ஆனால் நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பே பலர் PMAYக்கு விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், பணம் சம்பாதித்து வீடுகளை கட்டியிருக்கலாம். அது விதிமீறலோ ஊழலோ அல்ல,” என்று குணால் கோஷ் கூறினார்.
பா.ஜ.க மற்றும் சி.பி.ஐ(எம்) தலைவர்கள், ஆளும் கட்சி பணத்தை கொள்ளையடிப்பதாக குற்றம் சாட்டினர்.
“மோசமான சூழ்நிலையில் உண்மையிலேயே வாழ்பவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஒன்று திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினராக இருக்க வேண்டும் அல்லது ரூ.20,000-25,000 கொடுக்க வேண்டும். எனது பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், பட்டியலில் இருந்து 450 பெயர்கள் குறைக்கப்பட்டுள்ளன. அந்த பட்டியலை டெல்லிக்கு அனுப்பியுள்ளோம். விசாரணை தொடங்கியுள்ளது” என்று பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுசாந்தா கோஷ் கூறியதாவது: ஒரு நல்ல பதவியைப் பெற, திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் பணம் கொடுக்க வேண்டும். எனவே பதவியை வாங்கிய பின், அந்த பணத்தை மீட்க ஊழலில் ஈடுபடுகிறார்கள்” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.