நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெள்ளிக்கிழமை (ஜூலை 29) துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மக்களவை எம்பி., காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது எம்.பி.க்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோர் தெரிவித்த கருத்துகளை நீக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அந்தக் கடிதத்தில் மாநிலங்களவை உறுப்பினர்கள் மக்களவை உறுப்பினர் மீது விமர்சன கருத்துக்கள் தெரிவிக்க அனுமதியில்லை. இந்தப் புனிதமான ஷரத்துக்கள் மீறப்பட்டுள்ளதால், இதற்காக நிர்மலா சீதாராமன் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து, '1987 ஏப்ரல் 5 வெங்கட் ராமன் மாநிலங்களவை தலைவராக இருந்தபோது கொண்டுவந்த சட்டத்திற்கு இது எதிராக உள்ளது. பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அவை மற்றும் அதன் உறுப்பினர்களின் இறையாண்மையின் புனிதத்தன்மையை வலியுறுத்தும் வகையில் இந்த நடைமுறையை நான் குறிப்பிட்டுள்ளேன்.
எனவே மாநிலங்களவையில் மக்களவை சபை உறுப்பினர் குறித்து குறிப்பிடுவதும் கருத்து தெரிவிப்பதும் காலங்காலமாக கடைபிடிக்கப்பட்ட மரபுகளை முற்றிலும் மீறுவதாகும். இந்த சபையின் தலைவர் என்ற முறையில், நன்கு நிறுவப்பட்ட பாராளுமன்ற மரபுகள் மற்றும் நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை நீங்கள் பாராட்ட வேண்டும் என்று குறிப்பிட தேவையில்லை' எனத் தெரிவித்திருந்தார்.
முன்னதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி ராஷ்ட்ர பத்தினி என்று கூறிய பேச்சு பெரும் சர்ச்சையானது.
இந்தக் கருத்துகளுக்காக ஆதிர் ரஞ்சன் தற்போது மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பான விளக்கத்தில் தாம் அந்த வார்த்தையை வேண்டும்யென்றே வெளியிடவில்லை எனவும் வார்த்தை தவறி வந்துவிட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.