நடப்பாண்டில் வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களுக்கு மத்திய அமைச்சர்களையும் மூத்த கட்சித் தலைவர்களையும் பாரதிய ஜனதா பொறுப்பாளர்களாக நியமித்துள்ளது.
அதன்படி, ராஜஸ்தானில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை பாஜக தலைமை பொறுப்பாளராக நியமித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாமரை கட்சியில் இணைந்த குஜராத் முன்னாள் துணை முதல்வர் நிதின் படேல் மற்றும் ஹரியானா முன்னாள் காங்கிரஸ் தலைவர் குல்தீப் பிஷ்னோய் ஆகியோர் இணை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கட்சிக்கான தேர்தல் பிரச்சாரத்தை அவர்கள் வழிநடத்தி ஒருங்கிணைப்பார்கள்.
சத்தீஸ்கரில், கட்சியின் மூத்த தலைவர் ஓம் பிரகாஷ் மாத்தூர் பொறுப்பாளராக இருப்பார், அதே நேரத்தில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநிலத் தேர்தலுக்கான தயாரிப்புகளில் அவருக்கு உதவுவார்.
மத்தியப் பிரதேசத் தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான பூபேந்தர் யாதவ் இருப்பார், அவருக்கு உதவியாக அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இருப்பார்.
தெற்கு தெலுங்கானாவில், மாற்று சக்தியாக மாறுவதற்கு கட்சி தீவிரம் காட்டி வரும் நிலையில், பாஜக மூத்த தலைவர் பிரகாஷ் ஜவடேகர் பொறுப்பிலும், கட்சியின் பொதுச் செயலாளர் சுனில் பன்சால் தேர்தல் ஏற்பாடுகளுக்கு இணை பொறுப்பிலும் இருப்பார்.
மாநிலங்களின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படும் தலைவர்கள், வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதிலும், பிரச்சார வியூகம் தயாரித்தல் மற்றும் செயல்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுவார்கள்.
2024 மக்களவைத் தேர்தல் மற்றும் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள மாநிலத் தேர்தல்களுக்கு முன்னதாக அதன் தயாரிப்புகளுக்கான உத்திகளை இறுதி செய்ய கட்சியின் உயர்மட்டத் தலைமை தொடர் கூட்டங்கள் நடத்த உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சித் தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோரும் இதை கண்காணித்துவருகின்றனர்.
தேர்தலுக்கு முன்னதாக கட்சியையும் அரசாங்கத்தையும் மறுசீரமைப்பதற்கும் இந்த சந்திப்புகள் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“