Advertisment

பீகார் தேர்தல் மீது கண்; மகாதலித் விவகாரத்தை சரி செய்யும் முயற்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி

பீகார் தேர்தல் மீது கண்; மகாதலித் விவகாரத்தில் கடும் விமர்சனங்களை முன் வைக்கும் இந்தியா கூட்டணி; பிரச்சனையை சரி செய்யும் முயற்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி

author-image
WebDesk
New Update
bihar maha dalit

பீகார், நவாடா மாவட்டத்தில், வியாழன், செப். 19, 2024 இல் தலித் சமூகத்தைச் சேர்ந்த பல வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. (பி.டி.ஐ புகைப்படம்)

Vikas Pathak , Santosh Singh

Advertisment

பீகாரில் நவாடா மாவட்டத்தில் உள்ள மஞ்சி தோலாவில் மகாதலித்துகளின் குறைந்தபட்சம் 21 ஓலை வீடுகளை எரித்த விவகாரத்தில் ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி புதன்கிழமை ஆளும் கட்சி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் அதிரடி நடவடிக்கையில் இறங்கி முக்கிய குற்றவாளியாகக் கூறப்படும் நந்து பாஸ்வான் உட்பட பல குற்றவாளிகளை கைது செய்தது.

ஆங்கிலத்தில் படிக்க: Eye on Bihar polls, NDA mounts damage control over Mahadalit home burning as INDIA raises storm

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது அரசியல் சேதத்தைக் கட்டுப்படுத்த, இந்தியா கூட்டணிக்கு பதிலடி கொடுத்து வருகிறது. மகாதலித் குடியிருப்பில் உள்ள அரசு நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் குற்றம் சாட்டப்பட்டவர்களால் வீடுகள் எரிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

பாதிக்கப்பட்டவர்கள் மகாதலித்களில் ரவிதாஸ் மற்றும் முசாஹர் குழுக்களைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்பட்டாலும், இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் பாஸ்வான் (தலித்) சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

பீகாரில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜே.டி(யு) தலைவர்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம், இந்த சம்பவம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு "சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை" என்றும், இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன் நிதிஷ் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது என்றும் கூறினார்.

“தன்னிச்சையான குற்றங்களை எங்கும் கட்டுப்படுத்த வழி இல்லை. இருப்பினும், குற்றம் நடந்தவுடன், ஒரு அரசாங்கத்தை மற்றொன்றிலிருந்து வேறுபடுத்துவது காவல்துறையின் நடவடிக்கையாகும். ஏற்கனவே கைதுகள் செய்யப்பட்டுள்ளன, இதில் சம்பந்தப்பட்ட யாரையும் காப்பாற்ற முதல்வர் நிதிஷ்குமார் முயலவில்லை. அசோக் மஹ்தோ நிதீஷைப் போல் குர்மியாக இருந்தபோதிலும், நிதிஷ் அரசாங்கம்தான் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளியது,” என்று பெயர் வெளியிட விரும்பாத ஜே.டி(யு) மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

லாலு பிரசாத் தலைமையிலான ஆர்.ஜே.டி ஆட்சியில் இருந்த நாட்களில் "ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள்" பரவலாக இருந்ததாக அந்த தலைவர் குற்றம் சாட்டினார், ரன்வீர் சேனா மற்றும் தீவிர இடது மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம் (MCC) போன்ற தனியார் படைகள் படுகொலைகளை செய்தன. "நிதிஷ் ஆட்சியின் கீழ் இவை அனைத்தும் வரலாறானது," என்று அந்த தலைவர் கூறினார்.

ஜே.டி (யு) தலைமை செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார் தி இந்தியா எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியதாவது: “நவாடா சம்பவம் பட்டியல் சாதியினரான மஞ்சிக்கும் (முஷாஹர்) பாஸ்வானுக்கும் இடையேயான நிலத்தகராறு. நவாடா போலீசார் விரைந்து செயல்பட்டு 15 பேரை கைது செய்தனர், அவர்களில் பெரும்பாலோர் பாஸ்வான் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இது சாதி வன்கொடுமை வழக்கு அல்ல. ஆர்.ஜே.டி சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் அரசியல் செய்ய முயற்சித்து வருகிறது.”

மற்றொரு ஜே.டி(யு) தலைவர் கூறுகையில், “பீகாரில் பெரும்பாலான தகராறுகள் நிலம் தொடர்பானவை. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் நிலத்தை டிஜிட்டல் மயமாக்கும் பணி நடந்து வருகிறது. இது நிலப் பதிவேடுகளில் தெளிவைக் கொண்டுவருவதோடு, இதுபோன்ற சர்ச்சைகள் படிப்படியாக வரலாறாக மாறும்,” என்றார்.

போலீஸ் நடவடிக்கை "தெரியும் வேகத்தில்" இருப்பதால், பிரச்சனை விரைவில் அமைதியாகும் என்று பீகார் பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “இது தலித் இனங்களுக்கு இடையிலான மோதல் என்பதும் இந்த வன்முறையானது சமூக இயல்புடையது மற்றும் நிறுவன செயலிழப்பின் ஒரு பகுதி அல்ல என்பதைக் காட்டுகிறது. சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்த நிதிஷ் குமாரின் பதிவு நன்றாக உள்ளது, ஆர்.ஜே.டி.,யின் பிரச்சாரம் இருந்தபோதிலும் மக்கள் அதை சரியான கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று பா.ஜ.க அலுவலக அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.

எல்.ஜே.பி (ராம் விலாஸ்) தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான், பாஸ்வான்கள் அவரது கட்சியின் முக்கிய ஆதரவுத் தளமாக இருந்தாலும், இந்தச் சம்பவத்தைக் கண்டனம் செய்தார். பாதிக்கப்பட்ட மகாதலித் குடியேற்றத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திப்பேன் என்றார்.

“நவாடாவில் குண்டர்கள் மற்றும் குற்றவாளிகளால் மகாதலித் தோலாவின் சுமார் 21 வீடுகள் எரிக்கப்பட்ட செய்தி மிகவும் வெட்கக்கேடானது மற்றும் கண்டிக்கத்தக்கது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முக்கிய கூட்டாளியாக இருப்பதால், இதுபோன்ற குற்றவாளிகளை விரைவில் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிக்க அனைத்து வழிவகைகளையும் செய்ய வேண்டும் என்றும் முதல்வர் நிதிஷ் குமார் ஜியிடம் கேட்டுக்கொள்கிறேன். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவத்தை யாரும் செய்யத் துணியாமல் இருக்க, இந்த விவகாரம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நானும் எனது கட்சியும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். நான் விரைவில் சம்பவ இடத்திற்குச் சென்று குடும்பத்தினரைச் சந்திப்பேன்,” என்று சிராக் பாஸ்வான் கூறினார்.

மத்திய மந்திரியும் மற்றொரு தேசிய ஜனநாயக கூட்டணி தலைவருமான ஜிதன் ராம் மஞ்சி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் செப்டம்பர் 22 ஆம் தேதி நவாடாவுக்குச் செல்வதாகத் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை மீண்டும் கட்டக் கோருவாரா என்ற கேள்விக்கு, நிச்சயமாக என்று பதிலளித்த மஞ்சி, பீகார் அரசாங்கம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஏற்கனவே நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டது என்றும் கூறினார். மாநிலத்தில் மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) கட்சியின் முக்கிய வாக்குத் தளமாக முசாஹர்கள் உள்ளனர்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய பிரச்சனையின் அரசியல் வீழ்ச்சியில், ஆர்.ஜே.டி கட்சி இந்த சம்பவம் தொடர்பாக நிதிஷ் அரசாங்கத்தை குறிவைத்து, அதன் தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் “நல்லாட்சி” பற்றி பிரதமர் நரேந்திர மோடி என்ன சொல்வார்? என்று கேள்வி எழுப்பினார். பீகாரின் நல்லாட்சியில் "இதெல்லாம் கடவுளின் விருப்பப்படி நடக்கிறது என்றும், பெரிய வாய் பேசும் சக்தி வாய்ந்த தலைவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்றும் சொல்லுங்கள்" என்று தேஜஸ்வி கூறினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக தனது விமர்சனங்களை முன்வைத்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தச் சம்பவத்தை "பீகாரில் பகுஜன்களுக்கு எதிரான அநீதியின் பயங்கரமான படம்" என்றும், "பிரதமரின் மௌனம் இந்த பெரிய சதி திட்டத்திற்கு ஒப்புதல் முத்திரை” என்றும் குற்றம் சாட்டினார்.

இந்தியில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “இத்தகைய அராஜகவாதக் கூறுபாடுகள் பா.ஜ.க மற்றும் அதன் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைமையின் கீழ் தஞ்சம் அடைகின்றன – அவர்கள் இந்தியாவின் பகுஜன்களை அச்சுறுத்தி ஒடுக்குகிறார்கள், அதனால் பகுஜன்கள் தங்கள் சமூக மற்றும் அரசியலமைப்பு உரிமைகளைக் கூட கோர முடியாது” என்று ராகுல் காந்தி கூறினார்.

லாலு பிரசாத், பீகாரில் சட்டம்-ஒழுங்கு இல்லை என்றும், நிதிஷ் தோல்வியடைந்துவிட்டார் என்றும் குற்றம் சாட்டி, தேசிய ஜனநாயக கூட்டணியை விமர்சித்தார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Bjp India Congress Bihar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment